
ஊரடங்கு நேரம்
ஊரே வெறிச்சோடி இருக்க
அவர் மட்டும் சாலையில் தனித்து நிற்க
யார் அவர் ?
பல ஊரடங்கு களை பார்த்தவர்
பல தலைவர்களைப் பாதுகாத்தவர்
பல தீவிரவாதிகளைச் சுட்டுப் பிடித்தவர்
பல உயிர் மிரட்டல்களை எதிர்கொண்டவர்
பல பதக்கங்களை வென்ற உயர் காவல்துறை அதிகாரி
அவரைப் பார்த்தபடி
வீட்டுக்குள் இருந்த அந்தச் சிறுவன்
ஊரடங்கு தடையை மீறி
சாலைக்கு வந்து விட்டான்
பயந்தபடி அவர் கையைத் தொட்டு
அவர் கவனத்தைப் பெற்று
தன் மனதிலிருந்து கேள்வியை
அவரிடம் கேட்டுவிட்டான்
உங்களுக்குப் பயமே கிடையாதா ?
ஏன் இல்லை பயம் எனக்கு
நானும் மனிதன் தானே
தைரியம் என்பது பயமில்லாதது அல்ல
அது பயத்தை உணர்ந்து
முழுமையாக அறிந்து
பின் அதை வெற்றி கொள்வதே
இதைத் தான் நீயும்
இப்பொழுது செய்தாய்
உனக்குள் பயம் இருந்தும்
அதையும் மீறி என்னிடம் வந்து
உன் கேள்வியைத் தந்து
விடையைப் பெற்று
உன் பயத்தை நீ வெற்றிகொண்டாய்
பயத்தை உணர்ந்து
முழுமையாக அறிந்து
பின் அதை வெற்றி கொள்வதே
தைரியம்