
அதிகாலை மணி நான்கு.
மூன்று முறை ஒலித்தது அந்த alarm.
Sorry, என்னைப் பார்த்துச் சிரித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றும் அந்தப் போராட்டம் தொடரும் என்பது அதற்குத் தெரியும்.
தூக்கமா ? அல்லது ஊக்கமா ?
நானே வியக்கும் வண்ணம் இன்று என் ஊக்கம் என் தூக்கத்தை வென்றது.
புது சக்தி பிறக்க மற்றொரு புதிய நாளொன்றை எதிர்கொள்ள, என்னை நான் தயார் செய்ய நடைப்பயிற்சி மேற்கொள்ள வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
ஒரே அமைதி, தூரத்தில் டக், டக், டக் என்று ஒரு சத்தம். ஒரு நடுத்தர வயது ஜோடி என்னை நோக்கி நடந்து வந்தவண்ணம் இருந்தனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை இருந்தும், “Good Morning” என்று ஒரு வணக்கத்தை வைத்தேன்.
” Very good morning” என்று மிகவும் உற்சாகமாக அவர்களிடமிருந்து பதில் வந்தது. அவர்களிடம் இருந்த உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொள்ள நான் புது தெம்புடன் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.
தெருமுனையில் ஒரு சிறிய வானொலி மற்றும் கைத்தடியுடன் உட்கார்ந்து இருந்த Security Gaurd தூக்கக்கலக்கத்தில் ஒரு சலாம் வைத்தார், நான் திரும்பிச் சலாம் வைப்பதற்குள் அவர் தூங்கிவிட்டார். அவர் வானொலியிலிருந்து மட்டும் அந்நேரத்திலும் ஒரு கண்ணதாசன் பாட்டு… மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா ?……… அந்தப் பாட்டின் வரிகளை என் மனதில் அசை போட்டவாறே நான் மேலும் நடக்க, வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவு எனக்குக் கிடைக்க மேலும் எனக்குள் உற்சாகம் கூடியது.
இதமான காலைக் காற்று வீசு, இரை தேடக் கிளம்பும் பறவைகளின் சத்தம் கேட்க ஆகா என்ன ஆனந்தம், என்னை மறந்த நிலையில் நான் நடந்து கொண்டிருக்க
திடீரென்று ஒரு சத்தம்….alarm சத்தம்
அது மூன்று முறை ஒலிக்க ………
நான் கண் விழித்தபோது மணி காலை எட்டு. என் கனவு கலைந்தது.
காலையில் காணும் கனவு பலிக்கும் என்று சொல்லுவார்கள். ஆகையால்
நாளைக் காலை நான்கு மணிக்கு எழுவது உறுதி. அந்த இனிய பொழுதில் நடைப்பயிற்சியும் உறுதி.