மரணமில்லா வாழ்வு

நேரியன் மிக உற்சாகமாகவும் முழு ஈடுபாட்டுடனும் தனது பேராசிரியர்
சதாசிவத்துடன் பேசிக்கொண்டிருந்தான். அவரைச் சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு பார்த்ததில் அவனுக்கு நிறையவே சந்தோஷம்.

ஏதோ அலுவல் காரணமாகச் சென்னை வந்த பேராசிரியர் இந்த முறை அவனைச் சந்திக்க அவன் வீட்டுக்கே வந்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

ஆசிரியரும் மாணவனும் பல விஷயங்களை நேரம் போவது கூடத் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பேராசிரியர் அவனிடம் விடைபெற்றுக் கிளம்பும் தருவாயில் நேரியனின் நான்கு வயது மகன் ஆரியன் அங்கு வர , பேராசிரியர் அவனைப் பார்த்துத் தம்பி என்ன சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் இந்த தாத்தாவுக்கு கொஞ்சம் குடுங்க என்று கூற ஆரியன் சற்றும் தயங்காமல் அவன் கையிலிருந்த இனிப்புப் பண்டத்திலிருந்து ஒரு மிக மிகச் சிறு துண்டைக் கிள்ளி அந்த பேராசிரியரிடம் கொடுத்தான்.

அவனுக்குக் கொடுக்க மனம் இல்லையென்றாலும் ஒரு மிகச்சிறிய துண்டை கிள்ளிக்  கொடுத்துச் சமாளித்ததைப் பார்த்து அந்தப் பேராசிரியர் மிகவும் வியந்தார்.

நீ வருங்காலத்தில் ஒரு பெரிய நானோ டெக்னாலஜிஸ்ட்டாய் வருவாய் என்று அவனை வாழ்த்தினார்.

அது என்ன நானோ டெக்னாலஜீஸ்ட் என்று அந்தப் பேராசிரியரிடம் நேரியன் வினாவினான்.

நானோ என்றால் மிக மிகச் சிறியது என்று பொருள். சிறியது என்றால் நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய அளவைவிட மிக மிக மிகச் சிறியது.

ஒரு நானோ மீட்டர் என்றால் ஒரு மீட்டரில் 100 கோடி பாகம். அது நம் ஒரு தலைமுடியை விட 100000 மடங்கு சிறியது.

இந்த உலகில் உள்ள அனைத்து பொருள்களும் அதாவது நீ, நான், இந்த நாற்காலி, இந்த தொலைக்காட்சி, இந்தக் கதவு என்று எல்லாமே அணுக்களால் ஆனதே.

அத்தகைய அணுக்குள் சென்று அதில் உள்ள பொருள்களை நம் இஷ்டப்படி மாற்றுவதுதான் நானோ டெக்னாலஜி.

ஒரு பொருளின் அணுக்கட்டத்தை மாற்றினால் அந்தப் பொருளின் இயற்கை தன்மையே மாறிவிடும்.உதாரணத்திற்குச் சாதாரண அடுப்புக்கரின் அணுக்கட்டம் மாறுவதால் தான் அது வைரம் ஆகிறது.

இந்த நானோ டெக்னாலஜி வரும் காலங்களில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.

இதை வைத்து மனிதன் மரணத்தை  வெல்லக்கூடிய ஒரு வாய்ப்பைப் பெறப் போகிறான்.

இதற்கான ஆய்வு உலகில் பல இடங்களில் இப்போதும கூட   நடந்துக் கொண்டிருக்கிறது.

நானோபோட்  என்னும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்யும் மிக மிகச் சிறிய அளவு ரோபோக்களை வடிவு அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நம் ரத்தத்திற்குள் நீச்சலடித்து சென்று உடலுக்கு எந்த  இடத்திற்கு மருந்து தேவைப்படுகிறதோ அங்கு துல்லியமாக எடுத்துச் சென்று எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் அந்த இடத்தின் குறைபாடுகளைக் குணமாக்க உதவும்.

மேலும் நம் உடம்பில் உள்ள சேதமடைந்த உயிரணுக்களைச் சரி செய்யவும் ,மாற்ற மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். இதனால் மனிதன் எப்பொழுதும் நல்ல ஆரோக்கியத்துடனும் உடல் உறுதியுடனும் வாழ முடியும் என்று விரிவாக விளக்கினார் பேராசிரியர்.

இது எல்லாம் எப்பொழுது நடைமுறைக்குச் சாத்தியமாகும் என்று நேரியன் அவரிடம் கேட்டான்.

இன்னும் 40- 50 வருடங்கள் ஆகலாம். உனக்குக் கிடைக்குமா என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியாது ஆனால் உன் மகன் ஆரியனுக்கு நிச்சயமாக மரணமில்லா வாழ்வு உண்டு என்று வாழ்த்தி அந்தப் பேராசிரியர் விடை பெற்றார்.  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s