
நம் ஆறறிவு எங்குப் போச்சு ?
சுற்றுச்சூழலை நாம்
கெடுத்ததாலே தானே
கரோனா வந்து பேரழிவாச்சு.
விலங்குகளுக்கான அதன்
வாழ்விடத்தைக் குறைத்தது யாரு ?
அதனாலேயே பல நோய்க் கிருமிகள் பரவுவதற்கான நிலைமையை உருவாக்கியது யாரு ?
காட்டை அழித்து நாடாகும்
பேராசையைக் கொண்ட
நாம் தான் அது
நல்லா பாரு.
வளர்ச்சி வளர்ச்சி என்று
எல்லாம் மாறியாச்சு
உலகம் முழுக்க குப்பையாச்சு
அது ஆழ்கடல் வரை போய்யாச்சு
இமயமலையும் ஏறியாச்சு
யாராலே இது எல்லாம் ஆச்சு?
தேவைக்கு அதிகமாக நாம் ஆசைப்பட்டு
அதனாலே நம் சுற்றுச்சூழல் அவதிப்பட்டு
இந்த நிலைமைக்கு வந்தாச்சு.
நிலக்கரியையும் கச்சா எண்ணெய்யையும்
கண்டுபிடித்து
வாகனம் பல வடிவமைத்து
அது ஓட ஓட எண்ணெய்யை எரித்து
நிலக்கரியை எரித்து மின்சாரம் எடுத்து
உலக வெப்ப நிலையை ஏத்தியாச்சு
எல்லாம்
அளவுக்கு மீறி நாம் சென்றதாலே
இயற்கையை நாம்
வெல்ல நினைத்ததாலே
நடந்ததெல்லாம் நடந்து போச்சு
அதை மாற்ற முடியாது என்று
தெரிஞ்சு போச்சு
இனி என்ன செய்யலாம் என்று
நான் யோசித்தபோது
என்னுள் சில கேள்விகள் எழுந்து போச்சு
அதை நீயும் கொஞ்சம் யோசித்துப்பாரு
சுற்றுச்சூழலை அழித்து
மொத்த உள்நாட்டு உற்பத்தியை
உயர்த்தி என்ன பயன் ?
அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்து
நம் மதிநுட்பத்தை இழந்து என்ன பயன் ?
புது வசதிகள் நிறைய வந்தும்
அதிருப்தி இருந்து
என்ன பயன் ?
உழைத்து உழைத்து
வாழ்வை ரசிக்க மறந்து
என்ன பயன் ?
செயற்கையை மதித்து
இயற்கையைத் துறந்து
என்ன பயன் ?
பலர் வந்துபோகும் இவ்வுலகத்தில்
நீ இருக்கும்போது சுற்றுச் சூழலுடன்
வம்பு செய்து
என்ன பயன் ?
நாம் வாழ மற்றதெல்லாம்
வீழ்ந்தால் என்ன
என்று நினைத்து என்ன பயன் ?
இக்கேள்விகளுக்கு விடை கண்டால்
பல்லுயிர் வீழ்ச்சியை நிறுத்த முடியும்
காலநிலை மாற்றத்தைத் தணிக்க முடியும்
உலக மக்கள் வாழ்வாதாரத்தை
மேம்படுத்த முடியும்
உலக்கச் சுற்றுச்சூழலைக் காக்க முடியும்
சுற்றுச்சூழல் காப்பது நம் கடமை
இது இன்னும் புரியவில்லை என்றால்
அது நம் மடமை