கடவுளைப் போற்று
என வாசகம்
வெளியே இருக்க
உள்ளே நுழைந்தேன்
ஒரு பெண் தான் இருந்தாள்
எங்கே என்றாள் ?
மயிலை என்றேன்
கடவுளைக் காண வா ?
என அன்பாய் கேட்டாள்
ஆம் என்று கூறி
நான் உள்ளே அமர
அவ்வண்டி நகர
என் பயணம் தொடர
சில நிமிடங்கள் கழிய
வண்டி நின்றது
எவ்வளவு ? என்றேன்
நியாயமாய் கேட்டாள்
அவள் கேட்டதைக் கொடுத்தேன்
விடைபெற்றுக் கொண்டேன்
நானும் நடந்தேன்
அவளும் நகர்ந்தாள்
திடீரென உணர்ந்தேன்
என் கைப்பை என்னிடமில்லை
என் தாயின் நோயைப் போக்க
வைத்த பணம் அதனுள்
அதை இழந்த பயம் என்னுள்
திரும்பிப் பார்த்தேன்
அவள் என் கண் படவில்லை
பதற்றம் குழப்பம்
என்ன செய்வதறியாது நின்றேன்
மீண்டும் வந்தாள்
புன்னகை கொண்டாள்
என் பையைத் தந்தாள்
எல்லாம் சரியா இருக்கிறதா என்றாள்
நீ தான் கடவுள் என்றேன்
அக்கடவுளைப் போற்றினேன்