கடற்கரை மண் குவித்து
மலை ஒன்றை எழுப்ப
அதன் மேல் கழுகு ஒன்று
வந்தமர்ந்தது
மலை சரியாமல் நின்றால்
கழுகு அங்கு தினம் வந்தால்
இதுவும் திருக்கழுக்குன்றமே
கடற்கரை மண் குவித்து
மலை ஒன்றை எழுப்ப
அதன் மேல் கழுகு ஒன்று
வந்தமர்ந்தது
மலை சரியாமல் நின்றால்
கழுகு அங்கு தினம் வந்தால்
இதுவும் திருக்கழுக்குன்றமே
இலை குடையின்
கீழ் அமர்ந்து
போதித்தது
தாய்ப்பறவை
தன் குஞ்சுகளுக்கு
இயற்கை இரை தரும்
நம் கூட்டுக்குள் வந்து இல்லை
நாம் பறந்து சென்று தேடும்போது
ஊர் விட்டு வந்து
மலைகளுக்கு நடுவே நடந்து
காடுகளுக்கு இடையே கடந்து
மேல்பாடி சென்று
தொலைநோக்கி கொண்டு
நான் நோக்கியபோது
தொலைதூரத்திலிருந்து
அவளும் என்னை நோக்கினாள்
வானத்து தேவதை
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
இதைக் கூறியது தமிழ் இனம்
அந்நெறி கொண்டு வாழ்வதோ
பறவையினம்
புலம்பெயர் பறவைகள்
அவ்உயர் கருத்தைக் கூறிய
கணியன் பூங்குன்றனாரை
நினைவில் கொண்டு
சுதந்திரமாய் பறந்து
பல நாடு பெருங்கடல் கடந்து
தமிழ் மண்ணுக்குத் தான் வந்து
அவர் பிறந்த
மகிபாலன் பட்டி கிராமம்வரை சென்று
அம்மண்ணுக்கு தன் நன்றி
சொல்லித் திரும்பிற்று
கடலோரம் கூடி அமர்ந்து
அப்பறவைகளைப் பார்த்த
இத்தலைமுறை தமிழருக்குத்
தெரியுமா பூங்குன்றனாரையென யோசித்தவாறே அது பறந்திற்று.
மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி
காடும் காடுசார்ந்த நிலமும்
முல்லை
வயலும் வயல் சார்ந்த நிலமும்
மருதம்
கடலும் கடல் சார்ந்த நிலமும்
நெய்தல்
மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் பாலை
இது தெரியும்
அடுக்குமாடி வீடுகளும்
வீட்டுக்கு ஒரு மரமும்
இதை எதில் சேர்த்து
என்னவென்று சொல்வது
சங்கத்தமிழனைப் பார்த்தால் கொஞ்சம் கேட்டு சொல்லு தமிழா
சிலர் எழுப்பிய தடுப்பினால் தான்
பள்ளிக்கு அவன் வருகை தடைப்பட்டது
அதை அறியா இச்சிறுவன்
செங்கல் கொண்டு தடுப்பு எழுப்பி
யார் வருகையை தடை செய்கிறான்
சூரியன் அது உதிர்த்து
அதனாலே உலகம் வேர்த்தபோது
காற்றாலை அது சுழன்று
மின்சாரம் அது தந்து காத்ததடி
நீர் மூழ்கும் முன்னே
அவர் சொன்ன பாடம்
நீர் தானே உன் உடம்பு
பெரும்பாலும்
நீர் இன்றி அமையாது
இவ்வுலகு ஒருபோதும்
நீ நீர் போற்றவேண்டும்
அதை காக்க வேண்டும்
ஓர் உயிர்
மற்ற உயிர்களுக்கு உணவாகும்
இது விதி என்றால்
இறைவா அது எப்படி சரியாகும் ?
நிலத்தை உழுது
விதை விதைத்து
பயிர் காத்து
அறுவடை செய்து
உழைத்து உழைத்து
அதையே திரும்ப திரும்ப செய்து
தினம் தம் பாதம் அம் மண்
பட்டால் போதும்
என வாழ்ந்து
அந்த மண்ணோடு கலந்து
மறைந்த பல வாழ்க்கை
இங்குண்டு