ஜி ஆர் வி

அவர் முழு பெயர்  G R Ventakesh ( GRV),    நான் அவரைச் சில வருடங்களுக்கு முன், ஒரு சுய முன்னேற்றத்திற்கான மூன்று நாள் பயிற்சி அரங்கில் சந்தித்தேன். ஐந்தரை அடிக்குச் சற்று குறைவான உயரம், தடித்த உடம்பு, வயது அறுவதை நெருங்கியிருக்கும்.

சிலரைப் பார்த்தாலே நமக்குப் பிடித்து விடும்,  அந்த ரகம் அவர். அந்தப் பயிற்சி அரங்கில் அவர் புது விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் என்னைக் கவர்ந்தது.

அவரிடம் அதிகம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை இருந்தும் அந்தப் பயிற்சிக்கு இடையே தேநீர் இடைவேளை நேரத்தில் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம் அவ்வளவுதான்.

பிறகு அந்தப் பயிற்சியில் பங்கு கொண்ட பலரின் ஆலோசனைப்படி ஒரு வாட்ஸ்அப் குரூப் உதயமானது அதில் நானும் இணைந்தேன்
ஜி ஆர் வி  யும் இணைந்தார்.

சுய முன்னேற்றத்துக்கான என் கருத்துக்களை அந்தக் குரூப்பில் அப்பப்ப நான் பதிவு செய்து வந்தேன். நான் அனுப்பும் கருத்துக்கள் அனைத்தையும் படித்து அவர் தன் கருத்துக்களைப் பதிவு செய்வார். பெரும்பாலான சமயம் எங்கள் இருவரின் சிந்தனையும் ஒத்துப் போனது.

இப்படி இருக்க ஒரு வாரத்துக்கு முன் அவர் அந்தக் குரூப்பில் கடைசியாக ஒரு பதிவு செய்தார்

அது

“Well Ladies & Gentlemen, I have contracted COVID and got admitted at Government Hospital today”

பலரும் அவரை விரைவில் நலம் பெற வாழ்த்தினார்கள் நானும் வாழ்த்தினேன்.

நாட்கள் நகர்ந்தன அந்த வாட்ஸ்அப் குரூப்பில் பல பதிவுகள் வந்தவண்ணம் இருந்தும்  ஜி ஆர் விடமிருந்து எதுவும் வரவில்லை.
மெதுவாக இதைப் பற்றி ஒரு சிலர் கேள்வி எழுப்ப,  பிறர் மற்றவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் சில பதில்களைப் பதிவு செய்தனர்.

“ஹாஸ்பிடல்ல சிக்னல் இருக்காது அதனால் அவரால் அனுப்ப முடியாமல் இருக்கலாம் “

” அவர் மொபைல் சார்ஜரை மறந்து வீட்டிலேயே விட்டுச் சென்றிருக்கலாம்”

இப்படி இருக்க அந்தக் குரூப்பில் இருந்த ஒரு சிலர் முன்வந்து தங்கள் நண்பர்கள்மூலம் அந்த ஆஸ்பத்திரியில் விசாரித்து ஜி ஆர் வி உடல்நிலை பற்றிய செய்தியைத் தருவதாகச் சொன்னார்கள் – அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார்கள்.

இரண்டு நாள் கழித்து ஒருவர் பதிவு செய்தார் அவர் அரசு ஆஸ்பத்திரியில் A block tower ,இரண்டாவது மாடியில் இருக்கிறார் என்று. ஆனால் அவர் உடல்நிலையைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. குரூப்பிலிருந்து அனைவருக்கும் ஒரு நிம்மதி அவர் இருக்கும் இடத்தையாவது தெரிந்துகொண்டோம் என்று.

மறுபடியும் மற்ற அனைவரும் அவர் விரைவில்  குணமடைய வாழ்த்துக்களைப் பதிவு செய்தவாறு இருந்தபோது இந்தச் செய்தி வந்தது

“நமது நண்பர் ஜி ஆர் வி கரோனா சிகிச்சை பலனளிக்காமல் இன்று  காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்”

செய்தியைப் படித்தவுடன் என்னை அறியாமலே ஒரு துக்கம், அவரின் நினைவுகள் என்னை ஆட்கொண்டது.

கடைசியாக அந்த வாட்ஸ்அப் குரூப்பில் அவர் செய்த சில பதிவுகளைத் தேடிப் படித்தேன் அதில் ஒன்று தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அவர் பதிவு செய்தது…… இதோ

” நேற்றைய தினத்துடன் தமிழ் ஆண்டு “சார்வரி”முடிந்துவிட்டது. சார்வரி என்றால் இருள் என்று அர்த்தம்.
ஆகையால் நேற்றுடன் இருள் முடிந்துவிட்டது என்று நம்புவோம்.
 
இன்று முதல் புதிய தமிழ் ஆண்டு  பிலவ தொடங்கிற்று. பிலவ என்றால் கடக்கிறது என்று அர்த்தம்.

ஆகையால் நாம் இன்று முதல் இருளைக் கடக்க உறுதி கொள்வோம். அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.”

இந்த வாழ்த்துக்களை அனுப்பும்போது அவர் தன் முடிவைப் பற்றி நினைத்திருப்பாரா ?

அல்லது அவர் இருளைத்தான் கடந்து விட்டாரா ? தெரியவில்லை ஆனால் எங்கிருந்தாலும் நிச்சயம் பிறருக்கு வெளிச்சத்தைக் காட்டுவார் என்று நான் நம்புகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s