“காலையில போய் அவரைப் பார்த்தியே வேலை செய்கிற இடத்துல…….” கணவனைப் பற்றித் தெரிந்து கொள்ள தன் தம்பியிடம் உரிமையாகக் கேட்டாள்
“அக்கா, அங்க அவரு நடுவுல நிற்கிறார் நாலாப்பக்கமும் எல்லாம் அப்படியே நிக்குது.அவரு கையை அசச்சாதான் எல்லாம் நகருது அம்புட்டு மரியாதை அவருக்கு. அவரு “போ” னா எல்லாம் போறாங்க ” நில்லு” னா எல்லாம் நிக்கிறாங்க அதைப் பாக்குறதுக்குக்கே அவ்வளவு அழகா இருந்தது.
பிரதமர், முதலமைச்சர் யாராவது அந்தப் பக்கம் வரதா இருந்தா கூட அந்தச் செய்தி அவருக்கு முன்னாடியே
வந்திடுமாம்.
அவர் மட்டும் ஒருநாள் அங்க இல்லன்னா ஒரே குழப்பம்தானாம். அவர் வந்துட்டாருன்னு தெரிஞ்சா எல்லாம் ஒழுங்காகிடுமாம்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருதர ஆம்புலன்சில் எடுத்து வந்தப்ப அவர் மட்டும் அங்க இல்லைன்னா குறித்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்குப் போய் உயிர் பிழைத்து இருக்கவே முடியாதாம்”
என்று தன் டிராபிக் போலீஸ் கான்ஸ்டபிள் அத்தானைப் பற்றித் தன் அக்கா மனம் குளிரும் வகையில் சொன்னான் தம்பி.