
வெற்றி தோல்வி
ஒரு மாபெரும் நடிகனாக வேண்டும் என்ற அவன் கனவு அன்று சிதைந்தது. ஐந்து வருடம் கடுமையாக முயற்சித்தும் எந்தப் பலனும் அவனுக்குக் கிடைக்கவில்லை.
மிகவும் மனம் நொந்து அந்தப் பெரியவரைப் பார்க்கச் சென்றான். அவரிடம் தன் மன வேதனையைக் கூறினான். ஐயா என்னை விடத் திறமை மிகக்குறைந்த அந்தப் பால் சிங் இன்று ஒரு முன்னணி நடிகன், ஆனால் எனக்கோ ஒரு வாய்ப்பு கூட இந்த ஐந்து வருடத்தில் கிடைக்கவில்லை என்று புலம்பினான்.
அந்தப் பெரியவர் பொறுமையாகப் பேச ஆரம்பித்தார் நீ ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் உன்னைவிட மிகத் திறமையான பலர் கடுமையாக உழைத்தும், முயற்சி செய்தும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தோல்வியுற்று உள்ளனர்.
பல ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகராகும் முயற்சியில் வெற்றி பெறுகிறார் மற்றவரெல்லாம் தோல்வி அடைகின்றனர். முயற்சி செய்த அனைவரும் வெற்றி பெற்றதற்கான ஆதாரக்கூறு எந்தத் துறையிலும் இதுவரை இருந்ததில்லை.
இது கசக்கும் ஆனால் இதுதான் உண்மை.
இதைப் புரிந்து கொண்டால் உனக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
அன்று அவனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது.
ஒரு வருடம் கழித்து அவன் இயக்கிய முதல் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.