
மடிக்கணினிகள், கைப்பேசிகள் மற்றும் இணையதளம் போன்ற நவீன தொழில் நுட்பங்கள் நம் வேலைப் பளுவை வெகுவாகக் குறைத்து நமக்குத் தேவைப்படும் நமக்கான நேரத்தை உண்மையிலே அதிகரிக்க வேண்டும். ஆனால் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால் இந்தத் தொழில்நுட்பங்கள், நாம் அறியாமலேயே நம்மிடமிருந்து நம் நேரத்தை மக அதிக அளவில் பறித்துக் கொள்கிறது.
சராசரியாக மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை நம்முடைய கவனம் உடனடி செய்திகள் (Instant messages), மின்னஞ்சல்கள் (Emails), தொலைப்பேசி அழைப்புகள் (Telephone calls) மற்றும் செய்வதற்கான காரிய பட்டியலின் நினைவூட்டல் (To do list alarms) போன்றவற்றால் தொடர்ந்து திசை திருப்பப்படுகிறது, சிதறப்படுகிறது.
சில ஆய்வுகளின் படி நாம் நம் ஒரு நாளின் வேலை நேரத்தில் 25 முதல் 50 சதவீதம் வரை இந்தக் குறுக்கீடுகளிலிருந்து மீண்டு வருவதற்காகவே பயன்படுத்துகிறோம்.
நம் நவீன சமூகத்தில் ஓயாது உழைப்பதும் எப்பொழுதும் ஏதாவது ஒரு விஷயத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பதும், மேலும் மேலும் ஏதாவது செய்ய முற்படுவதும் தான் பெருமைக்குரிய செயலாகக் கருதப்படுகிறது.
சும்மா இருப்பது என்பது சோம்பேறிகளின் செயலாக, நம் வாழ்க்கை நடைமுறைக்கு உகந்ததா ஒன்றாகக் கருதப்படுகிறது.
நீடித்த, சீரற்ற வேலைப்பளு காலப்போக்கில் நம் மூளையின் ஆற்றலையும் உடல் நலத்தையும் பாதிப்பதோடு நில்லாமல் நம் படைப்பாற்றல், நம்மை நாமே உணரும் ஆற்றல் மற்றும் நாம் சமூகம் சார்ந்து வாழும் திறனை வெகுவாகக் குறைக்கிறது.
அப்ப என்னதான் பண்ணுவது ?
சமீபத்திய மூளைகளைப் பற்றிய சில ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால் நாம் எதுவும் செய்யாமல் இருக்கும் நேரங்களில் தான் நம்முடைய மூளை சிறப்பாகச் செயல்படுகிறது என்று.
நீங்கள் எப்போதாவது ஐந்து நிமிடங்கள் அமைதியாகச் சும்மா உட்கார முயன்று இருக்கிறீர்களா? அது மிகவும் கஷ்டமான சங்கடமான காரியம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
நாம் நம்மை சும்மாயிருக்க அனுமதிப்பதே இல்லை. நாம் நம் நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் எதையாவது செய்து அதை நிரப்பத் தான் முயல்கிறோம். அதற்கு உதவ இன்று சமூக ஊடகங்கள் நிறையவே இருக்கிறது.
நாம் நம்முடைய படைப்பாற்றல் அறிவுத்திறன், சரியான முடிவெடுக்கும் திறமை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள விரும்பினால் சும்மா இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
சும்மா இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறும்போது செயல் ஏதும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பது என்று அர்த்தம் அல்ல. அது நம் செயல் நிலைக்கும், செயலற்ற நிலைக்கும் இடையே ஒரு சமநிலையைக் கண்டறிவது.
நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கணமும் உற்பத்தித் திறன் வாய்ந்ததாகவும், நாம் நினைத்தபடி தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில சமயம் நம் வாழ்க்கை வெறுமையாக இருப்பதிலும் எந்தத் தவறுமில்லை.
பெரும்பாலான சமயம் நாம் சும்மா இருக்கும் போதும், மிகச் சாதாரண விஷயங்களில் ஈடுபடும் போதும் தான் நமக்குச் சிறந்த யோசனைகளும், நம் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கின்றன. இதை நான் பலமுறை என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.
நாம் சும்மா இருப்பது மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் எந்தத் தீமையும் விளைவிக்கக் கூடாது அவ்வளவுதான்.
எப்படி சும்மா இருக்கப் பழகுவது ?
- சிறியதாகத் தொடங்குங்கள் ஒன்றும் செய்யாமல் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் முதலில் ஓரிடத்தில் அமர்ந்து பழகுங்கள். பழகப் பழக நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
- ஒவ்வொருவருக்கும் சும்மா இருப்பது என்பது வெவ்வேறாக இருக்கலாம். ஒருவருக்கு அது சும்மா உட்கார்ந்து ஜன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாக இருக்கலாம். மற்றொருவருக்குக் கண்களை மூடி அவருக்குப் பிடித்தமான இசையைக் கேட்பதாக இருக்கலாம். வேறு ஒருவருக்கு ஓரிடத்தில் அமர்ந்து தன்னை மறந்து ஒரு புத்தகத்தை வாசிப்பது ஆக இருக்கலாம்.
எந்த ஒரு குறிப்பிட்ட முடிவும் இல்லாமல் செய்யும் ஒரு சாதாரண செயலாகவும் இருக்கலாம். - ஒரு இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் நடப்பதும் அல்லது அங்கு அமர்ந்தது இயற்கையை ரசிப்பதும் ஒருவகை சும்மா இருப்பதுதான்.
- தொலைக்காட்சி, கணினி, கைப்பேசிகள் போன்ற அனைத்து கவனச் சிதறல்களைத் தினமும் ஒரு சில நேரம் தவிர்த்து நம்முடன் மட்டும் நாம் இருந்து பழகிக் கொள்ள வேண்டும்.
- தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு யோகா அல்லது தியானப் பயிற்சியில் ஈடுபடுவது.
- எந்தவொரு குற்றவுணர்வும் இல்லாமல்
சும்மா இருப்பதை நம் அன்றாட வாழ்வில் ஒரு வழக்கமாகக் கொள்ளுதல். - இறுதியாகச் சும்மா இருப்பது என்பது ஒரு நாள் பழகி ஒரே இரவில் தேர்ச்சி பெறக்கூடிய விஷயமல்ல. கொஞ்சம் கொஞ்சமாகத் தினமும் சும்மா இருக்கப் பழகித் தேர்ச்சி பெறக்கூடியது.
அவ்வாறு செய்தால் ஒவ்வொரு நிமிடமும் அதை அனுபவிக்கலாம் அதன் பலன்கள் பலவகைகளில் நம் வாழ்வில் வெளிப்படுவதை உணரலாம்.
வாங்க, இன்றுமுதல் சும்மா இருக்கப் பழகலாம்.