இரண்டாவது இன்னிங்ஸ், 25 நாட் அவுட். ( கதை )

பாகம் – 1

என் பெயர் விக்னேஷ் ஜெயச்சந்திரன். ஆனால் பெரும்பாலானோருக்கு நான் VJ தான். நான் ஒரு சென்னை வாசி.

பிழைப்புக்காகச் சென்னை வந்த என் தந்தை  எப்படியோ தட்டுத்தடுமாறி தன் சொந்த முயற்சியால் அரசாங்க உத்தியோகம் பெற்று , அவருடைய சக ஊழியரான என் அம்மாவை மணந்து என்னை உருவாக்கி , அவர்கள் இருவருக்கும் கிடைக்காத கல்வியை எனக்குக் கொடுத்து , என்னை  ஒரு இன்ஜினியர் ஆக்கி ஒரு நல்ல வேலையில் அமர்த்திப் பார்த்துவிட்டு மிகச் சந்தோஷமாகத் தனது இறுதி நாட்களைக் கழித்து மரணத்தை எதிர்கொண்டார்.

அவர் இறந்த ஒரு வாரத்திற்குள் நான் என் அன்புத் தாயையும் இழக்க நேர்ந்தது.

அப்போது எனக்கு வயது 23.

அவர்கள் இல்லாத வாழ்க்கை எனக்கு ஒரு வகையான வெறுமையைத் தந்தது.

என் வாழ்க்கையில் மிக இருண்ட காலம் அது.

அப்போதெல்லாம் எனக்கு நிறையத் தனிமை இருந்தது. அது ஒரு வகையான சுகத்தையும் தந்தது. நிறையப் புத்தகங்கள் படிப்பேன் அல்லது வெகுதூரம் தனியாக நடந்து சென்று சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்புவேன்.

அவ்வாறாக இரு வருடம் ஓடியது. இருண்டு கிடந்த என் வாழ்க்கை எவ்வாறு வெளிச்சம் பெற்றுப் பிரகாசித்தது. அதைப்பற்றி நிச்சயம் உங்களுக்குக் கூற வேண்டும்.

அது எல்லாம் கீதா என் வாழ்வில் வந்த பிறகு தான்………

பாகம் – 2

அப்படித்தான் ஒருமுறை நான் “தளபதி” திரைப்படத்தைப் பார்க்க வழக்கம்போல் வெகுதூரம் நடந்து ஒரு  தியேட்டருக்குச் சென்றேன். நான் அத்தியேட்டரை  அடைந்தபோது மதியம் மூன்று மணி. மூன்றரை மணிக்கு ஷோ. அது ரஜினி  சார்  படம் என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

Ticket counter க்கு சென்று நான் டிக்கெட்டுக்காக நிற்க எனக்கு முன்னாடி இருந்தவர் வரை டிக்கெட்டை கொடுத்துவிட்டு கதவை மூடிவிட்டார்கள், ஹவுஸ்ஃபுல் என்று.

டிக்கட் கிடைக்காதது  வருத்தம்தான் இருந்தும் அன்று சனிக்கிழமை என்பதால் அங்கேயே மாலை 6 மணிவரை இருந்து ஈவினிங் ஷோவை பார்ப்பது என்று முடிவு செய்தேன்

அப்போதுதான் அந்த இனிமையான குரல் எனக்குக் கேட்டது

“ஒரு டிக்கெட் இருக்கு வேணுமா ?”

நான் திரும்பிப் பார்க்க அங்கு ஒரு அழகு தேவதை. அவளிடம்  ஏதோ ஒன்று என்னைக் கவர்ந்தது
என்னையறியாமல் ஒரு சந்தோஷம் இவள்தான் என்னவள் என்று என் மனம் கூறியது.

” என் தோழி வருவதாக இருந்தது கடைசி நேரத்தில் அவளால் வர முடியவில்லை, அவள் டிக்கெட் இருக்கு உங்களுக்கு வேணுமா ? “என்று அவள் திரும்பவும் கேட்க

என் வாய் வேண்டும் என்று சொல்வதற்குள் என் தலை “ஆம் “
என்று அசைந்தது.

“டிக்கெட் விலை 15 ரூபாய் நீங்கள் அதைக் கொடுத்தால் போதும்”. என்றாள் கனிவாக

உடனே பணத்தைக் கொடுத்தேன் டிக்கெட்  கைமாறியது

எனக்கு ஒரே சந்தோஷம், தெரியும் எப்படியும் தியேட்டருக்குள் அவளருகில் உட்கார்ந்து தான் படத்தைப் பார்க்கப் போகிறேன் என்று. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரொம்ப டீசண்டா ஒரு thanks மட்டும் சொல்லி அவளிடமிருந்து விடைபெற்றேன்.

நேரா ரெஸ்ட் ரூமுக்கு போய்க் கை, மூஞ்சியை நல்லா கழுவிட்டு.  தலையைச் சீவி, பிறகு ரஜினி சார் மாதிரி லைட்டாகக் கலைச்சி விட்டுட்டு என்னையே நான் கண்ணாடியில் பலமுறை பார்த்து நான் திருப்தி அடைந்த பிறகு ,அங்குள்ள கடையில போய் ஒரு சென்ட் பாட்டில் வாங்கி  சட்டையெல்லாம் அடிச்சிட்டு சரியா படம் ஆரம்பிக்கிறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி நல்ல பிள்ளைபோல் என் சீட்டைத் தேடி அவள் அருகில் போய் உட்கார்ந்தேன்.

அவள் என்னைப் பார்க்காமல் அந்தத் தியேட்டர் ஸ்கிரீனையே பார்த்துகிட்டு இருந்தாள்.

எனக்கு அவளிடம் ஏதாவது பேச வேண்டும் போல் தோன்றியது சற்றும் யோசிக்காமல் “உங்களுக்கு ரஜினி சார் பிடிக்குமா ? “என்று  கேட்டேன்

“உம்” என்றாள் என்னைத் திரும்பிப் பார்க்காமல்.

இப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் 
நட்பு. பிறகு அது காதலாக மாறி மிக விரைவில் திருமணத்தில் முடிந்தது.
அதன்பின் என்ன? மிக மிகச் சந்தோஷமான நாட்கள். அவளுடைய அன்பும் நல்ல பண்பும் எனக்கு ஒரு புதிய உற்சாகத்தைத் தந்தது. தனிமை மறைந்துபோனது இனிமை கடல் அலைகள்போல் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. 

“என்னை ஏன் உனக்கு பிடிச்சது?” என்று நான் பலமுறை கீதாவிடம் கேட்டதுண்டு

“உங்களுக்கு என்னை ஏன் பிடிச்சது?” என்று திரும்பிக் கேட்பாள்

எனக்கும் சரியான விடை தெரியாது இருந்தும் அப்ப என்ன தோணுதோ அதைச் சொல்லுவேன்.

பிறகு சில வருடங்கள் கழித்து ஒரு முறை அவள் கூறினாள் நீங்க  முதல் முதல்ல

“ரஜினி சார் உங்களுக்குப் பிடிக்குமா?” என்று   ரொம்ப மரியாதையா கேட்டீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சது என்றாள்.

எல்லாம் நல்லபடியாக நடந்தது. எங்களுக்கு ஒரு குழந்தை இல்லை என்பது மட்டும் தான் குறை மற்றபடி எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் தான்.

உத்தியோகத்தில் எனக்குப் பல பிரமோஷன் கள், வீடு வாங்கினேன், கார் வாங்கினேன் நல்லா சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

இப்படியே 15 ஆண்டுக் காலங்கள் ஓடிய பிறகு மறுபடியும் ஒரு இருண்ட காலம்.

பாகம் – 3

ஒரு நாள் சாதாரண காய்ச்சல் என்று நினைத்துக் கீதாவை டாக்டரிடம் காட்டப் போக, அவளுக்குப் புற்றுநோய் நோய் இருப்பது தெரியவந்தது. உடைந்து போனேன் நான்.

பல கடவுள், பல ஆஸ்பத்திரிகள், பல டாக்டர்கள்  என்று எங்கள் வாழ்க்கையே மாறிப்போச்சு. நல்ல வேளை என்னிடம் போதிய பணம் இருந்ததால் அவளுக்கு வேண்டிய டிரீட்மென்ட்டை கொடுத்து, எப்படியோ ஒரு பத்தாண்டு காலம் வாழ வைத்து விட்டேன். பிறகு அவள் ஆயுள் முடிந்தது.

இறப்பதற்கு முன் என்னிடம் ஒரு சத்தியம் பெற்றுக் கொண்டாள்.
அது நான் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று. அதுவே அவளுடைய இறுதி விருப்பமாகவும் இருந்தது.
அதை விரைவில் செய்து வைக்கும்படி தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்தும் ஒரு சத்தியத்தை எனக்கு முன்னாலே பெற்றுக்கொண்டாள்.

அவள் மறைவுக்குப் பின் கொஞ்ச நாள் என் கூட இருந்த அவள் பெற்றோர்கள், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல, மறுபடியும் தனிமை என்னுடன் சேர்ந்து கொண்டது.

அப்போது எனக்கு வயது 52.
அதுவரை வாழ்க்கை எனக்குத் தந்த அனுபவங்களும், புரிதல்களும்
ஒரு அளவுக்குக் கீதா இல்லாத வாழ்வை வாழ என்னைத் தயார்ப் படுத்தியது.

மனதுக்குள்  எப்போதும் வருத்தம்  தான். இருந்தும் அவளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்துத் தொந்தரவு அதிகம் இல்லாமல் அமைதியான முறையில் அவள் விதியை எதிர்கொள்ள அவளுடன் இறுதிவரை  பக்கபலமாக இருந்தது எனக்கு மன நிறைவைத் தந்தது.

கீதா இப்போது என்னுடன் இல்லை இனி வரப்போவதும் இல்லை அதுதான் உண்மை என்று எனக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தது.

நான் என் முழு கவனத்தையும் என் வேலையில் செலுத்த ஆரம்பித்தேன்.

முதலில் என் வேலையைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். நான் முன்பு குறிப்பிட்டது போல ஒரு இஞ்சினியர் படிப்படியாக என் வாழ்வில் முன்னேறி  ஒரு சோலார் பேனில் உற்பத்தி செய்யும் SEW (Solar every where) என்னும் நிறுவனத்தில் வேலை.

அங்குச் சோலார் பேனல் உற்பத்தி செய்தபிறகு அதன்  செயல்திறனைச் சரிபார்க்கும் பிரிவின் பொது மேலாளராக இருந்தேன். அது ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனம் என் பிரிவில் மட்டும் எனக்குக் கீழ் 102 ஊழியர்கள், 24 பெண்கள் உட்பட.

அந்நிறுவனம் இந்தியாவில் ஆரம்பித்த நாள் முதல் நான் பணியாற்றி வந்ததால் பல பிரச்சனைகள், பல சவால்களை எதிர்கொண்டு அந்த நிறுவனத்துடன் நானும் வளர்ந்து பல வெற்றிகளைக் கண்டேன். எனக்கென்று அந்த நிறுவனத்தில் ஒரு நல்ல மதிப்பு இருந்தது.

கீதா மறைவுக்குப் பின் காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்றால் வீடு திரும்ப இரவு ஒன்பது ஆகிவிடும்.
இரவு தூங்குவதற்கு மட்டும் தான் என் flat எனக்குத் தேவைப்பட்டது.

சனி, ஞாயிறு விடுமுறை. அந்த நாட்களில் மட்டும் தான் தனிமை கொஞ்சம் வாட்டும். நான் குடியிருக்கும் எனது பிளாட் கூட்டமைப்பில் நான் துணைத் தலைவராக இருந்ததால் அது சம்பந்தமான வேலைகள், மற்றும் என் புத்தகங்கள், டிவி, மொபைல் போன் இவையெல்லாம் என்னைக் கேட்காமலேயே என் நேரத்தைக் கவ்விக் கொள்ளும். நாட்களைக் கடத்துவது ஒன்றும் சிரமமாக எனக்கு இருந்ததில்லை.

கீதா இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவளுடைய பெற்றோர் என் மறுமணம் பற்றி என்னுடன் அடிக்கடி பேச,  கீதாவின் இறுதி விருப்பத்தைப் பற்றி நானும் யோசிக்க ஆரம்பித்தேன்……….

பாகம் – 4

அந்த வாரம் சனி, ஞாயிறு எவ்வாறு போனதென்றே தெரியவில்லை. மறுபடியும் ஒரு திங்கள் காலை. நான் ஆபீஸ் போவதற்காகக் கீழே வந்து கார் பார்க்கிங்கில் என் காரை எடுத்தபோது Flat வாட்ச்மேன் ஓடிவந்து

“குட் மார்னிங் சார்” என்றார்

“குட் மார்னிங்” என்றேன் பதிலுக்கு

“சார் உங்க பக்கத்து flat க்கு புதுசா ஒருத்தங்க குடி வராங்க நேத்துதான் வந்து பால் காய்ச்சிட்டு போனாங்க “

“ஓ அப்படியா”

“உங்கள் மொபைல் நம்பர் கேட்டாங்க கொடுத்திருக்கேன்”

“சரி”

“இன்னைக்கு வந்துருவாங்க”

“சரி, நான் கிளம்புறேன்” என்று கூறி நான் காரில் அமர

அந்த வாட்ச்மேன் ஒரு மாதிரி  சிரித்துக் கொண்டே தன் தலையைச் சொரிந்தார்……. எனக்கு விஷயம் புரிந்தது

ஒரு நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்

“தேங்க்யூ சார்” என்று கூறி தன் விசுவாசத்தை மறுபடியும் காட்டினார்.

என் பக்கத்து flat க்கு யார் வருகிறார்கள் அவர்கள் எதற்காக இங்கு வருகிறார்கள் எல்லாம் எனக்கு முன்பே தெரிந்த விஷயம் தான்.

என் மனதுக்குள் நான் சிரித்துக்கொண்டு என் காரை ஸ்டார்ட் செய்து நகர ஆரம்பித்தேன்.

எனக்கு எப்படி அது தெரியும் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என் ஆபீஸில் என்ன நடந்தது என்று தெரிந்தால் அது உங்களுக்குப் புரிந்துவிடும்.

சொல்கிறேன்……..

அன்று அலுவலகத்தில் என் பிரிவில் எனக்கு அடுத்த நிலையில் உள்ள நாலு மேனேஜர்களுடன் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தேன். காலை 10 மணிக்கு அந்த மீட்டிங் ஆரம்பித்தது நாலு பேரில் மூன்று பேர் குறித்த நேரத்தில் வந்து விட்டார்கள். நாலாவது ஆளான கவிதா சற்று தாமதமாக, பத்து பத்துக்கு தான் அந்த மீட்டிங்க்கு வந்தாள்.

Sorry, Sorry, Sorry  VJ என்று கூறியபடியே  வந்து அவள் இருக்கையில் அமர்ந்தாள். எங்கள் நிறுவனத்தில் எல்லாரும் வயது வித்தியாசம் பார்க்காமல் மற்றவரைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது தான் வழக்கம். அதனால் தான் உரிமையோடு அந்த VJ.

அவளுக்கு வயது 25 இருக்கும். கடந்த நான்கு வருடங்களாக அந்த நிறுவனத்தில் என் பிரிவில் வேலை பார்ப்பதால் எனக்கு அவளைப் பற்றிப் பற்றி ஒரு அளவுக்குத் தெரியும்.

மிகவும் துடுக்கான சாமர்த்தியசாலி. ஒரு வேலையை அவளிடம் கொடுத்து விட்டால் போதும்  எப்படியும் அதைக் குறித்த காலக்கெடுவுக்குள் முடித்து விடுவாள். அன்று அந்த மீட்டிங் முடிந்தது எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கச் செல்ல அவள் மட்டும் என்னிடம் வந்து

“VJ உங்க கூடத் தனியா கொஞ்சம் பேச வேண்டும் “

“என்ன விஷயம்”

“இங்க வேணா உங்க cabin லப்போயி பேசலாமே ?”

“சரி வாப்போகலாம்”

இருவரும் அங்குள்ள காபி மெஷின்ல ஆளுக்கு ஒரு கப் காப்பி எடுத்துக்கிட்டு  என் கேபின் க்கு போனோம்

“சொல்லு கவிதா என்ன விஷயம்?”

“VJ personal லா ஒரு ஹெல்ப் வேணும்”

“உம்”

“உங்க அப்பார்ட்மெண்டில் ஏதாவது வீடு காலியா இருக்கு மா ?”

“என்ன விஷயம் உனக்குக் கல்யாணமா ? அங்க வந்து செட்டில் ஆகப் போறியா ? கங்க்ராஜுலேஷன்”

“அதெல்லாம் இல்ல VJ, அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் இருக்கு”

“நோ ப்ராப்ளம் நான் wait பண்ணுறேன்”

“VJ please நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்”

“சரி என்ன விஷயம் சொல்லு, வீடு இருக்கு, infact எனக்குப் பக்கத்து flat காலியாகத் தான் இருக்கு. யாருக்கு
வீடு வேணும்?”

“அது வந்து கிருஷ் ஆன்ட்டிக்கு , ஒரு பிரச்சனை ஆயிடுச்சு?”

” கிருஷ் ஆன்ட்டி யார் அது ?”

“நான் முன்னாடி உங்க கிட்ட சொல்லி இருக்கேன்னல்ல என்னோட ஃப்ரெண்ட் ரோகினி அமெரிக்கால இருக்காளே, அவங்க அம்மா “

“உங்க கிருஷ் ஆன்ட்டி ஏன் அமெரிக்காவுக்கே போய் விடலாமே?”    

“போயிடலாம் ஆனா ரோகினியின்  பாட்டி, கிருஷ்  ஆன்டியோட  அம்மா அவங்க கூடத் தான் இருக்காங்க இப்ப. பாட்டிக்கு வயது என்பது. ரோகினியோட  தாத்தா போன வருஷம்தான் இறந்து போனார் so அந்தப் பாட்டியைப் பார்த்துக்க வேணுமில்ல…” என்றாள் கவிதா

“Ok it makes sense. ஏதோ பிரச்சனை ஆச்சு ன்னு சொன்னியே என்ன பிரச்சனை ?”

“கிருஷ் ஆன்ட்டி ரொம்ப அழகாவே இருப்பாங்க அவங்கல பார்த்தா 50 வயதை  கடந்தவங்கனு சொல்லவே முடியாது. ரெகுலரா காலையிலும் மாலையிலும் எங்க Flat யைச்சுற்றி வாக் பண்ணுவாங்க.”

“அதனால் என்ன walk பண்றது நல்லது தானே அதுல என்ன பிரச்சனை?” என்று நான் கேட்க

” VJ என்னைப் பேச விட்டீங்கன்னா நான் எல்லாத்தையும் முதல்ல சொல்லிடறேன் அதுக்கப்புறம் உங்க கேள்விகளை எல்லாம் நீங்கக் கேட்கலாம்  please “

“Sure, நீ சொல்லி முடிக்கிற வரைக்கும்
No more questions from my end”

கவிதா தொடர்ந்தாள்

” Ajai Singh என்று ஒரு பஞ்சாபி அங்கிள் ,இந்திய இராணுவத்தில் வேலை பார்த்து ரிடையர் ஆனவர்.
அவருடைய பொண்ணு Sonu எங்கள் பிளாட்டில் தான் இருக்கா சிட்டி பேங்க்ல மேனேஜர் வேலை. Ajai Uncle க்கு Sonu வை விட்டா வேற ஆள் கிடையாது. அதனால retired ஆனவுடன்
இங்கேயே வந்துட்டாரு.

இங்கிலீஷ், ஹிந்தி, கொஞ்சம் கொஞ்சம் தமிழ்  கலந்து பிளாட்டில் எல்லாருடனும் கலகலப்பா பேசுவாரு. ஃப்ரீயா எல்லாரும் வீட்டுக்குப் போயிட்டு வருவார். எல்லாருக்கும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்வார். ரொம்ப நல்ல மனுஷன் மனசுல நினைக்கிறது பட்டுன்னு சொல்லிடுவார்.

இப்படித்தான் Ajai uncle ஒரு நாள் அழையா விருந்தாளியாகக் கிருஷ் ஆன்ட்டி வீட்டுக்கு வந்தபோது- கிருஷ் ஆன்ட்டியும், பாட்டியும் டிவி பாத்துட்டு இருந்தாங்க. அவங்க வீட்டு வேலைக்காரி வீட்டைக் கூட்டிக்கொண்டு இருந்தாள். Ajai Singh Uncle வீட்டுக்கு வந்தவுடன் அந்தப் பாட்டியின் காலத்தொட்டு  நமஸ்காரம் பண்ணிட்டு. அங்கு இருந்த ஒரு சேரில் உட்கார்ந்தார். கிருஷ் ஆண்டியை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு

Do you speak English ? என்று கேட்டார்

ஆன்ட்டியும் Yes என்று கூற

Ajai Uncle எந்தத் தயக்கமுமின்றி

“Krishnaveni you look beautiful. I like you so much. If you agree I want to marry you.” என்று  டப்புனு போட்டுத் தன் மனசுல இருக்கிறத  உடைச்சிட்டார்.

கிருஷ் ஆன்ட்டி அப்படியே Stun  ஆயிட்டாங்க

” Take your time think over it. It is your life don’t worry about others. You have to decide and what ever is your decision please let me know.”  என்று Ajai Uncle சொல்லி முடிப்பதற்குள்

கிருஷ் ஆன்ட்டி அவரைப்பார்த்து No, I am sorry என்று சொல்ல

Ajai Uncle “தேங்க்யூ, I respect your decision “என்று சொல்லிவிட்டு மறுபடியும் பாட்டி காலத்தொட்டுக் கும்பிட்டுவிட்டு எந்த ஒரு சலனமும் இல்லாமல் அமைதியாகத் திரும்பிச் சென்று விட்டார்.

கிருஷ் ஆன்ட்டி ஒருவிதமான shock  கில் இருக்க. அந்தப் பாட்டி என்ன நடந்தது என்று புரியாமல் வீட்டுக்கு வந்தவரை, மிகவும் மரியாதையாக நடந்து கொண்டவரை, ஒரு டம்ளர் தண்ணீர் கூடக் கொடுக்காமல் திருப்பி அனுப்பியதற்காகத் தன் மகளையும், வேலைக்காரியும் கண்டித்தார்.

அந்த வேலைக்காரிக்கு அரசல்புரசலாக விஷயம் புரிந்தது. பிறகென்ன அந்த வேலைக்காரி சென்று அந்தப் பிளாட் வாட்ச்மேனிடம் சொல்ல அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்தச் செய்தி FLAT முழுக்கப் பரவிக் கிருஷ் ஆன்ட்டிக்கு ஒருவிதமான கஷ்டத்தைக் கொடுத்தது. அதனால் அந்தப் பிளாட்டை காலி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.” என்று சொல்லி முடித்தாள் கவிதா

“மேடம் நீங்கச் சொல்லி முடிச்சிட்டீங்களா, இப்ப நான் என் கேள்விகளைக் கேட்கலாமா ? “என்றேன்

“Yes please” என்றாள்

“ரோகிணியிடம் இதைப் பற்றி டிஸ்கஸ் பண்ணியா ?”

“Yes. In fact அவ அவள் அம்மாவைக் கூப்பிடு உனக்குப் புடிச்சிருந்தா நீ கல்யாணம் பண்ணிக்கோ அம்மா எனக்கு ஒன்னும் இல்ல, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.
நீ மற்றவர்களுக்காக  இவ்வளவு நாள் வாழ்ந்திட்ட. இனியாவது உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்
நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடு மா
என்றாள். இதெல்லாம் இங்கு அமெரிக்காவுல ரொம்ப சகஜம். யோசிச்சு பார்த்தா correct ன்னு  தான் எனக்குத் தோணுது.”….என்றாள்

“கிருஷ் ஆன்ட்டி எதுவும் பதில் சொல்லல. ஆனா வீடு  மாற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியா இருந்துட்டாங்க.

எங்க Flat la இருந்த வரைக்கும் நான் அங்க அவங்க பக்கதிலே குடியிருந்ததால ரோகினி நிம்மதியா இருந்தா. இப்ப வீடு மாற வேண்டும் என்பதால தெரிஞ்சவங்க யாராவது பக்கத்துல இருந்தா நல்லது என்று ஃபீல் பண்றாள்”

“VJ எனக்கு உங்களைத் தவிர வேற யாரும் மனசுக்கு சரியா வரல அதான்
.உங்க மொபைல் நம்பர் ரோகினிக்கு கொடுக்கிறேன் அவளும் உங்களைக் கூப்பிடுவா….please help us”

என்று முடித்தாள் கவிதா

அப்புறம் நான்தான் என் பக்கத்து வீட்டு ஓனரிடம் பேசி இந்த ஏற்பாட்டைச் செய்தேன்.

பாகம் -5

ஒரு புதன் கிழமை கிருஷ் ஆன்ட்டியும், அவங்க அம்மாவும் நான் இருக்கும் பிளாட்டுக்கு குடி வந்தாங்க. வார நாட்களில் நான் காலையில சீக்கிரம் கிளம்பி ஆபிஸ் போயிட்டு இரவு லேட்டாக வருவதால் அவங்களை என்னால பாக்க முடியல.  கவிதா சனிக்கிழமை வந்து என்னைய அவங்களுக்கு introduce பண்றதா சொல்லியிருந்தாள்.

அந்த வெள்ளிக்கிழமை நான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வருவதற்கு மணி ஒன்பது ஆச்சு. வழக்கம்போலக் குளிச்சிட்டு இரண்டு தோசை ஊற்றிச் சாப்பிட்டிட்டு கொஞ்ச நேரம் டிவி பாக்கலாம்னு உட்கார்ந்தபோது, என் மொபைல் போன் ஒலித்தது

எடுத்துப் பார்த்தால் அமெரிக்காவிலிருந்து ஒரு கால்

“ஹலோ VJ Sir நான் ரோகினி, கவிதா’s பிரண்ட் பேசறேன் “

“சொல்லுங்க, எப்படி இருக்கீங்க ?”

“நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க”

“I am fine “

“VJ Sir…oru request – ப்ளீஸ் வாங்க , போங்க இதெல்லாம் avoid பண்ணலாம். கவிதா மாதிரி என்னையும் நினைச்சுக்கோங்க”

“ஓகே ரோகினி. அப்ப நீயும் என்னைய கவிதா மாதிரி VJ  என்றே கூப்பிடலாம்”

“Ok VJ. கவிதா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கா. நீங்க எப்படி அவளைச் சப்போர்ட் பண்ணி இருக்கீங்கனு . நாங்க எப்ப  பேசினாலும் ஒரு தடவையாவது உங்களைப் பற்றி ஏதாவது சொல்லிடுவா”

“அப்படியா”

“VJ – first உங்களுக்கு ஒரு big thank you. எங்க அம்மாவுக்கும், பாட்டிக்கும் வீடு ஏற்பாடு பண்ணி கொடுத்ததற்கு”

“நீங்க கவிதா மாதிரின்னு சொல்லிட்டீங்க இது கூட பண்ணாட்டி எப்படி? “

இப்படித்தான் ரோகினிக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. பிறகு வாரத்திற்கு இருமுறையாவது நாங்க பேசிக்கொள்வோம். கவிதாவிடம் எப்படி free ya பேசுவேனோ அதே மாதிரி ரோகினியோடவும் பேச ஆரம்பிச்சேன்.

இது இப்படி இருக்க, சொன்ன மாதிரி கவிதா அடுத்த நாள் காலை 9 மணிக்கெல்லாம் என் பிளாட்டிற்கு வந்து  என் வீட்டைத்தட்ட, சனிக்கிழமை என்பதால் நான் குளிக்காமல் கையில் ஒரு காபிக்கப்புடன் கதவைத் திறக்க

“You are very lazy VJ”….என்றாள் கவிதா

“Yes I accept it” …..என்றேன் சற்றும் தயங்காமல்

அவளுக்குப் பதில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“நான் ரோகினி யோட அம்மா வீட்டுல இருக்கேன் நீங்கச் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க “

“சரி” என்று நான் கதவைச் சாத்திவிட்டு நேராகச் சென்று குளித்துவிட்டு ஒரு நல்ல டிரஸ்யை போட்டுக்கிட்டு, தலையைச் சீவி ரஜினி சார் மாதிரி கொஞ்சம் கலைத்து விட்டேன்.

ஏதோ ஒரு சந்தோசம் அது என்னனு தெரியல. என்னையே நான் கண்ணாடியில் பாத்துட்டு இருந்தேன்.
பசி சுத்தமா இல்ல அதனால காலையில சாப்பிட வேணாம்னு முடிவு  பண்ணினேன். ரோகினியோட அம்மா ரொம்ப அழகா இருப்பாங்கனு கவிதா சொன்னது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது, திரும்பிப் போய்க் கண்ணாடியில் ஒருமுறை என்னைப் பார்த்தேன். எனக்கு நான் அழகாகத் தெரிந்த பிறகு பக்கத்து வீட்டுக்குப் போகத் தயாரானேன்.

என் வீட்டுக் கதவைச் சாத்திவிட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்று காலிங் பெல்லை மெல்ல அழுத்த உடனே கதவு திறந்தது. கவிதா வந்து என்னை வரவேற்க, ரோகினியோட அம்மாவும் பாட்டியும் அமைதியாக என்னைப் பார்த்தவண்ணம் இருந்தனர்.

முதல பாட்டிக்கு ஒரு வணக்கத்தைச் சொன்னேன். கவிதா என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்தாள்

“இவரு தான் VJ”

பிறகு அந்தப் பாட்டியைப் பார்த்து

“VJ இது ரோகினி யோட பாட்டி”

நான் அவர்களைப் பார்த்துத் திரும்பவும் ஒரு வணக்கம் சொன்னேன்

“இது ரோகிணி யோட அம்மா கிருஷ் ஆன்ட்டி”

” Hello கிருஷ் என்றேன்”

“என் பெயர் கிருஷ்ணவேணி”  நறுக்கென்று கூறிவிட்டுச் சட்டென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார் அந்தக் கிருஷ் ஆன்ட்டி

எனக்குப் புரிந்தது, நன்றாகப் புரிந்தது கிருஷ் என்று நான் சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று

நான் மறுபடியும்

“Hello கிருஷ்ணவேணி” என்றேன்

பதில் எதுவும் இல்லை அங்கிருந்து. நிலைமையைக் கொஞ்சம் சமாளிக்க

” குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா ?”

அதைக்கேட்டு கிருஷ்ணவேணி சமையல் அறைக்கு உள்ளே செல்ல நான் அங்கிருந்த Chair la அமர்ந்து கவிதாவுடனும் அந்தப் பாட்டியுடனும் பேசத் தொடங்கினேன். பாட்டி சோர்ந்து காணப்பட்டார் அவர்களால் அதிகம் பேச முடியவில்லை. எனக்கு எதிரே இருந்த அலமாரியில் நிறையப் புத்தகங்கள் இருப்பதைக் கண்டேன்.

சற்று நேரம் கழித்து ஒரு கப் காபி தண்ணீர் மற்றும் ஒரு தட்டில் பிஸ்கட் உடன் கிருஷ்ணவேணி வர எனக்கு அவர்களிடம் ஏதோ பேச வேண்டும் போல் தோன்றியது

சுஜாதா சார் புக்ஸ் வச்சிருக்கீங்களா?
ஏதாவது இருந்தா கொஞ்சம் கொடுங்களேன் – படிச்சிட்டு தரேன்,
என்கிட்டேயும் நிறையப் புத்தகங்கள் இருக்கு வேணும்னா நீங்க எப்ப வேணா வந்து எடுத்துக்கொள்ளலாம்.

உடனே பதில் வந்தது சற்று வேகமாக

“Sorry நான் என்னுடைய புத்தகங்களை யாருக்கும் கொடுப்பதில்லை”.

“That’s ok. ஆனால் நான் என்னோட புத்தகங்களை எல்லாத்தூக்கும் share பண்ணுவேன் நீங்க எப்ப வேணாலும் வந்து எடுத்துக்கொள்ளலாம்”. …..என்று கிருஷ்ணவேணியின் கண்களை நேராகப் பார்த்துக் கனிவாகச் சொன்னேன்.

அந்தக் கணம் கிருஷ்ணவேணி அவர்கள் எவ்வளவு அழகானவர்கள் என்பதை என் கண் கண்டுகொண்டது.

நான் காபியைக் குடித்து முடிக்கக் கவிதா விடைபெற்றாள்.
நானும் பாட்டிக்கு மறுபடியும் ஒரு வணக்கத்தைச் சொல்லிவிட்டு என் வீட்டுக்குச் சென்றேன்.

கிருஷ் வந்தவுடன், Sorry கிருஷ்ணவேணி வந்ததிலிருந்து ஒரு மாற்றம் நடந்தது. நான்  இப்போதெல்லாம் ஆபீஸ் போகும்போது வீட்டுச் சாவியை செக்யூரிட்டியிடம் கொடுக்கிறதில்லை. கிருஷ்ணவேணி அவங்க வீட்டுல தான் கொடுக்கிறது.

அது தினமும் அவங்க கூடப் பேச ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

பேசுவதுனா சின்ன சின்ன விஷயங்கள் தான்

“கொஞ்சம் Gas வந்தால் வாங்கி வச்சிருங்க,

வேலைக்கார அம்மா வந்தா வீட கொஞ்சம் clean பண்ண சொல்லிடுங்க…….”

தினம் தினம் பார்த்துக் கொஞ்சம் பேசுவதால் எங்களிடைய இருந்த இறுக்கம் சற்று குறைய ஆரம்பித்தது

இதனிடையே வழக்கம்போல் ஒரு முறை ரோகினி என்னுடன் பேசிக்கொண்டிருக்கையில் நான் அவளிடம் சில சமயம் தனிமை என்னை வாட்டுவதாகக் கூறினேன்

அவள் மிக casual லாக

“VJ – Why dont you marry again ? “என்று கேட்டாள்

நானும் ஏதோ நினைப்புல டக்குனு

“If your mother agrees, why not ?” சொல்லிட்டேன்

அது என்னை அறியாமலேயே வந்த பதில். என் உள் மனசுல அப்படியொரு எண்ணம் ஆசை இருந்திருக்கும் நினைக்கிறேன்.

மறுமுனையில் கொஞ்ச நேரம் மௌனம். ரோகினிக்கு அது கொஞ்சம் shock க்கை கொடுத்திருக்கும் நான் நினைக்க

கொஞ்ச நேரம் கழிச்சு அவளிடமிருந்து பதில் வந்தது

“VJ அப்படி நடந்தா தான் ரொம்ப சந்தோஷப்படுவேன். ஏன் நீங்கப் போயி என் அம்மாக்கிட்ட  ………propose பண்ணக் கூடாது” …….என்றாள்

“வேண்டாமா அப்புறம் இந்தப் பிளாட்டை காலி பண்ண வேண்டும்  என்று சொல்லுவாங்க நான் போயி வேற பிளாட் பார்க்க வேண்டியிருக்கும்”……என்று நான் சொல்ல

இருவரும் அதை நினைத்து வெகுநேரம் சிரித்துக்கொண்டோம்.

“VJ you should try.  All the best” என்று கூறி அன்று தன் உரையாடலை முடித்தாள் ரோகினி..


பாகம் – 6

நாட்கள் வேகமாக நகர்ந்தன. வாழ்க்கை தனக்குத் தந்த  ஏமாற்றங்களினால் தனக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு அதனுள்ளேயே கிருஷ்ணவேணி இருப்பதை நன்றாக நான் புரிந்து கொண்டேன்.

கிருஷ்ணவேணி என்னைப் பார்த்து லேசாகச் சிரிக்கவே ஆறு மாத காலம் ஆனது. வெகுநாள் கழித்து பெரும் தயக்கத்துடன் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தார்கள்.

என்னோட books collection யைப் பார்த்து வியந்து போயிட்டாங்க. அப்பொழுதிலிருந்து நாங்கள் தினமும் பல புத்தகங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம், விவாதித்தோம்.

அடிக்கடி ரோகிணியிடம் பேசுவதிலிருந்து ஒரு அளவுக்கு கிருஷ்ணவேணிையைப் பற்றி மேலும் மேலும் தெரிஞ்சிகிட்டேன்.

ஒருநாள் கிருஷ்ணவேணிக்கு என்ன தோனுச்சோ தெரியல அவங்க வாழ்க்கையைப் பற்றி முழுசா என்னோட பகிர்ந்துகிட்டாங்க.

ரோகிணி ஒரு வயசா இருந்தப்ப, எப்படி அவங்க தன் குடிகார கணவரிடமிருந்து  விவாகரத்து பெற்று, பெரும் போராட்டத்துக்கு இடையே, ரோகிணியை வளர்த்து நல்லா படிக்க வைத்து ஆளாக்கினாங்ககிறத கேட்டபோது என் கண்களில் என்னை அறியாமலேயே கண்ணீர் வந்தது.

அவங்க வாழ்க்கை பற்றி என்னிடம் சொல்லி முடிச்சிட்டு, ரொம்ப நாளா அவங்க மனசுல இருந்த பாரம் இறங்கியதா சொன்னாங்க.

நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கீதாவை பற்றிக் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் சொல்லிட்டேன். கீதா வுக்காக ரொம்ப வருத்தப் பட்டாங்க.

எங்களுக்கிடையே நல்ல ஒரு புரிதல் இருந்தது ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாய் இருந்தோம்.

நாளாக நாளாக எனக்குக் கிருஷ்ணவேணி மேல அன்பும் மரியாதையும் அதிகமாச்சு.

ஒரளவுக்கு தைரியத்தை வரவழைத்து என் மனசுல இருந்த ஆசையை, எண்ணத்தை அவங்க கிட்ட சொல்லி அவங்கள நான் மறுமணம் செஞ்சிக்க சம்பந்தம் கேட்க நினைத்தபோது தான்
நோய்வாய்ப்பட்டிருந்த கிருஷ்ணவேணி யோட அம்மா இறக்க நேர்ந்தது.

ரோகிணி அமெரிக்காவிலிருந்து வர முடியாததால நான்தான் முன்னிருந்து அந்தப் பாட்டியோட இறுதி சடங்குகளை எல்லாம் செய்தேன்.

பிறகு அது எல்லாம்  முடிய, கிருஷ்ணவேணிக்கு ஒரு மாறுதல் தேவைன்னு ரோகினி அவங்களை அமெரிக்காவுக்கு அழைத்தாள்.

கிருஷ்ணவேணிக்கும் வேற வழி தெரியல. அமெரிக்காவுக்கு போறதுக்கு சம்மதித்தார்கள்.

ரோகிணியின் வேண்டுகோளை ஏற்று நான்தான் அவங்க பயணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன்.

என் மனசுக்கு சுத்தமா கிருஷ்ணவேணி அமெரிக்கா போறது பிடிக்கல. ஆனா என்ன உரிமை இருக்கு எனக்கு?, நான் அதை அவங்ககிட்ட சொல்ல? வழி தெரியாமல் தவித்தேன்.

ஒரு வழியா அவங்க அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. நான் தான் அவங்கள வழியனுப்ப ஏர்போர்ட்டுக்கு போனேன்.

அங்கே அவங்கக்கூட airport entry gate வரை சென்று, அவங்க உள்ளே நுழையும் முன்

“ஒரு நிமிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று நான் சொல்ல அவங்க சற்று நின்னாங்க.

“இது ரொம்ப நாளா என் மனசுல இருக்கு, இதை நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும். எனக்குத் தைரியம் இல்ல.ஆனா இப்ப எனக்கு வேற வழி தெரியல நான் சொல்லியே ஆகணும்”…என்றேன்

அவங்க அமைதியாக இருந்தாங்க எந்த ஒரு எதிர்பார்ப்பும் அங்க முகத்தில் எனக்குத் தெரியல

நான் தைரியத்தை வரவழைத்தது சொல்லிட்டேன்

” Krishnaveni I want to marry you, I love you”

ஆனா இந்தத் தடவை அவங்க கண்ணைப் பார்த்து என்னால பேச முடியல. சொல்லிவிட்டு தலையைக் குனிந்து அவங்க பதிலுக்காகக் காத்திருந்தேன்

அவங்ககிட்ட இருந்து  எந்த ரியாக்ஷனும் இல்லை

அவங்க பாட்டுக்கு trolley யைத்தள்ளிக்கிட்டு ஏர்போர்ட்டுக்குள்ள போய்ட்டாங்க.

ஆறு மாசமன்னு  அமெரிக்காவுக்கு போனவங்க இரண்டு வருஷம் ஆகியும் திரும்பல

வழக்கம்போல் நான் ரோகிணி கூடப் பேசிக் கொண்டிருந்தாலும். கிருஷ்ணவேணி அவர்களைப் பார்க்கவோ, பேசவோ எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னுடன் பேச மறுத்துவிட்டார்கள்.

ரோகிணியிடம் சிலசமயம் நான் உதவி கேட்டும் அவள் இது உங்கள் இருவருக்கு இடையே உள்ள விஷயம் இதில் நான் தலையிட முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்

கிருஷ்ணவேணியை நான் மறுமணம் செய்து வாழ நினைத்த வாழ்க்கை வெறும் ஆசையாக, கனவாக மாறிவிடுகிற  நிலைமை உருவாகத் தொடங்கியது.

எனக்கு ஒரே ஒரு ஆறுதல், அது என் மனசுல இருந்ததை அவங்க கிட்ட சொல்லியது தான்

என் வாழ்வில் மற்றொரு இருண்டகாலத்தின்  தொடக்கமோ அது? என்ற கேள்வி எனக்குள் எழத் தொடங்கியது…….

பாகம் – 7

இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து ஒரு நாள்

நேரம் இரவு மணி : 00:01

நான் நல்ல உறக்கத்தில் இருந்தேன் ஏதோ சத்தம் கேட்க முழிப்பு வந்தது.

“கதவை யாரோ தட்டுறாங்க ? “என்று பக்கத்தில் இருந்து ஒரு குரல்

சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை எனக்கு, நான் மெதுவாக எழுந்து , லைட்டை ஆன் செய்து வீட்டுக் கதவை போய் திறந்தேன்.

என்ன ஒரு ஆச்சரியம் !! கதவைத் தட்டியது யார் தெரியுமா ?

என் மகள் ரோகினி, அவளுடன் அவள் கணவன் ஜான் மற்றும் என்னுடைய பேரன் Vicky

என்னை பார்த்தவுடன் எல்லோரும் ஒரே குரலில்

“Very happy 25th Wedding Anniversary wishes” என்று கோஷமிட

கிருஷ் மெதுவாக நடந்து வந்து மெல்ல எட்டி பார்த்தாள்.

இப்போது எனக்கு வயது 80, கிருஷ்க்கு 82 .எங்கள் இருவருக்கும் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

எங்கள் 25ஆவது திருமண நாளை எங்களுடன் கொண்டாட  எந்த  முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்கள் வந்து நின்றது , எனக்கும் என் கிருஷ்க்கும் அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது.

இப்போதெல்லாம் கிருஷ்ணவேணியை  நான் கிருஷ் என்று தான் கூப்பிடுகிறேன்.
அது அவளுக்கும் பிடித்திருக்கிறது.

சுபம்.

TN Elections

Which way it will sway
Nobody can say.

Every party says it will win.
And with that confidence
the campaign , they begin

Summer heat
It doesn’t deter their desire to win  assembly seats

A lot of freebies
which even god can’t foresee

Leaders talk and talk
But will they walk their talk ?

It is either this or that
One will win
Only to find another’s sin

Let us wait.
Election is in near sight

Which way it will sway
Nobody can say.

கிட்டூர் மகாராணி

அவள் கிட்டூர் மகாராணி
ஆங்கிலேயர் ஆட்சிக்கு
அடிபணியாத வீர ராணி

தன் கணவன் இறக்க
மகனையும் இழந்து
நாட்டைக் காக்க
போர்க்களம் பூண்டாள்

கட்டபொம்மன் போல்
கப்பம் கட்ட மறுத்தாள்
ஆங்கிலேயரைத் தலைநிமிர்ந்து
எதிர்கொண்டு துணிவாக எதிர்த்தாள்
தம் படைகளை வீரத்துடன் வழிநடத்தி
தீரத்துடன் போரிட்டாள்

பல முறை தோற்று
பிறகு ஒரு முறை வென்ற ஆங்கிலேயர்கள்
அவளைச் சிறையிலடைக்க
அங்கே வீராங்கனை ராணி
வீர மரணம் அடைந்தாள்.

என்றோ மறைந்தாலும்
இன்றும் சிலையாய் நின்று
மக்கள் மனதில்
மலைபோல் உயர்ந்து
வீர சின்னமாகத் திகழ்கிறாள்
ராணி சென்னம்மா

ஒரு பயணத்தின் போது சக பயணி பகிர்ந்தது

பல ஊர்கள் பல இடங்கள்
அலுவலகப் பணிக்கான பயணம்

பல மனிதர்கள் பல புரிதல்கள்
என் உலகப் பார்வையை விரிவாக்கும்

காலை முதல் மாலைவரை
கஸ்டமர்களின் கஷ்டம் தீர்க்கும் வேலை

வேலை முடிந்து தங்கும் விடுதிக்கு வந்து விட்டால் போதும்
சக ஊழியருடன் இருக்கும்போது இன்பம் அது தானாக வந்து சேரும்

மதுக் கோப்பையுடன் சீட்டாட்டம்
விடிய விடிய தொடரும்
ஒருவருக்கொருவர் இடையே உள்ள இறுக்கம் கலைந்து
நெருக்கம் கூடிப் போகும்

பல கதைகள் பல அனுபவங்கள்
அந்நேரம் கைமாறும்
இடையிடையே கஸ்டமர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வும் வந்து சேரும்

பிறகு பின் தூங்கி முன்னெழுந்து
அடுத்த நாள் வேலை அது தடைப்படாமல் தொடரும்

இப்பயணங்கள் மரணம்வரை
மறக்க முடியாத
தருணங்களைத்தந்து
விட்டுப் போகும்.

தேர்தல் நேரம்

தேர்தல் நேரம்
ஆரம்பமானது பேரம்

சுட சுட செய்திகள்
தினம் தினம் செய்தித்தாள்களில்
அரசியல் கட்சிகளின் யூகம்
படித்துப் பார்த்தால்
மிகப் பிரமாதம்

கொள்கைகள் மறந்து போச்சு
ஆரம்பமாயிற்று கூட்டணிப் பேச்சு
கூட்டணிக் கட்சிகள்
அதிகம் கேட்டு
குறைவாய் பெற்று
புலம்பி நிற்க
தங்களை விற்க

இரண்டு பெரும் அணிகள்
வலுவாய் இருக்க
மூன்றாவது அணி ஒன்று
முளைக்கப் பார்க்க
பலரும் அடுத்த முதல்வர்
நான்தான் என்றபடி இருக்க

கோடிக்கணக்கில் பணம்
தேர்தல் களத்தில்
தினம் தினம் கரைய

ஒன்று மட்டும் நிச்சயம்
வெற்றி பெறுவர்கள் மட்டும்
திருப்பி எடுப்பர் பலநூறு மடங்காய்
தான் போட்ட முதலீட்டை

தேர்தல் நேரம்
பேரம் மட்டும் அல்ல
அது ஒரு வகை வியாபாரம்

என்னைச் சுட்டு விட்டான்

ஆதவன் மறைந்தான்
வான்மகள் மேகம் என்ற
வெள்ளடையை உடுத்த
அவளைக் கைம்பெண்
என்று நினைத்தேன்

வானம் பொழிந்தது
அவள் சோகம் தான்
கண்ணீராய் வருவதாய்
பார்த்தேன்

பிறகு அவள்
கருப்பு ஆடை உடுத்தி
வட்ட நிலா வெள்ளை பொட்டு வைத்து
அழகாய் காட்சியளித்தாள்
நானும் அதை ரசித்து விட்டேன்

நான் பார்த்தது ,நினைத்தது , ரசித்தது தெரிந்ததோ அவனுக்கு
மறுநாள் பகல் பொழுது
தன் வெப்ப நிலையை
உயர்த்தி விட்டான்
ஆதவன் தன் வெப்பத்தால்
என்னைச் சுட்டு விட்டான்