சூரிய ஒளி பிரகாசிக்கட்டும் காற்று வீசட்டும்.

சூரிய ஒளி பிரகாசிக்கட்டும் காற்று வீசட்டும்.

” இவ்வுலகின் கச்சா எண்ணெய்(Crude Oil) வளம் குறைந்து கொண்டே இருக்கிறது. இன்னும் நாற்பது – ஐம்பது வருடங்களில் எண்ணெய்யே இல்லாத உலகம் என்றாகிவிடும். இவ்வுலகின் மின்சாரம் மற்றும் போக்குவரத்து தேவைகளுக்கான மூலசக்தி ஒரு கேள்விக்குறியாக அமையும். அப்பொழுது இவ்வுலகம் முழு நிலைநிறுத்தம் அல்லது ஒரு இயங்கா நிலைக்கு வருவதற்கான சாத்தியம் வெகுவாக உள்ளது”  என ஒரு மிகப் படித்த பெரியவர் கூறக்கேட்டேன், 45 வருடங்களுக்கு முன் என் சிறுவயதில்.

அதைக் கேட்டதிலிருந்து என்னுள் ஒருவிதமான பயம். கச்சா எண்ணெய்யை விட்டா இவ்வுலகத்திற்குத் தேவையான சக்தியைத் தருவதற்கு மாற்று வழிகள் வேறு இல்லை என்று உறுதியாக நம்பினேன் அப்பொழுது. நான் வளர வளர அந்தப் பயம் என்னுள்ளே இருந்து வந்தது.

இப்பொழுது, இத்தருணத்தில் அதைப் பற்றி நான் சிந்திக்கும்போது அந்தப் பயம் எவ்வளவு அர்த்தமற்றது என்பது எனக்கு நன்கு புரிகிறது, சிரிக்க வைக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் இன்று உலகம் புதுப்பிக்கத் தக்க எரிசக்திக்கான ஆதார கூற்றுகளை (Renewable Energy Sources)நிறையவே கண்டுபிடித்திருப்பது தான்.

  1. புதுப்பிக்கத் தக்க ஆற்றல் கொண்ட சக்தி (Renewable Energy)என்றால் என்ன ?

இது இயற்கை மூலங்கள் அல்லது செயல் முறைகளிலிருந்து வருபவை, பயன்படுத்தப் பயன்படுத்தத் தொடர்ந்து நிரப்பப்படுபவை.

ஒரு உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் சூரிய ஒளி (Sun light)மற்றும் வீசும் காற்று (Blowing Wind).

  1. சூரிய ஒளி எவ்வாறு ஒரு மாற்றுச் சக்தியாகப் பயன்படுகிறது ?

சூரிய சக்தி என்பது பூமியில் மிகுதியாக இருக்கும் ஒரு ஆற்றல் வளம் ஆகும். இது பல வழிகளில்  கைப்பற்றப்பட்டுப்  பயன்படுத்தப்பட்டாலும், இனி வரும் காலங்களில் மின்சாரம் தயாரிக்க இது ஒரு மாபெரும் மாற்று எரிசக்தி ஆதாரமாக
அமையும். சூரிய ஒளியைச்  சூரிய தகடுகள் (Solar Panel) மூலம் மின்சாரமாக மாற்ற முடியும்.

  1. காற்றும் ஒரு புதுப்பிக்கத் தக்க எரிசக்திக் காண ஆதாரம் என்று கூறப்படுகிறதே ?

சூரியனின் சீரற்ற வெப்பத்தால் வளிமண்டலம் சூடாகுவதாலும், பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களினாலும் மற்றும் பூமியின் சுழற்சி ஆகியவற்றால் காற்று ஏற்படுகிறது.
மலைத்தொடர்கள் நீர் நிலைகள் மற்றும் தாவரங்கள் இவை அனைத்தும் காற்றின் ஒட்ட முறைகளைப் பாதிக்கின்றன. இதனால் பூமியில் சில இடங்களில் காற்றின் வேகம் அதிகமாகவும் சில இடங்களில் காற்றின் வேகம் குறைவாகவும் இருக்கின்றது.

காற்றின் வேகம் (Wind Speed)அதிகமாக உள்ள இடங்களில் காற்று விசையாழிகள் (Wind Turbine Generators) காற்றில் உள்ள இயக்க ஆற்றலை(Kinetic Energy) முதலில் இயந்திர சக்தியாக (Mechanical Energy)மாற்றுகின்றன பின் அதில் உள்ள ஒரு மின்னாக்கி (Generator) இயந்திர சக்தியை மின்சாரமாக மாற்றுகிறது.

  1. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் உண்டாகும் முக்கிய பலன்கள் யாவை ?

* புதை படிவ எரிபொருள்களிலிருந்து (Fossil Fuel) வரும் பைங்குடி வளிகள் / பசுமை இல்ல வாவுகள் (Greenhouse Gases) வெளியேற்றத்தை உருவாக்காத ஆற்றலைப் பெற்றது

  • காற்று மாசுபடுவதைக் கணிசமாகக் குறைக்கிறது.

*  கச்சா எண்ணெய் வளம் வெகுவாக இல்லாத நாடுகளின் எரிபொருள்கள் இறக்குமதி செய்யும் சார்பு நிலையை வெகுவாகக் குறைகிறது.

*  நாம் உபயோகிக்கும் மின்சாரத்தின் கொள்முதல் விலையைக் கணிசமாகக் குறைக்கிறது

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய விலை வாய்ப்புகளுக்கான தேவையை அதிகரிக்கிறது
  1. சூரிய ஆற்றலின் மூல வாய்ப்பு வளம் (Potential)எவ்வளவு ?

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் வருடம் 2000 – உலக எரிசக்தி மதிப்பீட்டில் சூரிய ஆற்றலின் வருடாந்தர ஆற்றல் 1,575 – 49,837 எக்சா ஜுல்கள்  (exajoules (EJ) என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மொத்த உலக எரிசக்தி நுகர்வை (வருடம் 2012யில் மொத்த உலக எரிசக்தி நுகர்வு 559.8 எக்சா ஜுல்கள் மட்டுமே)  விடப் பல மடங்கு அதிகம்.

  1. ஒரு காற்றாலை விசையாழியால் (Wind Turbine Generator)  எவ்வளவு மின்சாரம் தயாரிக்க முடியும் ?

ஒரு காற்றாலை விசயாழியின் மின் உற்பத்தித் திறன் அதன் அளவு மற்றும் அது நிறுவப்பட்டுள்ள இடத்தில் உள்ள காற்றின் வேகம் ஆகியவற்றைப் பொறுத்தது.
இன்று உலக அளவில் தயாரிக்கப்படும் காற்றாலைகள் 250-வாட் (watt) முதல் 15 மெகாவாட் (MW) வரை மின் மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது.

உதாரணத்திற்கு மூன்று மெகா வாட் திறன் கொண்ட ஒரு காற்றாலை  விசையாழி (Wind Turbine Generator) தமிழகத்தின் நல்ல காற்று வளமிக்க முப்பந்தல் போன்ற இடங்களில் நிறுவப்பட்டால் அதன் உற்பத்தி சராசரியாக 2500 – 3000 குடும்பங்களுக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் ஆற்றல் கொண்டது.

  1. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி இவ்வுலகிற்கு ஒரு பெரும் நம்பிக்கையைத் தருகிறது. இந்தப் புதிய பயணம் எதை நோக்கி நகர்கிறது ?

2050ஆம் வருடத்திற்குள் உலகின் அனைத்து மின்சார பயன்பாடுகளும் மற்றும் போக்குவரத்து தேவைகளுக்கும் 100% புதுப்பிக்கத் தக்க எரிபொருள் சக்தியைக் கொண்டு இயங்கும் முயற்சி நிறைவேறும்.  காலநிலை மாற்றம், மாசுக் கட்டுப்பாடு மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பெருமளவுக்கு அகன்று பொருளாதார கவலைகள் பெரும் அளவிற்கும் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு கவலைகள் அறவே மறைந்துவிடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s