தூக்கமா ? அல்லது ஊக்கமா ?

அதிகாலை மணி நான்கு.
மூன்று முறை ஒலித்தது அந்த  alarm.
Sorry, என்னைப் பார்த்துச் சிரித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.  இன்றும் அந்தப் போராட்டம் தொடரும் என்பது அதற்குத் தெரியும்.

தூக்கமா ? அல்லது ஊக்கமா ?
நானே வியக்கும் வண்ணம் இன்று என் ஊக்கம் என் தூக்கத்தை வென்றது.

புது சக்தி பிறக்க மற்றொரு புதிய நாளொன்றை எதிர்கொள்ள, என்னை நான் தயார்  செய்ய நடைப்பயிற்சி மேற்கொள்ள வீட்டை விட்டு வெளியே வந்தேன். 

ஒரே அமைதி, தூரத்தில் டக், டக், டக் என்று ஒரு சத்தம். ஒரு நடுத்தர வயது ஜோடி என்னை நோக்கி நடந்து வந்தவண்ணம் இருந்தனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை இருந்தும், “Good Morning” என்று  ஒரு வணக்கத்தை வைத்தேன்.

” Very good morning” என்று மிகவும் உற்சாகமாக அவர்களிடமிருந்து பதில் வந்தது. அவர்களிடம் இருந்த உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொள்ள நான் புது தெம்புடன் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

தெருமுனையில் ஒரு சிறிய வானொலி மற்றும் கைத்தடியுடன் உட்கார்ந்து இருந்த Security Gaurd தூக்கக்கலக்கத்தில் ஒரு சலாம் வைத்தார், நான் திரும்பிச் சலாம் வைப்பதற்குள் அவர் தூங்கிவிட்டார். அவர் வானொலியிலிருந்து மட்டும் அந்நேரத்திலும்  ஒரு கண்ணதாசன் பாட்டு… மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா ?……… அந்தப் பாட்டின் வரிகளை என் மனதில் அசை போட்டவாறே நான் மேலும் நடக்க, வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவு எனக்குக் கிடைக்க மேலும் எனக்குள் உற்சாகம் கூடியது.

இதமான காலைக் காற்று வீசு, இரை தேடக் கிளம்பும் பறவைகளின் சத்தம் கேட்க ஆகா என்ன ஆனந்தம், என்னை மறந்த நிலையில் நான் நடந்து கொண்டிருக்க
திடீரென்று ஒரு சத்தம்….alarm சத்தம்

அது மூன்று முறை ஒலிக்க ………
நான் கண் விழித்தபோது மணி காலை எட்டு. என் கனவு கலைந்தது.

காலையில் காணும் கனவு பலிக்கும் என்று சொல்லுவார்கள். ஆகையால்

நாளைக் காலை நான்கு மணிக்கு எழுவது  உறுதி. அந்த இனிய பொழுதில்  நடைப்பயிற்சியும்  உறுதி.

http://www.thirans.blog

அமலா’s Call

அவன் உடல் ஓய்வு கேட்டது, அவனைத் தூங்கச் சொல்லியது, ஆனால் இரவு மணி 12 ஆகியும் அவன் தன் கைப்பேசியுடன் கைகோர்த்துக் கொண்டு இருந்தான்.
அவனுக்குத்தான் உலகமெங்கும் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்களே பேஸ்புக்கில். எந்நேரமும் அவர்களில் எவனோ ஒருவன் இணையத்தில் இருந்துக் கொண்டே தான் இருப்பான்.

தூக்கம் அவனை ஆட்கொள்ள ஆரம்பிக்க அவனை அறியாமல் அவன் கண் மூடிய நேரம் அந்தக் கைப்பேசியிலிருந்து ஒரு அழைப்பு ஒலிக்கத் திடுக்கிட்டுக் கண் விழித்தான்.

மறுமுனையில் அவன் நெருங்கிய நண்பனின் மனைவி அமலா.

” இவள் ஏன் இந்நேரத்தில் ?” என்று சற்று யோசித்தான். பல எண்ணங்கள் அவன் மனதில் ஓடத் தயக்கத்துடன் அவன் அந்த அழைப்பை ஏற்க மறுமுனையிலிருந்து ஒரு சில வார்த்தைகள் தான் பிறகு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அவன் தூக்கம் கலைந்தது. அமலா சொன்னதைப் பற்றி வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தான். 

பிறகு ஒரு முடிவுக்கு வந்து, தனக்கு தானே சொல்லிக்கொண்டான்       ” இதில் என்ன இருக்கிறது யோசிப்பதற்கு? அவள் ஒரு கேள்வி கேட்டாள், நான் பதில் கூறினேன் அவ்வளவுதான் “. 
 
அவனுக்கு ஒரு தெளிவு கிடைக்க  மறுபடியும்  தன் படுக்கையில் படுத்து   உறங்கிவிட்டான்.

சரி அப்படி என்னதான் அமலா சொன்னாள்

இரண்டே வரிகள் தான்

” நீ இன்னும் தூங்கலையா ?”  என்று அவள் கேட்க 

“ஆம்”  என்று இவன் கூற

“அப்பச் சரி குட்நைட்” என்று அவள் முடித்தாள்

அவ்வளவு தாங்க.

Payment follow up with a Customer

கோடி 40 வரும் என்று
நாங்கள் இங்குத் தவம் இருக்க

தலைநகரில் நீ அங்கு
தெருக்கோடியில் அடுக்கு மாடியில் அமர்ந்திருக்க

ஒவ்வொரு நொடியும் ஓராண்டாகிறது
நிதி வந்தால் தான்
எங்கள் விதி சிறக்கும்
நல்வழி பிறக்கும்

நாற்பதை அனுப்பு
பாடுவோம் நாங்கள்
4000 திவ்ய பிரபந்தம் உனக்கு!!!

மழை

லேசான மழை
அதில் குளித்த பச்சை இலை
இனிமையான வானிலை
நான் மறந்தேன் என் நிலை

குளிர்காற்று வீச
பறவைகள் பாட
கதிரவன் வர மறுக்க
நான் படுக்கையில் படுத்தபடி
எழ நினைக்க
இனிதே விடிந்தது பொழுது

ஒரு ஒளவை வருவாளா?

Photo Credit : Unknown Photographer

கையில் பழமிருந்தும்
காய்ந்த முகம் தான்

அறுஞ்சுவை கனியிருந்தும்
கன்னிக்கு இன்றும் பசி தான்

பழங்களை விற்றால் தான்
பசியிலிருந்து விடுதலை

அவள்போல் உள்ள பலர்
பள்ளிக்குச் சென்று கல்வி கற்க
இவள் மட்டும் ரோட்டில்
நின்று பழம் விற்க

சுட்ட பழமா
சுடாத பழமா
எனக் கேட்டு ஒரு ஒளவை வருவாளா?
இவளுக்கு ஒரு நல்வழி தருவாளா ?

அண்ணா

காஞ்சி பட்டு அவர்
தமிழ் மேல் பற்று கொண்டவர்

பெரியார் தொண்டர் அவர்
திராவிட முன்னேற்றக் கழகம் கண்டவர்

புத்தகப் பிரியர் அவர்
தன் இனிய பேச்சால் பலரை மயக்கியவர்

பல தம்பிகளை கொண்டவர்
மாநில சுய ஆட்சியை விரும்பியவர்

தனித் திராவிட நாடு கேட்டவர்
தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர்

ஹிந்தியை பின்தள்ளியவர்
செந்தமிழை முன்னிறுத்தியவர்

இறந்தும் வாழ்பவர்
என்றும் நம் மனதில் நிற்பவர்

யார் அவர் ?
பேரறிஞர் அண்ணா அவர்

அவர் பெருமை எடுத்துரைப்போம்
அவர் காட்டிய வழி நடப்போம்

(இன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்)

வாழ்க்கை

இலை உதிர்ந்து
தரை நிரம்பி
அதன் நடுவே
அது அமர்ந்து
தலை நிமிர்ந்த போது
வாழ்வின் நிலையற்ற
தன்மை அது தெரிய
வாழ்வில் தோல்வியும்
நிலையற்றது என்று புரிய
அது எழுந்து வெற்றி நடை போட்டது.

இது என்ன கனவா ?

களிறு
அதன் கால்கள் என்ன
அவள் வீட்டுக்கதவா ?

அதைப் பிடித்துப்
பயமின்றி நிற்கிறாள்
உள்ளிருந்து வெளியே பார்க்கிறாள்

இது என்ன கனவா ?
இல்லை
அன்பென்னும் நற்பண்பு
நிஜமாக்கும் விளைவு

வ உ சி

வீர சிதம்பரனார்

அவர்

வழக்கறிஞர்
தமிழறிஞர்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
பெருந்தலைவர்
சுதந்திரப் போராட்டத் தியாகி
செக்கிழுத்த செம்மல்
திலகரின் சிஷ்யர்
சுப்பிரமணிய சிவா மற்றும்
பாரதியின் உயிர்த்தோழர்

கப்பலுடன் வருவேன்
இல்லையெனில்
கடலில் விழுந்து மாய்வேன்
எனக்கூறிச் சென்று
இரு கப்பலுடன் தமிழகம்
வந்த கப்பலோட்டிய தமிழர்

உயர்விலும்
தாழ்விலும்
என் நிலையிலும்
நாட்டின் சுதந்திரமே
தன் மூச்சாகக் கொண்டிருந்த
சுதேசி விரும்பி

சிறைச்சாலையில்
செக்கிழுத்த துயரத்தை
மாற்றியது என் செந்தமிழ் அன்றோ ?
கை தோல் உரிக்கும்
பணிபுரியும்போது
என் கண்ணீரை மாற்றியது
கன்னித் தமிழ் அன்றோ ?
என்று தமிழின் உயர் சக்தியைத்
தமிழர்களுக்குக் கட்டிய தமிழறிஞர்.

அவர் பட்ட பாடு வீண் போகவில்லை
முறை தவறிய அந்நியர்களை
வரை மீறிய வெள்ளையர்களை
வெளியேற்றியாயிற்று
நம் நாடு இப்போது நம்முடையதாயிற்று

இன்று அவர் பிறந்து ஆனது
ஆண்டுகள் நூற்றியைம்பது
அவரைப் பற்றி நாம்
ஒருமுறையாவது சிந்தித்து
நாம் பெற்ற சுதந்திரத்தின்
விலை என்ன என்று யூகித்து
அவர் போற்றிய தமிழின்
இன்றைய நிலை என்ன என்று யோசித்து
அவர் கண்ட கனவையெல்லாம்
நினைவாக்குவோம்

உடைத்திடுவோம்
சாதி, மத, மற்ற எல்லைகளையெல்லாம்
உழைத்திடுவோம்
நம் நாட்டை உயர்த்திடுவோம்.

நம் தமிழை போற்றிடுவோம்