பணம் மனித வாழ்வின் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஒன்றாகத் தான் முதலில் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது பல பரிமாணங்களை எடுத்து அதுதான் வாழ்க்கை என்றானது.
அதை முயன்று அளவுக்கு ஈட்டுவதே வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்று ஆனது.
நாம் இருக்கும் உலகம் பணத்தால் ஆளப்படுகிறது.பெரும்பாலோனோர் பணத்திற்காக ஏங்குகிறார்கள். பணத்தினால் எதையும் வாங்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த உலகத்தையே ஆள முயல்கிறார்கள் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்.
அத்தகைய உலகில் இரண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் எங்கோ பிறந்து வளர்ந்து அவ்விருவரும் சென்னையில் ஒரே கல்லூரியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
மிக நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பல விஷயங்களைப் பற்றி நிறையப் பேசினார்கள், சிரித்தார்கள், அந்த ஊரை முழுவதுமாய் சேர்ந்தே சுற்றினார்கள்.
‘இவன் துணியை அவன் போட அவன் துணியை இவன் போட, இருவரும் ஒரே பிரஷ்ல் பல் துவக்க என்று காலம் நகர்ந்து.
ஒரு வழியாக இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் பட்டத்தைப் பெற்றார்கள்.
ஒருவன் ராமச்சந்திரன் இன்னொருவன் பார்த்திபன்.அவர்கள் நட்பைப் பார்த்து அந்த ஊரே வியந்தது.
படிப்பு முடித்தவுடனே அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினர். அது ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனி. அதற்கு அமல் கம்ப்யூட்டிங் என்று பெயர் சூட்டினார்கள்.
அது என்ன அமல் என்று பலர் கேட்க அமல் என்றால் செழிப்பு என்று ஒரு பொருள் உண்டு விளக்கினார்கள்.
அந்தப் பெயருக்கு ஏற்ப அவர்களுடைய கம்பெனி இரண்டு வருடங்களில் மிக நன்றாக வளர்ந்து பிற மாநிலங்களில் விரிவுபடுத்தும் நிலைக்குச் சென்றது.
கம்பெனி பெரிதாகப் பெரிதாக இருவரும் தங்களுக்குள் அதன் நிர்வாகப் பொறுப்பினை பிரித்துக் கொண்டனர்.
ராமச்சந்திரன் டெக்னிக்கல் விஷயங்களைக் கவனிக்க பார்த்திபன் நிதி சம்பந்தப்பட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான்.
பணம் சேர சேர ராமச்சந்திரனின் வாழ்வில் பல மாற்றங்கள் தெரிந்தன. பெரிய இடத்துத் தொடர்புகள் புதிய நட்புகள் அவன் பாதையைச் சற்று மாற்றின. செல்லும் வழி முக்கியமல்ல சேர்க்கும் பணம் தான் முக்கியம் என்று செல்ல ஆரம்பித்தான். தொழிலில் கவனம் குறைந்தது. குறுக்கு வழியில் எப்படிப் பணம் சம்பாதிப்பது என்று சிந்திக்கலானான்.
பார்த்திபன் பலமுறை நல்லது எது என்று எடுத்துச் சொல்லியும் அதைக் காதில் அவன் வாங்கிக் கொள்ளவில்லை. மேலும் பார்த்திபன் அந்தக் கம்பெனியின் லாபத்தில் 10% யைப்பொதுநல சேவைக்காகச் செலவிடுவது ராமச்சந்திரனுக்கு அறவே பிடிக்கவில்லை.
அவர்கள் நட்பு விரிசல் விடத் தொடங்கியது.இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பார்த்திபன் அந்தப் பிசினஸ் பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகுவது என்று முடிவு செய்தான். அதை ராமச்சந்திரனிடம் தெரிவிக்க பார்த்திபன் பங்குகளை அவனே வாங்கிக் கொள்வதாகக் கூறி ஒப்பந்தம் தயார் செய்து பார்த்திபன் பங்கிற்கான பணத்தையும் கொடுத்து விட்டான். மனஸ்தாபங்கள் இருந்தாலும் இருவரும் சுமுகமாகவே பிரிந்தனர்.
சற்று வருத்தம் அடைந்த பார்த்திபன் நிலைமையைச் சமாளித்துக் கொண்டு அந்த நாட்டை விட்டு அமெரிக்கா சென்று தன் படிப்பைத் தொடர்ந்து அங்கேயே பிறகு குடியுரிமை பெற்று பா கம்ப்யூட்டிங் என்ற ஒரு கம்பெனியைத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றான்.
பிறகு இருவரும் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவேவில்லை அவ்வாறே 30 வருடங்கள் ஓடிவிட்டன.
முப்பது வருடங்களுக்குப் பிறகு பார்த்திபன் அவன் மகன் ஆதன் திருமண விஷயமாகச் சென்னை வர நேர்ந்தது.
ஆதன் தன்னுடன் அமெரிக்காவில் கல்லூரியில் படிக்கும் அழிசி என்ற பெண்ணைக் காதலிப்பதாகவும் அந்தப் பெண்ணின் பெற்றோர் சென்னையில் இருப்பதாகவும் அவர்களின் சம்மதம் பெறப் பார்த்திபன் சென்னை வர வேண்டும் என்று கூறியதால் இந்தப் பயணம்.
பார்த்திபன் அவன் மகன் ஆதனுடன் அழிசின் பெற்றோரைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றபோது அவனுக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது.
அழிசியின் தந்தை வேறு யாருமல்ல அவன் கல்லூரி நண்பன் ராமச்சந்திரன் தான். குடிபோதையால் உடல் நோயுற்றுப் படுத்த படுக்கையாகத் தன் வாழ்வின் இறுதி நாட்களை எதிர் நோக்கிக்கொண்டிருந்தான்.
இருவரும் சந்தித்தனர் ராமச்சந்திரன் கூனிக்குறுகி வெட்கம் அடைந்தான். பிறகு இருவரும் மனம் விட்டுப் பல மணி நேரம் பேசினார்கள். ராமச்சந்திரனின் தொழில் நஷ்டத்திலும், கவனிக்க ஆள் அற்று கஷ்டத்திலும் இருப்பதை அறிந்தான். தானே அதை வாங்கிக் கொள்வதாகவும் அதை மேலும் கவனித்துக் கொள்வதாகவும் பார்த்திபன் ராமச்சந்திரனுக்கு வாக்களித்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ராமச்சந்திரனின் கம்பெனி பார்த்திபனிடம் வந்து சேர்ந்தது. அதற்கு ஈடாக ராமச்சந்திரனுக்கு மார்க்கெட் விலையைவிட அதிகமாக ஒரு கணிசமான தொகை கொடுக்கப்பட்டது.
அந்தக் கம்பெனிக்கு அவர்களின் நட்பைக் குறிக்கும் வகையில் பாரா (பார்த்திபன் ராமச்சந்திரன்) கம்ப்யூட்டிங் என்று பெயர் மாற்றப்பட்டது.
அவன் மகனின் திருமணம் நல்லபடியாக முடிந்து பாரா கம்ப்யூட்டிங் கம்பெனியைத் தன் திருமண பரிசாகத் தன் மகன் மற்றும் மருமகளிடம் கொடுத்துவிட்டு அவன் அமெரிக்கா திரும்பத் தயாரானான்.
தான் செல்வதற்கு முன் அவன் பா கம்ப்யூட்டிங் கம்பெனியின் சார்பில் பாரதப் பிரதமர் கரோனா நிவாரண நிதிக்கு 700 கோடி தருவதாக அறிவித்து அதையும் செய்து முடித்தான்.
ராமச்சந்திரன் மற்றும் பார்த்திபன் இருவரும் சம்பாதித்தார்கள் எவ்வாறு செலவழித்தார்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் வாழ்க்கைதன்னை வடிவமைத்துக் கொண்டது.
விமான நிலையத்தில் அந்த நிருபர் உங்கள் வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்க
பார்த்திபன்
பணம் என்னிடம் முடங்கிக் கிடப்பதை நான் அனுமதிப்பதில்லை.அதை என் மூலமாகப் தேவைப்படும் பிறர்க்குத் தொடர்ந்து பயணிக்கச் செய்கிறேன்.ஆதலால் அந்த பணம் இயற்கையாகவே என்னை நோக்கி ஈர்க்கப்படுகிறது என்று கூறி விடைப் பெற்றான்