
நேரம் இரவு 10.30
அந்த ரோடு வெறிச்சோடி இருந்தது இன்றும் சுமதி தன் வேலையை முடித்து வீடு திரும்ப வழக்கத்துக்கு மாறாகத் தாமதமானது.
அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை. கரோனா பாதிப்பினால் கடந்த இரு வாரங்களாக அவளுக்கு வேலை சற்று கூடுதலாக இருந்தது. பேருந்தை விட்டு இறங்கி தன் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினாள். ஊரடங்கு சட்டத்தினால் அந்த ரோட்டில் ஆள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து மிகக் குறைந்தே இருந்தது. தெருவிளக்குகள் எரிந்தாலும் மங்கலாக இருந்ததால் போதிய வெளிச்சம் இல்லை. பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை மற்ற நாட்களிலும் அந்த இடம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மாதிரி தான் இருக்கும் ஆகையால் அந்த ரோட்டில் திருட்டு கொலை சம்பவங்கள் சற்று தாராளமாகவே தான் இருந்தது.
இன்றும் அவளை அவன் பின்தொடர்வது தெரிந்தது. அவள் நடந்தவாறே மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். தடித்த மீசையுடன் அதே இளவயது வாலிபன். இவள் பார்த்தவுடன் அவன் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான்.
கடந்த ஒரு வாரமாக அவள் வீடு திரும்பும்போது அவன் அவளைத் தொடர்வது வழக்கமாய் ஆனது. அவளுக்குச் சற்று பயம் இருந்தாலும் வேலை தந்த களைப்பினால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மேலும் பல நோயாளிகளின் மரணங்களை அருகிலிருந்து பார்த்திருப்பதால் அந்தப் பயத்தையும் மீறி அவளுக்குள் ஒரு தைரியம் இருந்தது.
ஆனால் இன்று பல சிந்தனைகள் அவள் மனதுக்குள், யார் இவன்? எதற்காக பின் தொடர்கிறான்? இவனை இதற்கு முன் எங்கும் பார்த்த ஞாபகம் இல்லையே…. என்று.
தன் நடைவேகத்தை சற்று கூட்டினாள்
அவனும் அரசு சொல்லிய சோசியல் டிஸ்டன்ஸ்சிங்கை மதித்து அதேவேகத்தில் அவளைப் பின் தொடர்ந்தான்.
இன்று என்ன நடந்தாலும் சரி அவனை எதிர் கொள்வது என்று தீர்மானித்தாள்
அவள் வேகமாக நடந்து அந்தத் தெருவின் இறுதியில் உள்ள சந்தில் திரும்பி அங்கிருந்த தெரு விளக்கின் கீழ் நின்றுகொண்டு அவன் வரக் காத்திருந்தாள்
அவனும் வேகமாக வந்து அவசரமாகத் திரும்பச் சற்றும் எதிர்பார்க்காமல் அவள் அங்கு நின்றிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்
Mr உனக்கு என்ன வேண்டும் எதற்கு என்பின் தொடர்கிறாய் என்று அவன் கண்களைப் பார்த்து நேராகக் கேட்டாள்
அவன் பேச்சு வராமல் த த ப ப என்று சொதப்பினான். சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு டக்கென்று தன் பையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அவள் அதை வாங்கி பார்க்க, அதில் ஏதோ எழுதி இருக்க அதைப் படிக்க ஆரம்பித்தாள்
டியர் சிஷ்டர்
தப்பாக நினைக்க வேண்டாம். நான் ஒரு ஊமை என்னால் பேச முடியாது ஆகையால் இந்தக் கடிதம்.
முதலில் இந்த நகரத்து மக்கள் சார்பில் உங்களுக்கும் உங்களைப் போல் சேவை புரியும் மற்ற அனைத்து செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பெரும்பாலோனோர் வீட்டில் இருக்க தன் நலத்தையும் பார்க்காமல் பிறர் நலத்திற்காக உழைக்கும் உங்களுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு காரியத்தை இந்த ஊரடங்கு உத்தரவு முடியும்வரை செய்ய நினைத்தேன்.
இந்த இடத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும் இது இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் நடமாடப் பாதுகாப்பற்றது. ஆகையால் உங்களுக்கு ஒரு பாதுகாப்புக்காகத் தினமும் உங்கள் வீடுவரை வரத் தீர்மானித்தேன்.
நீங்கள் இதைப் பற்றி எந்தப் பயமும் கொள்ள வேண்டாம்.உங்கள் சேவையைத் தொடருங்கள்.
நன்றி
சுமதிக்கு முதல்முறையாக எல்லாவற்றையும் மீறி ஒரு சக்தி இருப்பதை உணர்ந்தாள்.
அது கடவுளா அல்லது இயற்கையா என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை ஆனால் அதற்கு அந்த நிமிடமே தன் மனதிலிருந்து ஒரு நன்றியைத் தெரிவித்தாள்.