
“மச்சி அங்க என்னடா கூட்டம்” என்று ரவி கேட்க
“ஏதோ ஓவியக்கண்காட்சியாம்” அலுப்புடன் கூறினான் ரகு
“போவோமா ?”
“நமக்கும் அதுக்கும் என்னடா சம்பந்தம், சுட்டுப் போட்டாலும் எனக்கு வரைய வராது. நீயும் ஓவியம் வரைந்து இதுவரை நான் பார்த்ததில்லை. ஏதோ கவிதை என்று சொல்லி எதையோ எழுதுவ அவ்வளவுதான்”
“சும்மா ஒரு ஜாலி மச்சி, போய்தான் பார்ப்போமே” என்று முடித்தான் ரவி.
இருவரும் அந்தக் கண்காட்சிக்குள்ளே நுழைய அங்கு சுமாரான கூட்டம்.
நிறைய ஓவியங்கள் அங்கிருக்க, மேலோட்டமாக அதைப் பார்த்தவாறு உள்ளே நகர்ந்தார்கள்.
ஓவியத்தைப் பார்ப்பதைவிட அங்கு வந்த சிலரை மிகவும் பார்த்து ரசித்தார்கள்.
ஆனால் ஒரு ஓவியம் மட்டும் ரவியின் கண்களை வெகுவாகக் கவர்ந்தது அவனை அதன் பக்கம் இழுத்தது.
அந்த ஓவியத்தில், கடற்கரையில் ஒரு காதல் ஜோடி கடலைப் பார்த்து அமர்ந்திருக்க அவர்கள் இருவர் மட்டும் அங்கே, பெருங்கடல் அவர்களுக்கு முன்னே. அவர்கள் முகம் தெரியவில்லை ஆனால் அவர்களிடையே இருந்த நெருக்கம் தெரிந்தது.
ரவி அந்த ஓவியத்தைக் கூர்ந்து கவனித்தான். அதில், கீழே அறிவுமதி என்ற ஒரு கையொப்பம். ஒரு கோடு அதன் கீழே ஒரு அலைபேசி எண்.
அதைக் கண்டதும் அவனுக்கு ஒரு சந்தோஷம்
“மச்சி, இப்ப என்ன செய்கிறேன் பார்” என்றான் ரகுவை பார்த்து
ரவி தன் அலைபேசியை எடுத்து அந்தப் படத்தில் தான் கண்ட அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவல் அனுப்பினான்
அது
“நீ தீட்டிய ஓவியத்தில்
யார் அந்த இருவர்?
நீ சம்மதித்தால்
இன்றே அறிவிப்போம் இவ்வுலகிற்கு
நாம்தான் அவ்விருவர், என்று “
தான் அனுப்பிய செய்தியை ரகுவுக்கு பலமுறை படித்துக் காட்டினான். ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் அவனுக்கு
அவன் அனுப்பிய தகவலுக்குப் போன வேகத்தில் வந்தது ஒரு பதில்
“முதலில் நீ வாழ்க்கையில் வென்று உறுதியாய் நின்று,
பிறகு இதைப் பற்றி யோசிப்பது நன்று
என, உன்னை எச்சரிக்கிறேன் இன்று”
ரவியிடமிருந்து அலைபேசியை பிடிங்கி, ரகு இரு தகவல்களையும் ஒருசேரப் படித்தான்
“நீ தீட்டிய ஓவியத்தில்
யார் அந்த இருவர்
நீ சம்மதித்தால்
இன்றே அறிவிப்போம் இவ்வுலகிற்கு
நாம்தான் அவ்விருவர், என்று”
“முதலில் நீ வாழ்க்கையில் வென்று உறுதியாய் நின்று,
பிறகு இதைப் பற்றி யோசிப்பது நன்று
என, உன்னை எச்சரிக்கிறேன் இன்று.”
“சபாஷ், சபாஷ்” என்று, ரகு திரும்பித் திரும்பி அதைப் படித்து ரசிக்க, ரவியின் தலை குனிந்தது.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த ஓவியத்தில் இருந்த காதலர்கள் கடலை பார்த்த வண்ணமே இருந்தனர்.