உன் தாயிடம் கேள்

அவன் தன் வீட்டின் மாடியில் உள்ள அந்த அறைக்குள் நுழைந்தான் சுற்றுமுற்றும் பார்த்தான் அங்கு யாரும் இல்லை என்று உறுதி செய்தபின்னரே  கதவுகளை மூடினான்.

சுவரில் இருந்த கடிகாரம் பத்தரை  மணியைக் காட்டியது.  இன்னும் 30 நிமிடங்கள் இருந்தன. அவன் சற்று பதற்றமாகவே இருந்தான்.

தன் மேஜையில் உட்கார்ந்து  கணினியை  ஆன்  செய்தான்.  இணையம்  கனெக்ஷன்  சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை சோதித்துப் பார்த்தான்.

சரியாக 11 மணிக்கு மனோதத்துவ  மருத்துவர்  ஜோசப்புடன் அவனுக்கு ஒரு ஜும் கால் இருந்தது.

கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையால் அவன் மருத்துவரை நேரில் சந்திக்க  இயலவில்லை ஆகையால் ஜும் கால்.

பல நினைவுகள், பல கவலைகளுடன் அவன் இருக்க நேரம் பதினொன்று ஆனது
மிகச்சரியாக மருத்துவர் ஜீம் காலில்  லாகின் செய்தார்.

இவன் சற்று பதட்டத்துடன்  மருத்துவருக்கு  வணக்கம் கூறினான்.

பதிலுக்கு மருத்துவரும் வணக்கம் கூறினார்.

அவனைக் கூர்ந்து நோக்கினார் பின் அவனுடன் பேசத் துவங்கினார்.

பதற்றப்படாமல் ரிலாக்ஸ் ஆக இருங்கள். பக்கத்தில் தண்ணீர் இருந்தால் கொஞ்சம் அருந்துங்கள் என்றார்.

அவனுக்கு மருத்துவரின் வசீகரக் குரல் பிடித்திருந்தது அது அவனுக்குச் சற்று கம்போர்ட் கொடுத்தது.

சொல்லுங்கள்  உங்களுக்கு என்ன பிரச்சனை. எதுவாக இருந்தாலும் தைரியமாகச் சொல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று  மருத்துவர் நம்பிக்கையூட்டினார்.

அவன் பதில் ஏதும் பேசாமல் தன் கணினின் கீ போர்டை  பார்த்துக்கொண்டிருந்தான்.

மிஸ்டர் ரமேஷ் அவசரம் ஏதுமில்லை நான் பொறுமையாகக் காத்திருக்கிறேன்  உங்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்போது நீங்கள் பேசலாம் என்றார் மருத்துவர்.

சிறிது நேரம் கழித்து அவன் சற்று நிமிர்ந்து அந்தக் கணினி திரையில் 
மருத்துவரைப் பார்த்தான்

எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை என்று மெல்லப் பேச ஆரம்பித்தான்

கடந்த ஒரு மாத காலமாக என் வீட்டிலிருந்துதான் வேலை செய்கிறேன் கரோனா தொற்று நோய்த் 
தடுப்பு நடவடிக்கை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்று  வெகுநாள்  ஆகிறது.

காலை எழுவது ,சாப்பிடுவது, அலுவலக வேலை பார்ப்பது சிறிது நேரம் தொலைக்காட்சி பார்ப்பது தூங்குவது என்று இப்படியே என் வாழ்க்கை ஓடுகிறது. இது ஒருவித சலிப்பை ஏற்படுத்தி ஒரு பிடிப்பு இல்லாமல் வாழ்க்கை நகர்கிறது.

தினம் தினம் ஒரே இடத்தில் ஒரே மாதிரி யான  வேலையைச் செய்வது வெறுப்பாக இருக்கிறது. 


என் வாழ்வு ஒரு அர்த்தமற்ற வெற்றிடத்தை நோக்கி நகர்வது போல் இருக்கிறது.

எனக்கு நீங்கள் எந்த அளவுக்கு உதவ முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை  ஆனால் உங்களிடம் இதை ஆலோசிப்பது நல்லது என்று எனக்குத் தோன்றியது  அதனால்தான் உங்களைத் தொடர்பு கொண்டேன் என்று கூறி முடித்தான்.

அவன் கூறிய அனைத்தையும் மருத்துவர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

பின் மிஸ்டர் ரமேஷ் உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கொஞ்சம்  கூறுங்கள் என்றார்.

அவன் மறுபடியும் பேச ஆரம்பித்தான் நான் ஒரு தனியார் நிறுவனத்தில்  சேல்ஸ்  இன்ஜினியர்.என் தந்தை ஓய்வுபெற்ற அரசாங்க பணியாளர், ஒரு பட்டதாரி.

என் தாய் அதிகம் படிக்காதவர் ஒரு ஹவுஸ் வைஃப் .

என் தங்கை பன்னிரண்டாம் வகுப்பு .எங்களுக்கு ஒரு சிறிய சொந்த வீடு, தாம்பரத்தில் வசிக்கிறோம்.

இந்த ஊரடங்கு சமயத்தில் உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்று மேலும் விசாரித்தார் மருத்துவர்

அவன் சற்றே யோசித்தவாறு பதில் சொல்ல ஆரம்பித்தான் என்  தந்தை செய்தித்தாள் படிப்பதிலும் 
தொலைக்காட்சி பார்ப்பதிலும் மற்றும் தன் நண்பர்களுடன் தொலைப்பேசியில் 
பேசுவதுமாக  பொழுதைக் கழித்து  விடுவார்.

என் தங்கைக்குச் கைப்பேசி ஒன்று போதும் அதற்கே நேரம் போதாது.

என் தாயைப் பொறுத்தவரை இந்த ஊரடங்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை வழக்கம்போல வீட்டு வேலைக்கும் எங்களுக்குச் சமைத்துப்  போடுபோடுவதற்குமே அவர்களுக்கு  நேரம் சரியாக இருக்கும் என்று கூறி முடித்தான்.

அவன் கூறியதை  கேட்ட  மருத்துவர்  பேச ஆரம்பித்தார்.

மிஸ்டர் ரமேஷ் உங்கள் பிரச்சனைக்கு நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன்  அதைச் செய்து  பாருங்கள் .

அது திருப்பியளிக்கவில்லை என்றால் மறுபடியும் அடுத்த வாரம் நாம் பேசலாம்
ஆனால் நான் சொல்லுவதை நீங்கள் உண்மையாக மனதார செய்ய வேண்டும்.

சொல்லுங்கள்,நான் நிச்சயமாகச் செய்கிறேன் என்றான் ரமேஷ்

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் மிஸ்டர் ரமேஷ் உங்கள் தாயுடன் தனிமையில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும்.

குறிப்பாக ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் அதற்கு அவர் தரும் பதிலில் உங்கள் பிரச்சனைக்கான தீர்வு இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பின்பு தன் தாயிடம் என்ன பேச வேண்டும்  என்று அவனுக்கு ஆலோசனை வழங்கினார்.

அந்த ஜூம் கால் முடிந்தது.

மாடியை விட்டு இறங்கி கீழே வீட்டுக்குள் சென்றான்

அவன் தந்தை  தொலைக்காட்சி  பார்த்தபடியே உறங்கிக்கொண்டிருந்தார். அவன் தங்கை அறையில் உட்கார்ந்து உலகத்தை மறந்து கைப்பேசியில் ஏதோ செய்து கொண்டு இருந்தாள்.

தன் தாய் சமையலறையில் தனிமையில் வேலை செய்வதைக் கண்டு அங்குச் சென்று அவளிடம் பேச ஆரம்பித்தான்.

அம்மா நான் ஒரு கேள்வி கேட்பேன் நீ பதில் சொல்வாயா?

அவள் கேளுடா தெரிஞ்சா நிச்சயம் சொல்கிறேன் என்றாள்

தினம் தினம் இந்த வீட்டில் எங்கள் எல்லோருக்கும்  செய்ததையே திரும்பத் திரும்ப செய்து கொண்டு இருக்கிறாய் உனக்குச் சலிப்பு ஏற்பட வில்லையா? உனக்கு இது வெறுப்பை உண்டாக்கவில்லை? சட்டென்று கேட்டுவிட்டான்

என்னடா ஆச்சு உனக்கு இன்றைக்கு 
இதற்குத் தான் கண்ட கண்ட புத்தகத்தையும் படிக்கக் கூடாது என்றாள்

இல்லம்மா எனக்கு இது தெரியவேண்டும்  நீ பதில் சொல்லியே  ஆகவேண்டும்  என்றான் விடாப்பிடியாக

அந்தத் தாய் அவனைப் பார்த்துச் சிரித்தவாறே கூறினாள் உண்மையான அன்பு எங்கிருக்கிறதோ / எதில் இருக்கிறதோ அங்குச் சலிப்பு கிடையாது வெறுப்பு கிடையாது.

சூரியன் ஒருபோதும் ஒளி பரப்புவதை நிறுத்துவதில்லை ஏனென்றால் பிரகாசிப்பது சூரியனின் இயல்பு.

அதுபோல் அன்பை உன் இயல்பாக வைத்துக் கொண்டால் சலிப்பும் வெறுப்பும் ஒருபொழுதும் ஏற்படாது என்று கூறி முடித்தாள்.

அவனுக்கு விடை கிடைத்தது தன் தாயை அணைத்து  ஒரு முத்தம் கொடுத்தான்.

முதல்முறையாக இந்த ஊரடங்கு கட்டுப்பாடு மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் .

தன் தாயுடன் அதிக நேரம் செலவழிக்க, வீட்டு வேலைகளில் அவளுக்கு தினம் தினம் உதவ முடிவெடுத்தான்.

அவனுக்கு ஒரு புது உற்சாகம் பிறந்தது. அவன் எதர்ச்சையாக அன்றைய தேதியை பார்க்க அது அன்னையர் தினம்.

அவனுக்கோ அது மறக்க முடியாத தினம்.

http://www.thirans.blog

2 thoughts on “உன் தாயிடம் கேள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s