
ராணி தன் வேலை முடிந்து வீட்டுக்கு வருகையில் ரோட்டில் பார்த்த அந்தக் face கிரீம் விளம்பரம் அவளைச் சஞ்சலப் படுத்தியது.
வீட்டுக்கு வந்தவுடன் அவள் தன்னை பல முறை கண்ணாடியில் பார்த்தாள். தன் கருப்பு நிறத்தைப் பார்க்கப் பார்க்க அது அவளை உறுத்தியது.
அடுத்த நாள் முதல் அந்த கிரீமை வாங்கி தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்தாள் அதைச் செயல்படுத்தினாள். அந்த விளம்பரம் அவளுக்கு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்தது.
அவ்வாறு ஒரு வருடம் உருண்டோடியது.
அன்று அவள் அலுவலகத்திற்குப் பணி நிபந்தமாக வெளிநாட்டிலிருந்து ஒரு குழு வந்தது. அதிலிருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண், ராணியை அழைத்துத் தன்னுடன் சேர்த்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டாள்.
அத்தனை பேர் இருக்க தன்னுடன் மட்டும் ஏன் இவள் செல்பி எடுத்தாள் என்று தன் மனதுக்குள் குழம்ப நேரே சென்று அவளிடமே கேட்டு விட்டாள் ராணி.
அந்த வெள்ளைக்கார பெண் சிரித்த முகத்துடன் சாந்தமாகப் பதிலளித்தாள். எனக்கு உன்னை மாதிரி கருப்பா இருக்கவேண்டும் என்று நிறைய ஆசை.
நீ மிகவும் அழகாக இருக்கிறாய் அதனால்தான் உன்னுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டேன் என்றாள்.
அதை கேட்ட ராணிக்கு ரொம்ப சந்தோஷம் அந்த வெள்ளைக்காரியின் வார்த்தைகள் அந்தக் கிரீமை விட அவளுக்கு அதிக நம்பிக்கையை அளித்தது .
அன்று வீடு திரும்பியவுடன் கண்ணாடியில் பார்த்தபோது முதல் முறையாக அவளுக்கே அவள் அழகாகத் தெரிந்தாள். அதற்குப் பிறகு அவள் அந்த கிரீம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டாள்.
வார்த்தைகள் ஒருவரின் நம்பிக்கைகளை மாற்றும் சக்தி உடையது.