
கி.மு.331இல் மாசிடோனியாவின் மாவீரன் அலெக்சாண்டருக்கும், பாரசீகத்தின் ( Persia ) அகேமெனிடுவின் (Achaemenid) கடைசி மன்னனான மூன்றாம் டைரசுக்கும் ( Darius -lll) க்கும் இடையே போர் ஒன்று நிகழ்ந்தது.
டைரசுக்கு மிகப்பெரிய இராணுவம் இருந்தது. அது உலகு வியக்கத் தக்க அளவுக்கு மிக வல்லமை வாய்ந்தது. இருப்பினும் அப்போரில் டைரஸ் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.
தொன்மையான சில ஆதாரங்களின் படி, டைரஸ் பக்கம் பத்து லட்சம் படை வீரர்களும், அலெக்சாண்டர் பக்கம் வெறும் ஐம்பதாயிரம் பேர்களே இருந்திருக்கக்கூடும் என மதிப்பிடப் பெறுகின்றது. போரின் முடிவில், பாரசீகர்கள் நானூறாயிரம் பேர்களை இழந்த நிலையில் , அலெக்சாண்டர் ஆயிரத்து நூறுக்கும் குறைவானவர்களையே இழந்து வெற்றி வாகை சூடியுள்ளார்.
குறைந்த எண்ணிக்கையிலான போர் வீரர்களைக் கொண்டு அலெக்சாண்டர் வெற்றி பெற்றது எங்ஙனம் ?
அலெக்சாண்டர் தனது எதிரியின் பலத்தையும் தன் பலவீனத்தையும் நன்கு அறிந்திருந்தார். வேறுபட்ட முறையில் எண்ணிச் செயற்பட்டாலொழிய வெற்றி கிட்டாது என்பதனையும் நன்கு உணர்ந்திருந்தார். சீரிய திட்டமொன்றை வகுத்தார்; அவர்தம் முன்னணி தளபதிகளுக்கு விளக்கினார்; அவர்கள் அனைவரும் அதை நன்கு புரிந்து கொண்டனர் என்பதையும் உறுதிசெய்து கொண்டார். பாரசீகப் படையின் பாதுகாப்பு வளையத்தைச் சிதைத்து டைரசை முடிந்த அளவுக்கு விரைவாகக் கொள்ளுவதன் மூலம் பாரசீகப் படை வழிகாட்டுதலின்றி நம்பிக்கையையும், ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டையும் இழந்து போரினைக் கைவிடும் என்பதே அலெக்ஸாண்டர் திட்டத்தின் முக்கியக் கூறாகும்.
அடுத்து அலெக்சாண்டர் தன் திட்டத்தைச் செயல்படுத்த முற்பட்டார். இதற்கு முன் கண்டிராத வகையில் – வேறுபட்ட முறையில் தன் படைகளை டைரஸ் இராணுவத்திற்கு எதிராக நிறுத்தினார். அவர்தம் இராணுவம் இரு பிரிவுகளாக நிறுத்தப் பெற்றது. வலப்பக்கம் படைக்கு அலெக்சாண்டர் தலைமை ஏற்க, இடப்பக்க படைக்கு அவர்தம் தலைமைத் தளபதி
பார்மேனியன் தலைமையேற்றார். அலெக்சாண்டர் படை வீரர்களின் அணிவகுப்பின் முழு உருவாக்கம் டைரஸ் படை அணிவகுப்பின் மையத்திற்குச் சற்றே வலப்புறம் சாய்ந்த கோணத்தில் அமைந்திருந்தது.
எதிர் புறத்தில் டைரசும் அவர்தம் படையினரும் நேர்க்கோட்டிலான வரிசை முறையில் அணிவகுத்தனர். தன் குதிரைப்படை, காலாட்படை வீரர்கள் தன்னைச் சூழ்ந்தமைந்த தக்க பாதுகாப்புடன் அணியின் மையத்தில் தன்னை அமைத்துக் கொண்டார்.
போர் தொடங்கியது, மாசிடோனியப் படைகள் பக்கவாட்டு முறையில் நகரத் தொடங்கின. நேர் எதிராக நகராமல், வழக்கத்திற்கு மாறாகப் பக்கவாட்டில் முன்னேறியதானது டைரஸ் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
மாசிடோனியர்களை எதிர்த்துப் போரிட தன்னுடைய படைகளை பக்கவாட்டிலும், நேர் எதிராகவும் முன்னேறிச் செல்ல டைரஸ் ஆணையிட்டார்.
படைவீரர்கள் நகரத் தொடங்கியதும், முன்வரிசையில் உள்ள மசிடோனியர்களைத் தாக்குமாறு தன்னுடைய (போர்) இரதங்களுக்கு டைரஸ் கட்டளையிட்டார். ஆனால் உடனே அலெக்ஸாண்டரின் வீரர்கள் தங்கள் ஈட்டிகளை எறிந்து அதைத் திறம்பட எதிர்கொண்டனர். அந்த ஈட்டி மழை டைரசின் படைவீரர்களை அதிர்ச்சியடைய வைத்ததுடன், அவர்களுடைய நம்பிக்கையையும் குலைத்தது. இந்நிலையில் அலெக்சாண்டர் தன் படையினரை வலப்பக்கம் நோக்கி அணிவகுக்கச் செய்தார். டைரஸ் தனது படையினரை மாசிடோனியர்களுக்கு எதிராக நிலை கொள்ளுமாறு ஆணையிட்டார். இதனால் பாரசீக அணி அமைப்பில் திடீரென ஏற்பட்ட ஒரு திறப்பு நிலை (இடைவெளி) அலெக்சாண்டருக்கு டைரஸ் போர்க்களத்தில் இருந்த இடத்தை நேரடியாக அணுகுவதற்கான வாய்ப்பை அளித்தது.
அலெக்சாண்டர் அத்தருணத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய குதிரைப் படையுடன் டைரசை அணுக முற்பட்டார்.
அந்த நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான படை வீரர்கள் கொண்ட படைப்பிரிவு மட்டுமே டைரசைச் சூழ்ந்திருந்தது. அவர்தம் மற்ற படைப்பிரிவுகள் பக்கவாட்டில் அணிவகுத்துச் செல்லும் நிலையிலோ, அவருடைய முந்தைய ஆணைப்படி முன்னேறிச் செல்லும் நிலையிலோ இருந்தன.
அலெக்சாண்டர் அந்தத் தருணத்தைத் தனக்கென அமைந்த தருணம் என அறிந்து , தனக்கு முன்னால் உள்ள டைரசின் வலிவற்ற பாதுகாப்பு வேலியைத் தகர்க்க ஆணையிட்டார். டைரசின் சாரதி கொல்லப்பட்டார். இது டைரசின் நம்பிக்கையைச் சிதறடித்தது. அவர் இரதத்திலிருந்து குதித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுப் போர்க்களத்தை விட்டு ஓடினார். இச்செய்தி பாரசீகப் படை வீரர்களிடம் பரவியது. எதிர்பார்த்தவாறு அது அவர்களை மனமுடையச் செய்தது அவர்கள் மாசிடோனியர்களிடம் சரணடைந்தனர்.
இந்தக் கெளக மேலா போரைப் பற்றி நாம் சிந்திக்கையில், கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன.
நான் கற்றுக்கொண்ட முக்கிய விஷயங்கள்
1. எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் ஒரு உத்தியை / திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.
2. உந்தியை /திட்டத்தை அணியில்உள்ள அனைவருக்கு புரிய வைத்த அதன் செயல்பாட்டில் இணைத்தல் வேண்டும்.
3. ஒரு திட்டத்தைச் செயலாக்கும் போது முக்கியமான காலகட்டங்களில் தெளிவான கட்டளைகளை மற்றவர்களுக்குப் புரியுமாறு அளிக்க வேண்டும்.
4. சற்று வித்தியாசமாகச் சிந்தித்தால், குறைவான உதவி ஆதாரங்கள் இருப்பினும் மிகவாகச் சாதிக்கலாம்.
5. எதிர்பாராததனைச் செய்து போட்டியாளர்களை வியக்கச் செய்க.
6. அடைய விரும்பும் இலக்கினை தொடக்கத்திலேயே மனதில் கொள்ள வேண்டும்.
7. மற்றவரைக் காட்டிலும் மாறுபட்ட முறையில் சிந்தித்து விளங்க வேண்டும்.
Pingback: கெளக மேலா போர் ( Battle of Gaugamela) — Experiences & Experiments | Mon site officiel / My official website