சமீபத்தில் அமெரிக்காவில், செயின்ட் லூயிஸ் மகாணத்தில் உள்ள ப்ரொவிஷன் லிவிங் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையின் படி அமெரிக்க வாழ் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 5.4 மணி நேரம் தங்கள் கைப்பேசி பயன்படுத்துதலில் செலவிடுகிறார்கள் எனக்கூறியுள்ளது.
இந்தத் தகவலைப் படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாகவும் சற்று பயமாகவும் இருந்தது. நான் என் கைப்பேசியுடன் செலவழிக்கும் நேரத்தைக் கணக்கிட ஆரம்பித்தேன். அது சராசரியாக ஒரு நாளைக்கு 2.4 மணி நேரத்தைத் தொட்டது.
நீங்களும் கொஞ்சம் செய்து பாருங்களேன் அது உங்களுக்கும் ஆச்சரியத்தையும் அதேசமயம் அதிர்ச்சியையும் கொடுக்கலாம்.
நாம் ஏன் கைப்பேசியால் மிகவும் கவரப்படுகிறோம் என்று சற்று சிந்தித்துப் பார்த்தேன். சில விஷயங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தது அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
கைப்பேசி, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் இது எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்ட ஒரு மாய வலை. இதில் நாம் சிக்கிக் கொண்டால் மிழ்வது கடினம்.
இந்த மாயவலை நமக்கு மூன்று விஷயங்களைத் தருகிறது
1. நிறையத் தகவல்கள். நாம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நமக்கு வேண்டிய தகவல்களை யாருடைய தயவுமின்றி இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
2. நாம் சொல்வதை, எழுதுவதை, நம் படங்களை, சமூக ஊடகங்களில் நாம் செய்யும் போஸ்ட்களை, பார்க்கக் கேட்க யாரோ ஒருவர் எங்கோ இருக்கிறார் என்ற ஒரு ஆறுதலைத் தருகிறது.
3. ஒரு கைப்பேசியும் இணைய இணைப்பும் இருந்துவிட்டால் போதும் நாம் இவ்வுலகில் எப்போதுமே தனிமையாக இல்லை என்ற ஒரு உணர்வையும் தருகிறது.
மேலே கூறப்பட்டுள்ள மூன்று விஷயங்கள் நமக்குப் பல நன்மைகளைத் தருகின்ற போதிலும் அதனால் சில பாதிப்புகளும் உண்டாகின்றன.
சற்று உளவியல் ரீதியாக அலசிப் பார்த்தால்
நமக்கு வேண்டிய தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் கிடைக்கும்போது நாம் ஏன் பிறரைச் சார்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது அது ஒரு வித போலித்தனமான நம்பிக்கையைத் தருகிறது. ஒருவருக்கொருவர் சார்ந்திருத்தல் தான் வாழ்க்கையின் சாரம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்வில் பிறரின் ஒப்புதலுக்காகவும் (Approval) ஏற்றுக்கொள்ளுதலுக்காகவும் (Acceptance) ஏங்குகிறார்கள் அதனால்தான் பெரும்பாலோனோருக்கு சமூக ஊடகங்களில் பிறர் போடும் லைக்குகளையும் மற்றும் பிறர் அவர்களை ஃபாலோ செய்வதும் மிகவும் பிடிக்கிறது. மேலும் சமூக ஊடகங்களில் நிறைய நண்பர்கள் இருப்பது ஒருவித திருப்தி அளிக்கிறது.
உலகெங்கும் 1000 நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு நமக்கு மிக அருகில் இருக்கக்கூடிய நண்பர்களையும் உறவினர்களையும் மறக்கச் செய்கிறது இந்தச் சமூக ஊடகங்கள்.
சமூக ஊடகங்கள் நம் மனதுக்குத் தேவைப்படும் ஒருவித நம்பிக்கைையையும் மற்றும் பிறரின் ஒப்புதல், ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றை நன்கு புரிந்து கொண்டு அதை மேலும் மேலும் நாம் அதைத் தேடிச் செல்ல அதன் வடிவமைப்புகளை உறுதியாக்கிக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றது.
இதை நாம் நன்கு புரிந்து கொண்டாள் வளர்ந்து கொண்டே போகும் இது போன்ற தொழில்நுட்பங்களுக்கு நாம் அடிமையாகாமல் எந்த மாய வலையிலும் சிக்காமல் அதனை நம் முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நமக்கு வேண்டிய பல தங்க மீன்களைப் பிடிக்க முடியும்.
இதற்கு நம்மிடம் விழிப்புணர்ச்சியும் கவனமும் இருந்தால் போதும்.