
மடமையைக் கொளுத்துவோம் நல்லதைப் போற்றுவோம்.
ஒரு சக்தி உண்டு
மறுக்கவில்லை
அதை இயற்கை என்று
ஏற்றுக் கொண்டு
அந்த இயற்கை அன்னையைப் போற்றுவோம்
அதைக் கடவுள் என்று பெயரிட்டு
மத வெறி கொண்டு புத்திக்கெட்டு சண்டையிடும் அந்த மடமையைக் கொளுத்துவோம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்று நாம் அனைவரும் ஒருசேரக் கூறிவிட்டால்
அதை நாம் மனதார ஏற்றுக்கொண்டால்
அந்த வழியினை போற்றுவோம்
ரத்தம் அது ஒன்றுதான்
என்று தெரிந்த பின்பும்
வேறுபட்டு நின்று நாம்
ஆளுக்கு ஓர் கடவுள் கொண்டு
என் கடவுள் தான் பெரிது என்று
முட்டி மோதும் அந்த மடமையைக்
கொளுத்துவோம்
அன்பு என்ற சக்தியை
நன்குணர்ந்து வளர்த்து விட்டால்
அது மட்டும் நிலைத்து விட்டால்
பிறகு வம்பு தும்பு ஏதுமில்லை
சண்டையிட யாருமில்லை
அந்நிலையை காணவே
அன்பு என்ற பண்பினைப் போற்றுவோம்
மகா பெரியவரைக் கொண்டாடி பெரியாரை வெறுப்பதும்
பெரியாரைப் பின்பற்றி
மகா பெரியவரை இழிப்பதும்
ஒருவகை மடமை தான் என்று
புரிந்து கொண்டு அந்த மடமையைக் கொளுத்துவோம்
இருவர் கூறியதையும்
நாம் படித்து ஆராய்ந்து
அதில் நல்லது என்று நமக்குப் பட்டதைப் பிறருக்குக் கூறி
நல்லதை நாம் போற்றுவோம்.