
அந்த காட்டில்
நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சாத்தப்பட்டது
அவன் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கு அவனைத் தவிர வேறு யாருமில்லை, ஒரே இருட்டு. சற்று தூரத்தில் ஒரு பழைய பங்களா அவனுக்குத் தெரிந்தது.
அதன் ஜன்னல் வழியே ஒரு விளக்கின் ஒளி படர்ந்து சற்று வெளிச்சம் தந்தது.
அங்கு யார் உள்ளார்கள் என்ன நடக்கிறது, என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தான். மெதுவாக அவன் அந்த இடத்தை நோக்கி நடந்தான். அந்த வீட்டின் கதவை அடைந்தான். ஒரே அமைதி கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது.
அவன் மெதுவாக கதவைத் தட்டினான். யாராவது வருவார்கள் என்று பொறுமையாகக் காத்திருந்தான். உள்ளிருந்து பதில் ஏதுமில்லை ,மீண்டும் அவன் சற்று வேகமாகத் தட்டினான் இந்த முறை கதவு மெதுவாகத் திறந்தது. ஆனால் அங்கு யாரையும் காணவில்லை. அவன் மெதுவாக உள்ளே செல்ல அந்த கைவிடப்பட்ட பழைய வீட்டின் ஒரு குடியிருப்பாளரை கண்டான், அது ஒரு சிலந்தி .
அங்கிருந்த சிலந்திவலைகளை வைத்துப் பார்த்தால் பல வருடங்களாக அங்கு யாரும் நடமாடியிருக்க முடியாது பிறகு எப்படி அந்த விளக்கு எரிகிறது சற்று எச்சரிக்கையுடன் யோசித்தான்…
அப்போது தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது…..
கதை ஆசிரியரின் பேனாவில் மை தீர்ந்தது. பிறகு இக்கதை முற்றுபெறாமல் போனது.
திரன்.