யார் அவள் ?

அவள்
என் அன்பான வம்பு
அவளைக் கண்ட பின்னே எனக்கு வாழ்க்கையில் ஒரு தெம்பு

அவள்
என் அன்பான அன்பு
அவளின் நற்பண்பு
நான் விரும்பாத என்னை
அழித்திட்ட அம்பு

அவள்
என் வாழ்வில் வரும் முன்பு
நான் செல்லாத பழைய செம்பு
அவள் வந்த பின்பு
நான் டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு

யார் அவள் ?
நிச்சயம் ஒரு நாள் சொல்வேன்
என்னை நம்பு.

சொல்லுங்கள்

வெள்ளைத்தாள்
வெறுமையாக இருக்க
அதன் வறுமை போக்க
அதில் நான் சில சொற்கள் சேர்க்க
என் எண்ணங்கள்
சொல் வடிவம் பெற்றது
தாளைச் சொற்கள் நிறைத்தது
அது ஒரு அர்த்தம் பெற்றது

சொற்கள் சக்தி வாய்ந்தது
சில வெறுமையைச் செழுமையாக்கும்
சில கண்ணாடியில் படும் கற்கள் ஆகும்

நம் சொற்கள்
வலிமை சேர்க்கவா ?
அல்லது
நிலைகுலையச் செய்ய வா ?
சொல்லுங்கள்

போட்டி

போட்டி

எது வெற்றி ?
முதல் வருவதா ?

பெரும் இடையூறுகள்
நடுவில் வந்தும்
முழுவதும் முயன்று
தோற்பதா ?

எது வெற்றி ?
முதலில் இலக்கை தொடுவதா ?
பாதகங்களை எல்லாம் சாதகமாக்கி
பல தடைகள் இருந்தும்
மடை திறந்தது போல்
புது சக்தி கொண்டு
இறுதிக் கோட்டை அடைவதா ?

முதல் வருவது
மகிழ்ச்சி தரும்
பரிசு பெறும்
அது ஒரு வரம்

வெற்றியில்லை
என அறிந்தும்
அது தெரிந்தும்
விடாமுயற்சி கொண்டு
எழுச்சி கொண்டு
முழு மனதுடன்
செயல்படுவது
அது தனி ரகம்

வெற்றியா ? முயற்சியா?
வாழ்க்கை ஒரு தொடர் போட்டி
பங்கு பெறுவோர் பலகோடி
வெற்றி செல்வதோ வெகு சிலரையேதேடி
முழு முயற்சியே
வெற்றி என்று கொண்டால்
அனைவருக்கும் வெற்றியே.!

மேம்பட விரும்பு

மேம்பட விரும்பு
உன் மன உறுதி அது இரும்பு
தடைகள் உனக்கு இனிக்கும் கரும்பு
சுறுசுறுப்பில் நீ எறும்பு
மலரத் துடிக்கும் அரும்பு

நீ மற்றவர் வாழ்வில்
ஒளியேற்றும் தீப்பிழம்பு

பிறகென்ன வெற்றி
உனக்குத்தான் கிளம்பு

நிலவு

வானத்தில் ஒரு அழகு
என் தூரத்து உறவு
அதன் பெயர் நிலவு

அனுதினம் அதன் வரவு
தந்திடுமே அமைதியான இரவு

நான் துயில்கையில் போயிடுமே
என் தொல்லைகள் களவு

தூக்கம் என் செலவு

துயில் கலைகையில் ,
புத்துணர்ச்சி என் வரவு
என்ன பிறகு ?

மற்றொருநாளை எதிர்கொள்ள
விரிந்திடுமே என் சிறகு
இவ்வுலகில்
சாதிக்கப் பெருமளவு.

பொங்கல் பொங்குகிறது

பொங்கல் பொங்குகிறது
இன்பம் பொழிகிறது
துன்பம் மறைகிறது
செல்வம் குவிகிறது
ஆரோக்கியம் பெருகுகிறது
அமைதி நிலவுகிறது
வேண்டியபடி எல்லாம் மாறுகிறது

இன்று முதல் புது வாழ்வு
இனி என்றுமே இல்லை தாழ்வு

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

நாவலர்

பெரியார் வழி வந்து
அண்ணா வழி நின்று
பாரதிதாசன் கவிைதகள் கொண்டு
மூலை முடுக்கெல்லாம் சென்று
தன் நாவன்மையால் வென்று
வளர்த்துவிட்டார் திராவிடத்தை அன்று

அது சூரியனும், இலையுமாய்
இன்றும் நிற்கிறது
தமிழனின் வாழ்வுதனை
சிறக்க வைக்கிறது

மறைந்தும் நம் நினைவில் நிற்கிறார்
அந்தத் தமிழ் காவலர்
நம் நாவலர்

கோவிட் நாட்கள்

பல திசைகளிலிருந்து
பல அம்புகள்
அவனை நோக்கி

வீட்டு வாடகை
பிள்ளைகளின் கல்விக் கட்டணம்
அலுவலக வேலைப்பளு
ஊதிய குறைப்பு
பெற்றோரின் உடல்நலம்
பொருளாதார பின்னடைவு
விதியின் சதி

நடுவில் அவன்
தன்னம்பிக்கை என்ற
கேடயம் கொண்டு

என்ன அது?

நிறமோ தங்கம்
நீந்தியபடி இருக்கும்
அங்குமிங்கும்

அதன் கண்ணில்
நீர் வழிந்தால் நான் அறியேன்
என் கண்ணில் நீர் வழிந்தால்
அதைப் பார்ப்பேன்
நிம்மதி சேர்ப்பேன்

எப்போதும் ஒரு சுறுசுறுப்பு
ஆனந்த பரபரப்பு
கவர்ந்திழுக்கும் ஒரு ஈர்ப்பு
இதைப்பார்ப்பதும் ஒருவித தியானம்
தந்திடுதே எனக்கு நிதானம்

உற்றுப் பார்த்தேன்
ஒரு அறிவுரை கேட்டேன்
சொல்லவில்லை
செய்து காட்டியது

என்ன அது ?
எப்போதும் உற்சாகமாயிருப்பது