வாசுகி – வள்ளுவன்
ஆண்டு 2050 : ஒரு பிரபல நிறுவனத்தின் மிகவும் நம்பத்தக்கக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு விவாகரத்து விகிதம் குறைந்துள்ளதாகவும், 98% இளைய தலைமுறையினர் தங்களின் திருமண வாழ்க்கை இனிதே செல்வதாகவும் அது கடைசி வரை உறுதியாக நீடிக்கும் என்றும் மகிழ்ச்சியாகத் தெரிவித்திருந்தனர்.
அப்படிப்பட்ட ஒரு இளம் தம்பதியரைப் பற்றிய கதை இது.
அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி. வாசுகி தன் உறக்கம் களையப் படுக்கையிலிருந்து எழுவதா ?வேண்டாமா? என்று யோசித்தவாறே படுத்திருந்தாள்.
அவளது அன்புக் கணவன் வள்ளுவன் அவளுக்குப் பிடித்த காப்பியுடன் அருகில் வந்தான். காப்பியின் மணம் அவளை ஈர்த்தது. மெல்ல எழுந்து படுக்கையில் அமர்ந்தாள். வள்ளுவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அதே மாறாத புன்னகை அவளை அவன் கண்ட நாள் முதல்.
காப்பியை அவள் ரசித்துக் குடிக்க வள்ளுவன் படுக்கையை ஒழுங்கு செய்துவிட்டு அவளுடைய தோள்களைப் பிடித்து மெதுவாக மசாஜ் செய்து விட்டான்.அவள் தலைமுடியை மெதுவாக வருடியபடி அன்றைய முக்கிய செய்திகளை எல்லாம் அவளுக்குத் தெளிவாக விவரித்தான்.
பிறகு அவள் குளிக்க வசதியாக வாட்டர் ஹீட்டரை ஆன் செய்து சரியான வெப்ப நிலையில் நீர் உள்ளதா என்பதை உறுதி செய்தான். அவள் குளியல் அறைக்குச் செல்லும் முன் அன்றைய காலை உணவுக்கு என்ன வேண்டும் என்று அவன் அன்பாகக் கேட்க, அவள் பூரி கிழங்கு என்று கூற உடனே அதைச் செய்வதற்கான வேலையைத் தொடங்கினான்.
அவள் குளித்து முடித்து வந்ததும் அவள் கேட்ட பூரி கிழங்கு சூடாக மேஜையில் அவளுக்காகக் காத்திருந்தது. எப்போதும் வள்ளுவன் அவள் விருப்பத்திற்கு மாறாக எதையுமே செய்வதில்லை. அவர்கள் திருமணம் ஆன நாள் முதல் அவர்களுக்கிடையே எந்த ஒரு கருத்து வேறுபாடும் வந்ததில்லை. அதற்கு என்றுமே வள்ளுவன் இடம் கொடுத்ததும் இல்லை.
வாசுகி பூரி கிழங்கை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று அந்தச் செய்தி அவளுக்கு நினைவுக்கு வந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அவளுடைய பெற்றோர்கள் அன்று அவளைப் பார்க்க வருவதாகக் கூறியிருந்தார்கள். அதை நினைத்தவுடன் அவளுக்கு ஒரு திடீர் படபடப்பு.
வாசுகி – வள்ளுவன் திருமணத்தை அவளின் பெற்றோர்கள் ஏற்கவில்லை. வேறு வழியின்றி அவர்களை எதிர்த்துத் தான் அவள் வள்ளுவனைக் கைப்பிடித்தாள்.
வள்ளுவனுக்கோ அந்த மாதிரிப் பிரச்சனை ஏதும் இல்லை, ஏனென்றால் அவன் ஒரு ஒண்டிக்கட்டை.
அவர்களுக்குத் திருமணம் ஆகி நான்கு வருடம் உருண்டோடியது. இந்த நான்கு வருடத்தில் வள்ளுவன் வாசுகியை உன்னிப்பாகக் கவனித்து, அவளுடனே இருந்து அவள் விருப்பு, வெறுப்பு மற்றும் அவளின் அனைத்து குணாதிசயங்களையும் அவளைவிட அவன் நன்றாகவே புரிந்து கொண்டான்.
எப்படியோ ஒரு வழியாகச் சமாதானமாகி இன்று அவளைப் பார்க்க அவளின் பெற்றோர்கள் வருகிறார்கள். அவள் இதைப் பற்றி வள்ளுவனிடம் கூறியபோது அவனிடம் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை. அவன் பாட்டுக்கு அவன் வேலையைச் செய்துகொண்டிருந்தான்.
“வாசுகி நீ ஏன் டென்ஷன் ஆகிற ? அத்தை மாமா வந்தவுடன் நான் சமாளித்துக் கொள்கிறேன், எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் நீ கவலைப்படாமலிரு ” என்றான்
அது அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.
அன்று மாலை சொன்ன நேரத்தில் வாசுகியின் அப்பாவும் அம்மாவும் வந்து சேர்ந்தார்கள். வள்ளுவன் அவர்களை நல்ல முறையில் வரவேற்று அவர்களின் அனைத்து தேவைகளையும் முன்கூட்டியே உணர்ந்து அவற்றையெல்லாம் செவ்வன்ன செய்து முடித்தான்.
வாசுகியின் அப்பா நன்கு அறிந்த இயற்கை விவசாய முறைகளைப் பற்றி நிறைய புது விஷயங்களை அவரே வியக்கும் அளவுக்குப் பேசினான். அதுபோல் அவளுடைய அம்மாவுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களான கல்கி, சுஜாதா மற்றும் ஜெயகாந்தன் பற்றி மணிக்கணக்கில் உரையாடினான். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை அவனே தயாரித்துப் பரிமாறினான்.
வாசுகியின் பெற்றோர்களுக்கு வள்ளுவனை மிகவும் பிடித்து விட்டது. அவர்களது நேர்பட அதை கூறாவிட்டாலும் வாசுகியால் அதை உணர முடிந்தது.
வாசுகி வள்ளுவனைத் தனியே அழைத்து எனது பெற்றோரைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்க
“உங்கம்மா ரொம்ப நல்லவங்க, அவங்களை 100% நம்பலாம். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. அவர்களின் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு ரூபாய் 25 ஆயிரம். அவர்கள் கடைசியாகப் பார்த்த படம் பொன்னியின் செல்வன் “என்று வள்ளுவன் தொடர
வாசகி குறிக்கிட்டு “அம்மாவைப் பற்றிச் சொன்னது போதும் அப்பாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் ?” என்று கேட்க
உனது தந்தையை 50% நம்பலாம்.
அவருக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை வியாதி உள்ளது. அவர் உடல் மொழியைக் கூர்ந்து கவனிக்கும்போது அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறதது என்று அவன் மெதுவாகத் தன் பேச்சை நிறுத்த…..
வாசுகி சிந்திக்கலானாள்
வள்ளுவனின் கணிப்பு எப்போதும் மிக மிகச் சரியாகத் தான் இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும் இருந்தும்
ஏன் என் அப்பாவை 50% தான் நம்ப முடியும் என்று கூறுகிறாய் ? என்று வாசுகி கேட்க
வள்ளுவன் திரும்பியும் பேசத் தொடங்கினான்
உன் அப்பா தனது இளநிலை பட்டப்படிப்பை முடித்து வேலையில்லா இருந்த சமயம் முதுநிலை பட்டப்படிப்பு படித்ததாக ஒரு போலி மார்க் ஷீட்டை உருவாக்கி அதை வைத்து ஒரு நிறுவனத்தில் வேலை பெற்று 30 ஆண்டுகள் அங்குப் பணியாற்றி ஓய்வு பெற்றார்
இதுவரை அவர் எட்டு முறை தம் வருமானம்குறித்த தவறான தகவல்களைப் பதிவு செய்து வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளார்
மேலும் அவரைப் பற்றி நான்கு அதிர்வுட்டும் தகவல்களை வள்ளுவன் மெதுவாக வாசுகி காதில் சொல்ல வாசுகி மௌனமானாள்.
அடுத்த நாள் இரவு உணவு முடித்து அனைவரும் ஒரு சேர உட்கார்ந்த பேசிக் கொண்டிருக்கும்போது வாசகி திடீரென்று அவள் தந்தையைப் பார்த்து அவரின் முதுநிலைப் பட்டம்குறித்த உண்மையைப் கேட்டாள்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவளின் தந்தை வடவடத்துப் போனார்…..அவர் ஏதும் கூறவில்லை இருந்தும் வாசுகிக்குப் பதில் கிடைத்தது.
ஏதோ ஒரு யோசனையுடன் வாசுகி வள்ளுவனை அழைத்துக் கொண்டு தன் படுக்கை அறைக்குச் சென்று படுக்கையில் படுக்க வள்ளுவன் ஏ சி யை ஆன் செய்து, விளக்கை அணைத்துவிட்டு, அவளைப் பார்த்த வாரே படுக்கை அருகே நின்றுகொண்டிருந்தான்.
பின்குறிப்பு :
வள்ளுவன் ஒரு அல்ட்ரா சூப்பர் ஸ்கேனிங், தரவுச் செயலாக்கம், பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஒரு மிகச் சக்தி வாய்ந்த மனித உருவ ரோபோ. இருந்தும் வாசுகி வள்ளுவனுடன்
மிகச் சந்தோஷமாகத்தான் வாழ்கிறாள்.