
அவன் கடவுளைக் கண்டான்.
அவரைப்பார்த்து நிதானமாகக் கேட்டான், ” நீங்கள் அனேகம் பேர் இவ்வுலகில் இருந்தும் ஏன் இத்தனை துன்பங்கள், எத்தனை கஷ்டங்கள்?” என்று.
கடவுள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்
பிறகு அவர் ஒரு கேள்வியை எழுப்பினார். ” இவ்வுலகில் எண்ணிலடங்கா துன்பம் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் எவ்வாறு மனிதன் அதை எல்லாம் கடந்து வாழ்கிறான்?”
கடவுள்மேல் உள்ள நம்பிக்கையால் அது சாத்தியமாகிறது என்றான் அவன்.
நம்பிக்கையா ? அல்லது கடவுள்மேல் நம்பிக்கையா ? என்று கேட்டார் கடவுள்
அவன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான்…..
தங்கராஜ் அப்புத்தகத்தைப் படிப்பதை நிறுத்திவிட்டு அவனும் கேள்விக்கான பதிலைப் பற்றிச் சிந்திக்கலானான்.
இதனால் தான் அவனுக்குப் புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும். அது அவனைச் சிந்திக்க வைக்கும். எழுத்தாளர்களின் அனுபவங்களில் இருந்தும் அதில் வரும் சம்பவங்களில் இருந்தும் அவனுக்கு நிறைய படிப்பினையும் தெளிவும் கிடைக்கும்.
இரவு வெகுநேரம் ஆகியும் தங்கராஜ்
அந்தக் கேள்விக்கான பதிலைச் சிந்தித்துக் கொண்டிருக்க அவனுக்குத் தூக்கம் வந்தது அவன் அப்படியே தூங்கிவிட்டான்.
அந்தக் கேள்விக்கு விடை கிடைக்குமா அவனுக்கு? அது தெரியாது.
ஆனால் அந்த புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பு இருந்ததைவிட படித்துச் சிந்திக்கத் தொடங்கியபின் அவன் மனம் விரிவடையும், பக்குவப்படும், இனி எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க அவனை தயார்ப்படுத்தும்- இது நிச்சயம்.
அவன் நாளை வேறொரு புத்தகம் படிப்பான் வேறு சிந்தனையில் மூழ்கு வான்- இதுவும் நிச்சயம்.