சும்மா

“சும்மா இருடா” என்று அவன் தாய்
அதட்ட

கோபம் வந்தது அவனுக்கு
சும்மா சொல்லக் கூடாது
அந்த வயதில் அப்படி ஒரு கோபம்

அந்த மரத்தடிக்கு சென்றான்
சும்மா சிறிது நேரம் உட்கார

“என்ன ஆச்சு ?” என்றான்
அவனை அங்கு கண்ட நண்பன்
“சும்மா வந்தேன்” என்றான் இவன்
“சும்மா சொல்லாதே” என்றான் அவன்

“இப்படித்தான் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பான் இவன்” என்றான் மற்றொரு நண்பன்

“எதுவானாலும் சும்மா சொல்லு கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம்” என்றான் மற்றொருவன்

“கொஞ்ச நேரம் எல்லோரும் சும்மா இருக்கிறீர்களா?” என்றான் இவன்

“உன் கஷ்டம் எங்கள் கஷ்டம் எப்படி எங்களால் சும்மா இருக்க முடியும் ?” என்றான் மற்றொருவன்

ஒன்றுமில்லை சும்மாதான் இங்கே வந்தேன் என்று கூறி தன் வீட்டுக்கே சென்று சும்மாயிருக்க முடிவு செய்தான் அவன்.

வள்ளி அல்லது தேவானை

Photo : R Rangaraju

அந்த வீட்டிற்குப்
புதிதாக வந்தவளின்
பெயர் நிச்சயம்
வள்ளி அல்லது தேவானை

நேற்றுவரை
தூதுவந்த புறா வரவில்லை
மயில் வந்துள்ளது

வேண்டும்

விடாமுயற்சி வேண்டும்
கடல் அலைபோல

சில கொடுமைகளை அழித்திடப்
பொங்கி எழ வேண்டும் சுனாமி போல

என்னுள்ளே அமைதி வேண்டும்
நடுக்கடல் போல

பல செயலை முடிக்கும் ஆற்றல் வேண்டும்
அதிநவீன கணினிபோல

என் செயலால் மக்கள் மனம் நிறைய வேண்டும்
எடுக்க எடுக்கக் குறையாத ரிசர்வ் வங்கியில் உள்ள பணம் போல

என்னைப் பார்த்தாலே பிறருக்கு
நம்பிக்கை வர வேண்டும்
தினம் உதிக்கும் கதிரவன் போல

புதிய இறைவனை உருவாக்க வேண்டும்
அதை அனைவரும் பதிவிறக்கம் செய்து
பயன்படுத்த வேண்டும்
எல்லைகள் இல்லா
தொல்லைகள் அற்ற
அன்பு கலந்த
அமைதி நிறைந்த
புதியதோர் உலகம் உருவாக வேண்டும்