
பிரவுனி
அலைபேசியில் மணி ஒலித்தது. வழக்கமாக மணி அடித்தவுடன் அழைப்பை ஏற்கும் சுந்தர் அன்று அழைப்பவரின் எண்ணைக் கண்டதும் சற்று தயங்கினான். சற்று தாமதித்து அந்த அழைப்பை ஏற்க, மறுபுறம் இருப்பவர் ஏதோ சொல்ல அவன் முகம் வாடத் தொடங்கியது. “உம் உடனே வருகிறேன்” எனக்கூறி அந்த அழைப்பைத் துண்டித்தான்.
அவனுடைய நெஞ்சு அடைப்பது போல் இருந்தது கண்களை மூடி ஏதோ ஆழ்ந்துசிந்தித்தான். பிறகு எழுந்து விரைவாகச் சென்று தன் காரை ஸ்டார்ட் செய்து நகரத் தொடங்கினான்.
அவன் வாகனம் அதன்பாட்டுக்குச் சென்று கொண்டிருக்க அவன் நினைவுகள் சற்று பின்னோக்கி நகர்ந்தன. ஆறு வருடங்களுக்கு முன் தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவன் படுத்த படுக்கையாய் இருந்தபோது வீட்டில் பலர் அவனை அன்பாகக்
கவனித்தாலும் பலமுறை தன் தாய் இல்லாததைப் பெரிதும் உணர்ந்தான் தவி தவித்தான்.
அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு சிறிய பூனைக் குட்டி அவனருகில் வந்து அவன் படுக்கையில் அமர்ந்தபோது அதை அவன் தடவிக் கொடுக்க அவன் அன்பை ஏற்று அவன் அருகிலேயே அது இருந்தது. அந்தப் பூனையின் வரவினால் அவனுக்கு ஒரு புது உற்சாகம் ஏற்பட்டது தன் தாயே தன்னுடன் இருப்பதாக அவன் கருதினான். அந்தப் பூனையும் பெரும்பாலான சமயம் அவனுடன் அந்தப் படுக்கையிலேயே இருந்தது. சுந்தரின் தனிமையை நீக்கியது அவன் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்டது.
அதற்கு பிரவுனி என்று பெயர் சூட்டினான்.அன்றுமுதல் பிரவுனி
அவன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து கொண்டது. அனைவரின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றது.
நாட்கள் நகர்ந்தன சுந்தர் உடல் நலம்பெற்றுத் தேறினான்
பிரவுனியும் வளர்ந்தது.
இருவருக்கும் இடையேயான உறவு, வீட்டில் உள்ள மற்றவர்கள் அனைவரும் பெரிதும் போற்றும் அளவுக்கு வளர்ந்தது.
திடீரென்று ரோட்டில் ஒரு மாட்டுக் கூட்டம் சாலையைக் கடக்க அவன் வாகனத்தின் வேகம் குறைந்து அவன் நினைவு மறுபடியும் ரோட்டுக்கு திரும்பியது.
பின் வாகனம் மேலும் நகர
அலைப்பேசியில் பேசியவரின் குரல் அவன் மனதில் திரும்பவும் ஒலித்தது
” சுந்தர் நான் மருத்துவர் சங்கர் பேசுகிறேன். நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் உங்கள் பூனையைக் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறோம்.
அது வலிதாங்காமல் படும் வேதனையைப் பார்க்கும்போது அதைக் கருணை கொலை செய்வது நல்லது என்று கருதுகிறோம். இது வேதனைக்குரிய விஷயம் தான் இருந்தாலும் இதைத் தவிர வேறு வழி இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் சம்மதத்துடன் இதை நாங்கள் செய்ய விரும்புகிறோம். ஒருமுறை நீங்கள் இங்கே வந்தால் நாம் கலந்து ஆலோசித்து ஒரு முடிவை எடுத்து விடலாம். உங்களால் உடனே வர முடியுமா ?”
சுந்தர் கண்களில் அவனை அறியாமல் கண்ணீர் வழிந்தது மறுபடியும் அவன் நினைவு ஒரு வாரத்திற்கு முன்பு நடந்ததை நினைவூட்டியது.
அன்று மாலை கன மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஊரே இருட்டில் மூழ்கியிருந்தது. இரவு 10 மணியளவில் மின்சார இணைப்பு திரும்பி வந்தபோது திடீரென்று ஒரு சத்தம். வீட்டில் உள்ள அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி அலறியடித்துக்கொண்டு ஓட அங்குப் பிரவுனி மின்சாரம் தாக்கப்பட்டுப் பெருத்த தீக்காயங்களுடன் தன் கால்கள் மற்றும் வயிற்றுப் பகுதிகள் பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தது. என்ன செய்வதென்று தெரியாத சுந்தர் ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியை நாட சில அன்புள்ளம் கொண்டவர்கள் அங்கிருந்து வந்து பிரவுனியை உடனே மீட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.
வாகனம் அந்தத் தொண்டு நிறுவனத்தின்
வளாகத்துக்குள் நுழைந்தது.அதை உள்ளே நிறுத்தியவுடன் பரபரப்பாக சென்று மருத்துவர் சங்கரைச் சந்தித்தான். அவன் படபடப்பை உணர்ந்த மருத்துவர் அவனை அமரச்செய்து குடிக்கத் தண்ணீர் கொஞ்சம் கொடுத்தார். அது அவனைச் சற்று நிதானப்படுத்தியது.
மருத்துவர், பிரவுனியன் உடல் நிலையை விளக்கி, அது படும் இன்னல்களை எடுத்துக்கூறி கருணைக் கொலைக்கான நியாயத்தையும் விளக்கினார்.
சுந்தர் அவர் கூறியதை அனைத்தையும் பொறுமையாகக்
கேட்டு, அவன் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் கேட்டு மருத்துவர் சொல்லுவதிலிருந்த
நியாயத்தை உணர்ந்து இறுதியில் பரவுனின்
கருணைக்கொலைக்குச் சம்மதித்தான்.
” கடைசியாக ஒருமுறை நான் பிரவுனியைப் பார்க்கலாமா?” என்று மருத்துவரிடம் அவன் கேட்க, வாருங்களேன் நாம் இரண்டு பெரும் போய்ச் சேர்ந்து பார்ப்போம் என்றார் மருத்துவர் பணிவுடன்.
இருவரும் பிரவுனி இருந்த இடத்தை அடைந்தபோது அங்கு ஒரு படுக்கையில் நினைவிழந்த நிலையில் பிரவுனி நலிவுற்றுக்
காணப்பட்டது. அதன் அருகே சென்று அதன் தலையில் தடவியவாறு சுந்தர் “பிரவுனி, பிரவுனி” என்று இருமுறை அழைத்தான்.
அதைக் கேட்டவுடன் பிரவுனியின் உடல் அசைந்தது மிகவும் சிரமப்பட்டு தன் கண்களைத் திறந்து இறுதியாக ஒருமுறை சுந்தரைக் கண்டு ஏதோ பேச முற்பட்டபடி தன் உயிரைத்துறந்தது.
அவனைப் பார்ப்பதற்காகவே தன் உயிரைப் பிரவுனி பிடித்து வைத்திருந்ததாகச்
சுந்தருக்குத் தோன்றியது. கருணைக்கொலை தேவைப்படாததை நினைத்து மருத்துவர் சங்கர் சற்று நிம்மதி அடைந்தார்.
சுந்தர் பிரவுனின் முன் நின்று தன் கண்களை மூடி ஆண்டவனைப் பிரார்த்தித்தான்
“ஆண்டவா மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் என்னுடைய பிரவுனிக்கு நல்லதொரு வாழ்வைக் கொடுப்பாய் அதற்காக உனக்கு என் நன்றியும் பிரார்த்தனைகள்” என்று முடித்தான்.
பிறகு மருத்துவர் சங்கருக்கும் மற்றும் அங்குள்ள ஊழியர் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, பிரவுனியின் பெயரில் இங்கு ஏதாவது பெரிசா நல்லது செய்யுங்கள் என்று கூறி ஒரு பெரிய தொகைக்கான செக்கை அன்பளிப்பாக அவர்களிடம் கொடுத்துவிட்டு சுந்தர் தன் வீட்டுக்குக் கிளம்பினான்.
பிரவுனியுடன் கழிந்த பல நல்ல நினைவுகளை அசை போட்டுக்கொண்டே காரை ஒட்டிக்கொண்டு அவன் வீட்டை அடைந்தபோது அவன் வீட்டு வாசலில் ஒரு வெள்ளை குட்டி பூனை தனியாக ஆதரவற்ற நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்ததைக் கண்டு அவன் காரை விட்டு இறங்கி ஓடிச் சென்று அதை எடுத்து அணைத்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் சென்றான்.
வீட்டில் உள்ள அனைவரும் அதை வரவேற்று ஒருமனதாக அதற்கு வைத்த பெயர் பிரவுனி.
ஒன்று முடிய மற்றொன்று தொடங்குவது தானே இவ்வுலக இயல்பு.