அம்மா

” நான் கடவுள் “
கருவறையில்
பத்து மாதம் இருந்ததால்

கடவுளைப் படைத்தவர் யார் ?
” அம்மா “

கடவுளுக்கும் மேலானவள்
அன்பே கடவுள் என்றாலும்
அன்பின் பிறப்பிடம்
அன்பு அள்ள அள்ளக் குறையாத
அட்சய பாத்திரம்
” அம்மா “

பெரு வெடிப்பு

பெரு வெடிப்பு ( Big Bang )

அண்டம் தோன்றியதை
விளக்க முயல்கிறது
வியக்க வைக்கிறது

மிகச் சிறிய அடர்த்தியான
தீப்பிழம்பு ஒன்று எரிந்தது
அதனுள் அனைத்தும் இருந்தது
திடீரென அது விரியத் தொடங்கியது
இப்பெரிய அண்டம் தோன்றியது

ஏன், எதனால்
அது விரியத் தொடங்கியது ?
தெரியவில்லை
மனித அறிவுக்கு அது
இன்னும் புரியவில்லை
இதுவே பெரு வெடிப்பு

வெடித்த உடனே
காலமும் வெளியும் தோன்றியது
அவ்வெளி விரிந்துக்கொண்டே செல்கிறது
அது இன்றும் தொடர்கிறது

முடிவு இல்லா தொடக்கம் ஏது ?
வெளி விரிவது
ஒரு நாள் நிற்கும்
வெளி சுருங்கத் தொடங்கும்
ஒரு மிகச் சிறிய வட்டத்துக்குள்
மீண்டும் எல்லாம் அடங்கும்.

வீழ்வதும் எழுவதும் தானே
இயற்கையின் விதி

எனது மனது விரிந்ததுவிண் அளவு.

புத்தகத்தைத் திறந்து
அதன் பக்கங்களைப் படித்து
எல்லைகள் மறந்து
வெகுதூரம் பறந்து
பலரைச் சந்தித்து
அவர்களின் அனுபவங்களைப் பெற்றுத்
திரும்பி வந்தேன்
தலை நிமிர்ந்து நின்றேன்

கற்றது துளி மண் அளவு
இருந்தும் எனது மனது விரிந்தது
விண் அளவு.

ஏது தாழ்வு ?

தீயோடு போகும் வரை
தன்நம்பிக்கை தான்
நமக்கு இறை

முயற்சி செய் பல முறை
வெற்றி உன்னை
வந்தடையும் வரை

உன் மனது ஆகட்டும்
நல்ல எண்ணங்களின் சிறை
அவ்வெண்ணங்கள்
ஆயுள் தண்டனை பெற்று
அங்கேயே இருக்கட்டும்
இறுதி மூச்சு வரை

தடைகளை மிதி
விடாமுயற்சியே உன் வழி
தன்னம்பிக்கை உன் மொழி
விதிவிலக்கு கேட்கும் உன் தலைவிதி

மனம் போல் வாழ்வு, அதில்
நம்பிக்கை நிறைந்திருந்தால்
ஏது தாழ்வு ?

இதோ என் கண்டுபிடிப்பு

இதோ என் கண்டுபிடிப்பு
ஒரு பட்டனைத் தட்டினால் போதும்

துன்பம் கலைந்து இன்பம் மலரும்
வறுமை ஒழிந்து செழுமை ஓங்கும்
வலி மறைந்து ஒளி பிறக்கும்
சோகம் கரைந்து மகிழ்ச்சி பொங்கும்
பயம் நீங்கி நம்பிக்கை வளரும்
தோல்வி தோற்று வெற்றி தோன்றும்
அறியாமை அகன்று அறிவொளி வீசும்

பட்டனைத் தட்டப் போனேன்
வந்துவிட்டார்
தடுத்துவிட்டார்
காப்புரிமை என்னுடையது என்று
கடவுள்

பிறகு என்ன ?
எழுப்பொலி கேட்க
என் கனவு கலைந்தது
பொழுது விடிந்தது.