
அது ஊரடங்கு காலம். அவன் வீட்டில் தனியாகத் தான் இருந்தான். அந்தச் சிறிய அறையில் அவன் படுக்கைக்கு அருகே ஒரு மேஜை, அதில் நிறையப் புத்தகங்கள்.
அவன் புத்தகங்களைப் படிப்பான் அல்லது சக மனிதர்களைப் படிப்பான். பிறகு நிறைய எழுதுவான். அதுதான் அவன் வேலை. அவன் ஒரு எழுத்தாளன்.
அன்றும் அப்படித்தான் தன் படுக்கையில் சாய்ந்தவாறு மேஜைமேல் இருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்துத் தனக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசிக்கத் தொடங்கினான்
“மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்……..”
பெண் விடுதலை வேண்டும் அந்த வரி அவனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. புத்தகத்தை மூடி மேஜை மேல் வைத்துவிட்டு தன் கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.
திடீரெனச் சிக் சிக் என்று ஒரு காலடியோசை அவனுக்குக் கேட்டது. அந்த ஓசை அவனை நெருங்கி வருவதை உணர்ந்தான்.
“சார்”என்று யாரோ அவனைக் கூப்பிடுவதைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தான். மறுபடியும் அந்த உருவம் “சார்” என்று அவனைப் பார்த்துக் கூப்பிட்டது அவனுக்குச் சற்று பயமாக இருந்தது. நடு வயதில் ஒரு பெண் அவன் எதிரே நிற்கச் சற்று தடுமாற்றத்துடன்
“யாரம்மா நீ ?” என்று அவன் கேட்க
“நீங்கள்தானே எழுத்தாளர் இளம்பாரதி?”
“ஆமாம்”
“உங்கள் கதைகள் எல்லாம் நான் படித்து இருக்கிறேன்”
“உட்காருங்கள்” என்று கூறி அந்த மேஜைக்கு அருகே இருந்த நாற்காலியைக் கொஞ்சம் அவளை நோக்கி நகர்த்தினான்.
“நீங்க நிறைய பிடிப்பீர்களா?” என்றாள் அவள்
“ஏன் ?”
“நிறையப் புத்தகங்கள் இருக்கிறதே அதான் கேட்டேன்”
“சில பேருக்குப் பணம் நிறைய இருந்தால் எப்படியொரு தைரியத்தைக் கொடுக்குமோ அது மாதிரிப் புத்தகங்கள் நிறைய இருந்தால் எனக்கு அது ஒருவிதமான தைரியத்தை கொடுக்கும்” என்றான்
“ஓ அப்படியா” என்றாள்
“உங்கள் பேர் என்ன ? என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்”
” அகல்விழி என் பெயர். உங்கள் கதைகளை நிறையப் படித்திருக்கிறேன் உங்கள் எழுத்து எனக்கு நிறையப் பிடிக்கும். அதான் எல்லாம் முடிஞ்ச அப்புறம் உங்களை ஒருத்தரவ பாத்துட்டு போகலாமென்று வந்தேன்”
” எல்லாம் முடிஞ்சப்புறமா? என்ன முடிஞ்சு போச்சு ?” என்றான்.
“அது இருக்கட்டும் இப்ப நீங்க என்ன கதை எழுதுகிறீர்கள்” என்றாள்
“அதைத் தான் யோசித்திட்டிருக்கேன்
இன்னும் முடிவு பண்ணல”
“என் கதையை எழுதுங்களேன்” என்றாள்
“சரி சொல்லுங்கள் நான் கேட்கிறேன். நிச்சயம் எழுதுவேன் என்ற உத்தரவாதம் கிடையாது எனக்கு எழுத வேண்டும் என்று தோணுச்சுன்னா கண்டிப்பா எழுதுவேன்”
“சுருக்கமா சொல்கிறேன் உங்களுக்குப் பிடித்திருந்தால் ஏழுதுங்க இல்லை என்றால் விட்டுடுங்க” என்று ஆரம்பித்தாள்
” இதுதான் என்னுடைய கதை
கேள் நீ அதை
பிறர் சொல்லி அதன்படி வெகுகாலம்
நான் வாழ்த்து
பிறர் போக்கில் என் வாழ்க்கை அது நகர்ந்து
அதனாலே என் அமைதி என் மகிழ்ச்சி அது கரைந்து
பின்னாளில் என் வாழ்வில் சிலர் வந்து
அவர்கள் தம் நல் அனுபவத்திலிருந்து சிலவற்றை எனக்குத் தந்து
அது நன்று என்று நான் உணர்ந்து
என் உள்மனம் “ஆம்” என்று கூற
நான் அதைச் செய்ய
என் சின்ன சின்ன ஆசைகள்
அது நிறைவேற
அதுவரை என் வாழ்வில்
நான் இழந்த பல சந்தோஷம்
அதை மெல்ல திரும்பிப் பெற
பெரும் அமைதி மனமகிழ்ச்சி என்னைச் சூழ
என்னுள்ளே ஒரு புது மாற்றம்
அது அறியா அது புரியா
என் வீட்டார் என் உறவினர்கள்
அது தப்பு அது தவறு
என்று ஒருசேரக் கூற
என் அமைதி அது போச்சு
என் மனமகிழ்ச்சி அது போச்சு
என் வாழ்வு அது குடி முழுகிப் போச்சு
என் நிகழ்காலம் அது தொலைந்து போச்சு
பிறர் சொல்லி நான் அடிமையாய் வாழ்ந்த அந்தக் கடந்த காலம்
மறுபடியும் நிகழ்காலத்தில் அது நிஜமாச்சு
மேலும் அதுதான் என் எதிர்காலமும் என்று ஊர்ஜிதம் அச்சு
உறவுகள் இருந்தும் பயனில்லை
சுதந்திரம் எதுவும் எனக்கு இல்லை
அதைப் பெற்றுத்தர அந்தப் பாரதியும்
வரவில்லை
பெண்ணுரிமை அது எங்கிருக்கு ?
நான் படித்த புத்தகத்தில் மட்டும்
தான் அது இருக்கு”
என்று அவள் கதையைச் சொல்லி முடித்தபோது வாசலில் யாரோ கதவைத் தட்ட, அழைப்பு மணியின் சத்தம் கேட்க அவன் விரைந்து எழுந்து வாசலை நோக்கிச் சென்றான்.
அங்கு வேறொரு பெண்மணி நின்றுகொண்டிருந்தாள்.
“இது ஏழாம் எண் வீடு தானே ?”
“ஆம்”…என்றான்
“இது அகழ்விழி வீடு தானே?”
“இல்ல அது வந்து…. ” சற்று குழம்பினான்
“நான் அவளோட பள்ளித்தோழி வெகுநாள் கழித்து அவளைப் பார்க்க இங்கு வந்திருக்கிறேன் கொஞ்சம் கூப்பிட முடியுமா”
“உள்ளே வாங்க” என்று கூறியவாறு அவன் வேகமாக உள்ளே சென்றபோது
அங்கு அகவிழியைக் காணவில்லை அந்த ஒரே வாசல் கொண்ட சிறிய வீட்டைப் பலமுறை தேடியும் அவள் அங்கு இல்லை
குழப்பத்துடனும் தடுமாற்றத்துடன் தன் படுக்கையிலே அமர்ந்தான். நடந்ததையெல்லாம் அசை போட்டான். ஏதோ புரிந்த மாதிரி இருந்தது ஆனால் ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கம் இருந்தவர்களிடமிருந்து அவன் கேட்டு அறிந்து கொண்ட செய்தி
அவன் வசிக்கும் வீட்டில் அகல்விழி என்ற ஒரு பெண் முன்பு வாழ்ந்ததாகவும், அவள் சுதந்திரமாய் பறக்க நினைத்தும் பல முயற்சிகள் செய்தும் கடைசிவரை அவளுடைய இறக்கைகள் வெட்டப்பட்டு ஒரு சிறு வீட்டுக்குள்ளே அவளுடைய பெற்றோர்களாலும் உறவினர்களாலும் வைக்கப்பட்டு இருந்தாள் என்பதுதான்.
பெண்ணுரிமை கண்டிப்பாகப் புத்தகங்களில் மட்டுமாவது தொடர்ந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்து அகழ்விழியின் கதையை எழுத முடிவு செய்தான் இளம்பாரதி.