
இயற்கை பல வியக்கத் தக்க விஷயங்களையும் அதிசயங்களையும் கொண்டது. அப்படிப்பட்ட அதிசயங்களில் ஒன்றுதான் ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஆண்டுதோறும் நடக்கும்
” பெரும் இடம்பெயர்வு”. இது உலகில் உள்ள ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அது என்ன” பெரும் இடம்பெயர்வு “?
வைல்டி பீஸ்டின் (Wildebeest) இடம் பெயர்தல் தான் அது.
வைல்டி பீஸ்ட் ஒரு நீண்ட தலை, தாடி, சாய்வான பின்புறம், மற்றும் எருது போன்ற கொம்புகள் கொண்ட பெரிய வகை ஆப்பிரிக்க மான். இது சுமார் 2.4 மீட்டர் (8 அடி)வரை வளரவும், 270 கிலோ கிராம் (600 பவுண்டுகள்) எடையுள்ளதாகவும் இருக்கும்.கருப்பு மற்றும் நீல வண்ணங்களில் காணப்படும். பொதுவாகத் தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் செரெங்கேட்டி சமவெளிகளில் வாழ்கிறது. தான்சானியா மற்றும் கென்யா நாடுகளில் பரவியிருக்கும் சமவெளிகள் , சவன்னா புல்வெளிகள் மற்றும் அங்குள்ள திறந்த வனப் பகுதிகளில் மேய்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வைல்டி பீஸ்ட்கள் மழைக்காலத்தின் முடிவில் (வழக்கமாக மே, அல்லது ஜூன் மாதங்களில்) பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடி வடமேற்கு திசை நோக்கி இடம்பெயர்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் என்ற அளவில் கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர்
தூரத்தை அது கடக்கின்றது.
இதில் மேலும் ஒரு அதிசயம் என்னவென்றால் வைல்டி பீஸ்டுடன் சேர்ந்து மிக அதிக அளவில் வரிக்குதிரைகளும் இந்த இடம் பெயர்வு நிகழ்வில் கலந்து கொள்கிறது.
இந்த இடம்பெயர்வு பயணம் பல ஆபத்தான சவால்கள் நிறைந்தது. ராட்சச முதலைகளைக் கொண்ட நதிகளைக் கடக்க வேண்டும், வேட்டையாடிக் கொல்வதில் நிகரற்ற திறமை கொண்ட சிங்கங்களையும், ஹைனாக்களும் எதிர்கொள்ள வேண்டும். இடம்பெயர்வு செய்யும் வைல்டி பீஸ்ட்களும், வரிக்குதிரைகளும் தன் எதிரிகளை விட அதிக அளவில் இருப்பதாலே இச் சாவலை ஓரளவு எதிர்கொள்ள முடிகிறது. இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெயர்வு நிகழ்வின்போது சுமார் 2,50,000 வைல்டி பீஸ்ட்களும், 30,000 வரிக்குதிரைகளும் சிங்கம், ஹைனா மற்றும் முதலைகளுக்கு இரையாகிறது.
அது சரி எப்படி வைல்டி பீஸ்ட்களும் வரிக்குதிரைகளும் நட்பு கொண்டாடி இந்த இடம் பெயர்வு நிகழ்வில் ஆண்டுதோறும் கலந்து கொள்கிறது ?
இது இரண்டும் உணவுக்காக ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டுக் கொள்வதில்லை. இவை ஒரே தாவரத்தின் வெவ்வேறு பகுதிகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டது. மேலும் ஒன்று வெறுப்பதை மற்றொன்று விரும்பிச் சாப்பிடும் தன்மையையும் கொண்டது. பிறகு என்ன பிரச்சனை சேர்ந்திருப்பதில்.
இயற்கை வியக்கத்தக்கது தானே ?