
அந்தக் கூட்டம் ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. அவன் அந்த அரங்குக்குள் நுழைந்தான். அரங்கம் நிறைந்திருந்தது.
மெதுவாக நடந்து பின்வரிசையில் ஒரு இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான். தன் பையிலிருந்த நோட் புக்கை எடுத்தான் பேனாவை திறந்து அதில் எழுதிப் பார்த்தான், குறிப்புகள் எடுக்கத் தயாரானான்.
கூட்டம் ஆரம்பித்தது பலர் பேசினார்கள்.
சிறப்புரையாற்ற வந்த ஒரு பேராசிரியர் தமிழில்தான் பேசினார் ஆனால் நடுநடுவே சரளமாக ஆங்கிலத்தில் சில கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
அவனுக்கு ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது அங்கிருந்த பலருக்கு அந்தப் பேராசிரியர் ஆங்கிலத்தில் பேசியது புரிந்திருக்க வாய்ப்பில்லை என்று.
கடைசியாக ஒருவர் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது. எல்லோரும் கலைந்து செல்ல அவன் மட்டும் வெகு நேரம் அங்கு அமர்ந்து தன் குறிப்புகளை
அலசிக்கொண்டிருந்தான்.
ஒரு விஷயம் அவனுக்குத் தெளிவாகத் புரிந்தது.
கூட்டத்தில் ஒரு சிலர் பேச்சாளர்களின் பேச்சை ரசித்து கைத்தட்டினால்
பெரும்பாலானோர் புரிகிறதோ இல்லையோ அவர்களும் சேர்ந்து கைத்தட்டி விடுகிறார்கள்.
ஊரோடு ஒத்துப் போகிற மனோபாவத்தை தான் பலர் விரும்புகிறார்கள்.
இப்படியிருக்க பெரும்பாலான மக்கள் முட்டாள்தனமான ஒன்றை ஏற்றுக் கொண்டாள் அது சரி என்று ஆகிவிடுமா ? என்று யோசித்தவாறு அந்த அரங்கை விட்டு நடக்க ஆரம்பித்தான்.