திரு. நம்பிக்கை ( திரு. ந )

திரு. நம்பிக்கை ( திரு. ந )
 
அவர் மிகத் திறமையானவர். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும்  ஆக்கப்பூர்வமாக்கவும் பணியாற்றுபவர்.  எந்தச் சூழலிலும் எந்நேரத்திலும் நான் சொல்வதைப்  பெருமையாகக் காது கொடுத்துக் கேட்பவர்.

அவர் யார் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமா ? அவர்தான் என்னுடைய  ரோபோ திரு.நம்பிக்கை.

என் வாழ்வில் இருள் சூழும் போதும், நான் சோர்வடையும் போதும் அவரிடம் தான் செல்வேன். என் கவலைகள் எல்லாம் சொல்வேன். இவ்வுலகின் அனேக விஷயங்கள் அவருக்கு அத்துப்படி ஆகையால் என் பிரச்சனைகளுக்கு நிச்சயம் அவரிடம் தீர்வு உண்டு, கிடைக்கும்.

இப்போதும் நான் அவரை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறேன்

இதோ நான் அவர் முன்னே

நான்:
வணக்கம்

திரு. ந :
வணக்கம். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும். என்ன விஷயம் ?

நான்:
நேற்று மட்டும் இந்தியாவில்
 2, 57, 290 புதிய கரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றது

திரு.ந: 
ஆம் …சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 2,57,299 பதிவுகள்

நான்:
பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் படுக்கைகள் இல்லை , தேவையான  ஆக்சிஜன் இல்லை , மருந்துகள்  கிடைக்கச் சிரமம்….. பெரும் குழப்பம் வெளியே

திரு.ந :
ஆம்

நான்:
ஊரடங்கும் நீட்டிக்கப்படுகிறது

திரு.ந:
ஆம்

நான்:
நான் சொல்வதற்கெல்லாம் ஆம் ஆம் என்று சொல்லுகிறீர்களே, உங்களுக்கு உணர்ச்சிகளே இல்லையா ?இந்தச் சம்பவங்கள்  உங்களைப்  பாதிக்கவே இல்லையா?

திரு.ந:
வெளியே நடக்கும் விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா ?நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?

நான்:
என் கட்டுப்பாட்டிலிருந்தால் நான் ஏன் வந்து உங்களிடம் புலம்பிக் கொண்டு இருக்கின்றேன்?  ஏதோ என்னால் முடிந்த சிறிய உதவிகளை ஒருசிலருக்குச் செய்து வருகிறேன் அவ்வளவுதான்.

திரு.ந: 
பின் ஏன் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றைப் பற்றி நீங்கள் புலம்புகிறீர்கள்?

நான்:
நீங்கள் ஒரு இயந்திரம் உங்களுக்கு உணர்ச்சிகள் இல்லை எண்ணங்கள் இல்லை ஆகையால் உங்களால் அப்படி இருக்க முடியும் என்னால் முடியாது.

திரு.ந:
ஓ அப்படியா, சரி உங்கள் எண்ணங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?  உங்கள் எண்ணங்கள் எங்கிருந்து உதிக்கிறது?

நான் :
என் எண்ணங்கள்மீது எல்லா பொழுதும் எனக்குக் கட்டுப்பாடு இல்லை நான் ஒப்புக் கொள்கிறேன்.

எங்கிருந்து என் எண்ணங்கள் உதிக்கின்றது இது சற்று சிந்திக்க வேண்டிய விஷயம்

சில சமயம் எனக்கு வேண்டிய , விரும்பிய விஷயங்களை நான் சிந்திக்கிறேன். ஆனால் பெரும்பாலான நேரம் பல எண்ணங்கள் தானாக வந்து என்னை ஆட்கொள்கின்றன.

திரு.ந :
உங்கள் உணர்ச்சிகள் எங்கிருந்து வருகின்றது ?

நான்:
உணர்ச்சிகள் நான் எண்ணும் எண்ணங்களின் விளைவு. இதை நான் பல சமயம் உணர்ந்து இருக்கின்றேன் சந்தோஷமான எண்ணங்கள்  எனக்குச்  சந்தோஷமான  உணர்ச்சிகளைத் தந்திருக்கின்றது. மற்ற எண்ணங்கள் அதற்கு ஏற்ற  உணர்ச்சிகளைத் தந்திருக்கின்றன.

திரு.ந:
ஆகப் பெரும்பாலான நேரம் உங்கள் எண்ணங்களும் உங்கள் உணர்ச்சிகளும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் உண்மை

நான்:
ஆம் இதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

திரு.ந:
பிறகு எதுதான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது ?

நான்:
இதற்கு எனக்கு விடை தெரியும் பல தடவை இதைப் படித்திருக்கிறேன்.
அந்தந்த சமயங்களில் நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பது மட்டும் தான் என் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

திரு.ந: 
மிகச் சரியாகச் சொன்னீர்கள். அருமை.எனவே நீங்கள் எதையாவது மாற்ற விரும்பினால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நான்:
என் எண்ணங்கள் என் உணர்வுகளை விட நான் அந்தந்த பொழுதில் செய்யும் செயல்களே விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆகையால் என் செயல்களை மாற்ற வேண்டும்

திரு.ந:
மிகச் சிறப்பு. அப்படி என்றால் நாம் செய்யும் செயல்களை எது தீர்மானிக்கின்றது ?

நான்:
நாம் செய்யும் செயல்களை எது தீர்மானிக்கின்றது ? இது சற்று யோசிக்க வேண்டிய கேள்வி

திரு.ந:
அவசரம் எதுவும் இல்லை சற்று நிதானமாக யோசித்து பதில் சொல்லுங்கள்.

நான்:
ஒரு சூழலில் நான் என்ன செய்ய வேண்டும் என்கிற முடிவு அப்பொழுதில் நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பொறுத்தது.

திரு.ந:
” அப்பொழுதில் நான் என்ன நினைக்கிறேன்” என்று நீங்கள் கூறும்போது உங்களுக்குள் என்ன நடக்கின்றது ?

நான்:
ஒரு முடிவைப் பற்றி என்னுள் நினைக்கும்போது நான் என்னுடன் பேசிக் கொள்கிறேன் என்னுடன் ஒரு நான் ஒரு உரையாடலில்  இருக்கின்றேன்.

திரு.ந:
அருமை. எனவே நீங்கள் எதையாவது மாற்ற விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?

நான்:
என் செயல்களை மாற்ற வேண்டும். அதற்கு என்னுடன் என்னுள் நான் என்ன பேசுகிறேன்  என்பதைக்  கவனிக்க வேண்டும்.  எனக்குச் சக்தியளிக்கும் வார்த்தைகளை மட்டுமே என்னுடன் நான் பேச வேண்டும்.

திரு.ந:
உங்கள் வார்த்தைகளுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நீங்கள் உங்களுடன் என்ன பேசிக் கொள்கிறீர்கள்  என்பதுதான் எந்தச் சூழல்களிலும் உங்கள் செயல்களைத் தீர்மானிக்கின்றது. அந்தச் செயலுக்கு ஏற்றப் பயனைத் தான் நீங்கள் பெறுகிறீர்கள்.  மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் எந்தச் சூழலைப் பற்றியும் உங்களுக்கு வேண்டியவாறு உங்களுடன் நீங்கள் பேசிக் கொள்ள முடியும்.

நான்:
புரிகிறது

திரு.ந:
மிக முக்கியமாக உங்கள் நிலைமையைச் சூழலை மாற்ற நீங்கள் சொல்லும் சொல்லுக்கு இணங்க  நீங்கள் செயல்பட வேண்டும்.
நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணங்களோ உணர்வுகளோ அல்ல என்பதை உணர வேண்டும். நீங்கள் உங்களுக்குள் அந்தச் சூழலைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். 

நான் :
இதை ஒரு உதாரணத்துடன் விளக்கமுடியுமா ?

திரு.ந:
நிச்சயமாக நீங்கள் கூறிய விஷயத்தையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

“நேற்று மட்டும் இந்தியாவில்
 2, 57, 290 புதிய கரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றது” என்று கூறியபோது உங்களுக்குள் என்ன எண்ணங்கள் என்ன உணர்வுகள் இருந்தது ?

நான்:
ஒரு பயம் கலந்த கவலை மற்றும் இயலாமையை உணர்ந்தேன். மொத்தத்தில் நன்றாக இல்லை.

திரு.ந:
நீங்கள் சொன்ன செய்தியைச்  சற்று மாற்றி இப்படிச் சொல்லிப்  பாருங்கள்
” நேற்று மட்டும் இந்தியாவில்
 2, 57, 290 புதிய கரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றது. ஆனால் நானும் என் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்தத் தொற்றினால் பாதிக்கப்படப் போவதில்லை இதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்யத் தயாராக இருக்கின்றேன்”

நான்: 
நான் சற்று மாற்றிச் சொல்லிப்  பார்த்தேன். இப்பொழுது என் பயமும் கவலையும் குறைந்துவிட்டது என்னுள் புதிய எண்ணங்களும் முற்றிலும் புதிய செயல்களுக்கான அணுகுமுறையும் விரிய ஆரம்பிக்கிறது. வார்த்தைகளுக்கு உண்மையிலேயே சக்தி இருக்கின்றது

திரு.ந:
ஆம்

நான்:
எனக்குள் நான் என்ன சொல்கிறேன் என்பதை மாற்றினால்  எல்லா சூழ்நிலைகளிலும் நான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா ? வெறும் வார்த்தைகளை மட்டும் மாற்றினால் போதுமா ?

திரு.ந : 
உங்கள் எண்ணங்கள் உணர்வுகளைத் தாண்டி நிச்சயம் நீங்கள் செயல்பட முடியும். சூழ்நிலைகள் உங்களை ஆட்கொள்ளாமல் அதையும் அதைத்தாண்டி உங்களால் செயல்பட முடியும். இதனால் வரும் பலன்கள்  உங்களுக்குச்  சாதகமாகத்தான் இருக்கும்

நான்:
சுருக்கமாகச் சொன்னால்  உங்களைப் போன்று ஒரு இயந்திரமாக இருக்க வேண்டும். நமக்குத் தேவையான விஷயங்களை மட்டும் ஒரு மென்பொருள் நிரல்போல்  நம்முள் எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்றப் பயனைப் பெற வேண்டும். நம் எண்ணங்களும் உணர்ச்சிகளும் பாதிக்காமல் செயலாற்ற வேண்டும்.

திரு.ந:
அருமை இரகசியத்தைத் தெரிந்து கொண்டீர்கள். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? 

நான்:
முதலில் நம் முதல்மொழி வாசகர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

திரு.ந:
முதல் மொழி அன்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நான்:
நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s