” சார் விமானம் கிளம்பியாச்சு இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்திடும்” என்னக் கூறி மாவட்ட காவல்துறை எஸ்பி தனது தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்தார்.
அந்த மாநிலத் தலைநகர விமான நிலையத்தில் ஒரே பரபரப்பு. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த மாநில முதல்வருக்கு மாற்றுச் சிகிச்சைக்கான இதயம் அந்த விமானத்தில் வந்து கொண்டிருந்தது.
” நான் இறக்கும் வரை என் மக்களை விழித்திருக்க விழிப்புடன் இருக்க என்னாலான சேவையைத் தொடர்ந்து செய்வேன்” என்று பொது மேடையில் முழக்கமிட்டு விட்டு தன் கட்சித் தொண்டர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சித்தலைவர் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் அவரது குடும்பம் அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர். ஆகையால் எதிர்க்கட்சித் தலைவரின் இதயம் அந்த மாநிலத்தின் முதல்வர் உடம்பில் பொருத்த ஒரு வாய்ப்பு உருவாகியது.
காவல்துறையினர் உதவியுடன் எந்த சிரமமும் இல்லாமல் ஒரு மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட இதயம் கை தேர்ந்த மருத்துவ வல்லுநர்களால் இருதய மாற்றுச் சிகிச்சையின் மூலம் முதலமைச்சருக்குப் பொருத்தப்பட்டது. அவர் மறுவாழ்வு பெற்றார்.
சிறிது காலம் ஓய்வு பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் முதலில் கூறியது ” உடல் எனது, இருதயம் அவருடையது இரண்டுமே மக்கள் நலத்துக்கு, வாருங்கள் ஒன்றுபடுவோம் வென்று விடுவோம்”.
Need in English
LikeLike