
சங்கரன் அன்று ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பும் நாள்.
கிட்டத்தட்ட மூன்று மாத காலம் அந்தத் தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி தன் இருதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 80, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
நல்ல முறையில் உடல் தேறி இருந்தாலும் அவர் மனதுக்குள் ஒரு பெரும் கவலை. அது தன் மருத்துவச் செலவைப் பற்றித் தான். மருத்துவ காப்பீடு வைத்திருந்தும், தன் ஒரே மகன் நல்ல நிலையிலிருந்தும் தனக்கான செலவுகளைத் தன் சேமிப்பிலிருந்தே சமாளித்துவிட வேண்டும் என்று விரும்பினார். தன் சேமிப்பு அதற்குப் போதுமா ? என்ற ஐயம் அவர் மனதில்.
அந்த ஆஸ்பத்திரி சற்று வினோதமாகத் தெரிந்தது அவருக்கு. மூன்று மாதம் அவரை அங்குத் தங்க வைத்து இருமுறை அறுவை சிகிச்சை செய்தும் அந்நாள்வரை ஒரு பைசா கூட அவரிடமிருந்து வசூலிக்கவில்லை.
பலமுறை அவர் அதைப் பற்றிக் கேட்டும்
டிஸ்சார்ஜ் ஆகும்போது பார்த்துக்கொள்ளலாலாம் என்று அந்தத் தலைமை மருத்துவர் செல்வன் கூறிவிட்டார். அவர்தான் அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரும் கூட.
சங்கரனின் மனைவி அவர் அருகில் நிற்க அவருடைய மகன் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த ஆஸ்பத்திரியின் ஊழியர் ஒருவர் ஒரு உறையை எடுத்து வந்து சங்கரனிடம் கொடுத்தார்.
அதை வாங்கிய சங்கரனின் கை நடுங்கியது. அவருக்கு அதைத் திறந்து பார்க்கும் தைரியம் இல்லை. மருத்துவக் கட்டணம் எவ்வளவாக இருக்கும் என்ற பயம். தன் மறைந்த தாயை நினைத்து பிரார்த்தித்தபடி தன் மனைவியிடம் அதைக் கொடுத்துத் திறக்கச் சொன்னார்.
அதைப் பிரித்துப் படித்த சங்கரனின் மனைவி குழப்பம் அடைந்தார், அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதைப் பார்த்த சங்கரன் பொறுமை இழந்து அந்த உறையை அவசரமாகப் பிடுங்கி படிக்கல்லானார்.
” ஐயா, தாங்கள் செய்த உதவியை எப்படி நான் மறப்பேன். உங்களால் தான் நான் இன்று ஒரு மருத்துவர். தங்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்களைப் போல நல்ல மனம் படைத்தவரிடம் எப்படி நான் பணம் வாங்க முடியும். என் வாழ்நாள் முழுவதும் நான் தான் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.
நல்லபடியாக வீடு சென்று ஓய்வு எடுங்கள். விரைவில் உங்களை வீட்டில் வந்து சந்திக்கிறேன்.
நன்றி
மருத்துவர் செல்வன்
S/o திரு. ராமநாதன் (சிவகாசி)”
இதைப் படித்த சங்கரனின் கண்களிலிருந்து நீர் வடிந்தது. ராமநாதன் (சிவகாசி) என்ற பெயர் பல நினைவலைகளை அவருக்குள்
எழுப்பியது.
தன் கண்களை மூடியவாறு அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தார். அவர் மனதில் இருபது வருடங்களுக்கு முன் சிவகாசியில் நடந்த சம்பவம் திரைப்படமாக ஓடியது.
சங்கரன் தன் வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரம் முன் ராமநாதன் ஒரு வேலை நிமிர்த்தமாக அவரைச் சந்திக்க வந்திருந்தார்.
சங்கரன் அப்போது அந்தப் பகுதியின் மின்சாரத் துறையின் தலைமைப் பொறுப்பிலிருந்தார். ஊழல் மிகுந்த அத்துறையில் மிகவும் நேர்மையாக இருந்த அபூர்வ வெகு சிலரில் அவரும் ஒருவர்.
ராமநாதனும் மிக நல்லவர், நேர்மையானவர் சிவகாசியில் ஒரு பெரிய தொழில் குழுமத்தின் – சன்லைட் ஃபயர் வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட நிறுவனத்தின் மேலாளர். அந்த நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைகளின் மின் இணைப்பிற்காக அடிக்கடி சங்கரன் அவர்களை அவர் சந்திப்பதுண்டு. இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது.
அப்படி ஒருநாள் ராமநாதன் சங்கரனைச் சந்தித்தபோது
“என்ன ராமநாதன் எப்படி இருக்கிறீர்கள்? ” என்று சங்கரன் கேட்க
“இருக்கேன் சார்” என்றார் ராமநாதன்
” என்னாச்சு ராமநாதன் பதில்ல ஒரு புத்துயிர் இல்லையே”
” உங்ககிட்ட சொல்கிறதுக்கு என்ன சார். பையன் மருத்துவம் படித்து டாக்டர் ஆகவேண்டுமென்று நிறைய ஆசைப் படுகிறான், பிளஸ் 2 ல நல்லா தான் படிச்சான் நல்ல மதிப்பெண் எடுத்தான் இருந்தும் 0.5% குறைவா இருந்ததினால் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய்டுச்சு ” என்றார் ராமநாதன்
“அதனாலென்ன ராமநாதன் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விட வேண்டியதுதானே. உங்கள் முதலாளி திரு. சொக்கலிங்கம் அவர்களே இரண்டு மருத்துவக் கல்லூரியின் சொந்தக்காரர் ஆயிற்றே. நீங்கள்தான் இந்தக் குழுமத்தில் ஏறத்தாழ முப்பது வருடமாக வேலை செய்து இருக்கிறீர்கள் இந்தக் குழுமத்தின் வளர்ச்சியில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. நீங்கள் ஒரு மருத்துவ சீட்டு கேட்டால் சொக்கலிங்கம் மறுக்கவா போகிறார்”
” சார் நானும் அப்படித்தான் நினைத்து எங்க முதலாளியிடம் போய்க் கேட்டேன். நம்ம பழக்கம் வேற தொழில் வேற. மத்தவங்களிடம் 75 லட்சம் வாங்குகிறேன் ஒரு சீட்டுக்கு. உங்களுக்கு வேண்டுமென்றால் 60 லட்சத்துக்கு முடிக்கலாம். போய்ப் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று கறாரா சொல்லிவிட்டார்” என்றார் ராமநாதன் வருத்தத்துடன்.
ஒரு நிமிடம் யோசித்தார் சங்கரன். தான் ஓய்வு பெறுவதற்குள் ராமநாதனுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
” ராமநாதன் நீங்க எதற்கும் கவலைப்படாதீர்கள் போய்யிட்டு நாளைக்கு வாங்க என்ன பண்றதுன்னு யோசித்து வைக்கிறேன்” என்று கூறி ராமநாதனை வழியனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் தன் அலுவலகத்திலிருந்தபோது ராமநாதனைச் சொக்கலிங்கம் தன் அறைக்கு வருமாறு அழைத்தார்.
” அந்தச் சங்கரன் ரொம்ப நல்ல மனுஷன் நினைத்தேன் ஆனால் நேற்று சாயந்தரம் என்னைச் சந்தித்து நம் புதிய தொழிற்சாலைகளின் மின் இணைப்புக்கு லஞ்சமாக 60 லட்சம் ரூபாய் பணம் கேட்கிறார். தான் ஓய்வு பெறுவதற்கு முன் எல்லா ஒப்புதலையும் அளிப்பதாகக் கூறுகிறார். ஓய்வு பெறும் நேரத்தில் கொஞ்சம் காச சேர்க்க ஆசைப்படுகிறார்.
நான் யோசித்துப் பார்த்தேன் நமக்குக் காசு கொடுத்து வேலை வாங்குவது ஒன்றும் புதிதில்லை நமக்கு மின்னிணைப்பு தான் முக்கியம். அவர் வேறு யாரையும் நம்பத் தயாராக இல்லை உங்களிடம் 60 லட்ச ரூபாய் கொடுத்தனுப்பச் சொல்லியிருக்கிறார். கேசியர் கிட்ட சொல்லிவிட்டு பணத்தை வாங்கிட்டு போய்க் கொடுத்துக் காரியத்தை முடித்து விடுங்கள்” என்று ஆணையிட்டார் சொக்கலிங்கம்.
ராமநாதனுக்கு நம்பமுடியவில்லை சங்கரனா இப்படி ? என்று குழப்பம் அடைந்தார்
இருந்தும் 60 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு சங்கரனைச் சந்தித்தார்.
” என்ன 60 லட்சம் வந்துடுச்சா ?” என்று கேட்டார் சங்கரன்
” பையில இருக்கிறது” என்றார் ராமநாதன்
” அதை அப்படியே கொண்டு போய்க் கல்லூரியில் கட்டிவிட்டு உங்கள்
பையனுக்கு மருத்துவ சீட்டு வாங்கிடுங்க. உங்கள் புதிய தொழிற்சாலை மின் இணைப்புக்கான ஆணையை நான் ஏற்கனவே கையொப்பமிட்டு விட்டேன். அதையும் வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் பையனுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள். எப்படி அவங்க பணத்தை எடுத்து அவங்களுக்கே கொடுத்த சீட்டு வாங்கிட்டோமல்ல ” என்று முடித்தார் சங்கரன்
இருவரும் சிரித்தனர்.
சங்கரன் தன் வாழ்நாளில் வாங்கிய அந்த ஒரே ஒரு லஞ்சத்தினால் தான் இன்று செல்வன் மருத்துவராக இருக்கிறார்.