
பல ஊர்கள் கடந்து
வெகுதூரம் நடந்து
அத்தேசத்தில் தன் கால் பதித்தான்
அந்தப் புத்தப்பித்தன்
அவன் வருகையை அறிந்து
வந்தான் அவனைக் காண
அத்தேசத்து மன்னன்
அந்த புத்தப்பித்தனைப்
பார்த்தான் மன்னன்
பித்தன் போல் இருந்தாலும்
ஏதோ ஒரு ஈர்ப்பு அவனிடம்
என் மனம் என்னிடம்
அடங்க மறுக்கிறது
யாது செய்வேன் நான்?
என்றான் மன்னன்
இன்று போய்
வா நாளை அதிகாலை
உன் மனதுடன்
சொல்கிறேன்
அதை அடக்கும் ரகசியத்தை
என்றான் அந்த புத்தப்பித்தன்
திரும்பிச் சென்றான் மன்னன்
இரவு தூங்க இயலவில்லை
அதிகாலை வரை காத்திருந்து
காணச் சென்றான்
அந்த புத்தப்பித்தனை
உன் மனதுடன் வந்தாயா ?
என்று அந்த புத்தப்பித்தன்
மன்னனை வரவேற்றான்
என்ன கேள்வி இது
என் மனம் எப்போதும்
என்னுடன் தானே இருக்கிறது
என்றான் மன்னன்
ஓ அப்படியா?
இங்கே சற்று அமர்ந்து
உன் கண்களை மூடி
உன்னில் உன் மனமிருக்கும்
இடத்தை எனக்குக் காட்டு
அதை அடக்கி விடுகிறேன்
என்றான் அந்த புத்தப்பித்தன்
வெகுநேரம் தேடியும்
அகப்படவில்லை அவன் மனம்
அந்த மன்னனுக்கு
அடைந்தான் சரண்
அந்த புத்தப்பித்தனிடம்
மன்னனுக்கு மனதைப்
பற்றிப் போதித்தான்
மனம் என்று ஒன்று இல்லை
அது வெறும் எண்ணங்களின் கலவையே
அது நாம் நடப்பது போல்
ஒரு செயல் வடிவம் அவ்வளவே.
நாம் நடக்காமல் நின்றுவிட்டால்
நடை அது நின்று போகும்
அதுபோல்
நம் எண்ணங்களை நிறுத்தி விட்டால்
மனமது மறைந்துபோகும்
பிறகு ஒன்றும் இல்லாததை
நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்.
அதுவாகவே அது அடங்கிவிடும்
எண்ணங்களை எவ்வாறு
நிறுத்த முடியும் ?
என்று கேட்டான் மன்னன்
உன் நனவு விழிப்புணர்வுடன் இருந்தால்
நீ எண்ணும் எண்ணங்களை நீ அறிவாய்
நீ அதற்குச் சாட்சியாவாய்
உன் எண்ணங்களை நீ கவனிக்கும்போது
அது வலுவிழந்து மறைந்துவிடும்
மனம் இல்லாத ஒரு நிலை வந்துவிடும்
அதுதான் உன் உண்மை நிலை என்று
உனக்குப் புரிந்துவிடும்
என்று சொல்லி முடித்தான்
புத்தப்பித்தன்.
ஒரு பெரும் உண்மையை உணர்ந்தான்
மனம் தரும் தொல்லைகள்
இனி அறவே இல்லை
என்று மகிழ்ந்தான் மன்னன்
யார் அந்த புத்தப்பித்தன்?
அவன் ஒரு பல்லவ நாட்டு இளவரசன்
புத்தமத கொள்கைகளைச்
சீன தேசத்துக்கு எடுத்துச் சென்றவன்
அங்கு அனைவரின் கவனத்தையும் தன்னிடம் ஈர்த்தவன்
புத்த மதம் சீன தேச மதம்
ஆவதற்குக் காரணமானவன்
இங்கிருந்து அங்குச் சென்று
புத்த தர்மத்தைப் போதித்த
போதிதர்மன்