
அமைதியான இரவு நேரம் தவளைகள் சத்தம் மற்றும் வெகு தொலைவில் ஒரு குதிரை வண்டியின் சத்தத்தைத் தவிர அவனுக்கு வேறொன்றும் கேட்கவில்லை.
அந்த ரோட்டின் இரு பக்கங்களிலும் மரங்கள், நிலா வெளிச்சம் மற்றும் அருமையான காற்று. தன் வாழ்க்கையைப் பற்றி எண்ணியவாறே அவன் நடக்கலானான்.
அவன் வாழ்க்கையைச் சற்று திரும்பிப் பார்த்தான். 40 வருடங்கள் ஒரு நொடிபோல் கடந்துவிட்டது.அவனுடைய ஏனைய வாழ்வும் அதுபோல் கடந்துவிடும் என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
தன் 40 வருட வாழ்வில் எதையோ ஒன்றைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தான்.
என் வாழ்வின் நோக்கம் என்ன ? அதன் குறிக்கோள் என்ன ? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
எதுவும் நிரந்தரம் இல்லை என்ற உண்மை தெளிவாகத் தெரிந்தாலும் அதை ஏற்க அவன் மனம் மறுத்தது.
“நாம் வாழ்வதற்கு நிறையப் பொய்கள் தேவைப்படுகிறது.”
எங்கோ அவன் நீட்சே எழுதியதைப் படித்தது ஞாபகத்துக்கு வந்தது.
ஆம் பொய்கள் பளபளப்பாகவே இருக்கின்றன என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்.
அவன் மனதில் சில கேள்விகள் எழுந்தன உண்மையான வாழ்வு எப்படி இருக்கும்? அப்படி ஒன்று உண்டா?
நிறையப் பேர் வாழ்க்கையைப் பற்றி நிறைய விஷயங்களைக் கூறியிருக்கின்றனர் அதில் எதை எடுத்துக் கொள்வது சற்று குழம்பினான்.
இந்தச் சிந்தனைகளுடன் அவன் வெகுதூரம் நடந்து வந்து விட்டான். களைப்பாக இருந்தது அங்குள்ள ஒரு மரத்தின் கீழ் சற்று ஓய்வெடுக்க முடிவு செய்தான். தன் கண்களை மூடியபடியே அமர்ந்தான்.
அமைதியைத் தவிர வேறொன்றுமில்லை முதல்முறையாகத் தன் வாழ்வில் அப்படியொரு சூழ்நிலையிலிருந்தான். வெகுநேரம் அப்படியே இருந்துவிட்டான்.குளிர்ந்த தென்றலுடன் சூரிய ஒளி அவன்மேல் பட ஆரம்பித்தது.திடீரென்று அவன் முகத்தில் ஒரு சந்தோஷம். எதையோ கண்டுபிடித்துப் புரிந்து கொண்ட சந்தோஷம்.
அவனுள் எழுந்தது ஒரு குரல்…
வாழ்க்கையின் சாரத்தை நீ உன் சொந்த அனுபவங்களிலிருந்து தான் அறிந்து கொள்ள முடியும், புரிந்து கொள்ள முடியும். உன் உள்மனத்தை விடாது கேள் அது சொல்லும் உன் வாழ்வின் நோக்கம் என்னவென்று.
தெரியவில்லை என்றால் ஒரு நோக்கத்தை, ஒரு குறிக்கோளை நீயே நிர்ணயித்து அதை நோக்கிப் பயணம் செய்.
உன்னுடைய செயல்கள் தான் உனக்கு வாழ்க்கையில் தண்டனைகளையும், வெகுமதிகளை, அதிருப்திகளையும், திருப்தி களையும் அளிக்கின்றது. நீதான் உன் விதியின் எசமான்.
குரல் நின்றது மௌனம் தொடர்ந்தது.
அவன் உற்சாகம் அடைந்து
இனி ஒவ்வொரு நொடியையும் முழு கவனத்துடன் வாழ்வை எதிர்கொள்வேன் அதன் அனுபவங்களிலிருந்து நான் பெறும் அறிதல் மற்றும் புரிதலை வைத்து வாழ்க்கையின் சாரத்தைத் தெரிந்து கொள்வேன். என் வாழ்வின் நோக்கத்தைத் தேடுவதில் நேரத்தைச் செலவழிக்காமல் எனக்கென்று ஒரு நோக்கத்தை நானே உருவாக்கிக் கொண்டு அதை நோக்கிப் பயணிக்கப் போகிறேன் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு தன் பயணத்தைத் தொடங்க தயாரானான்.
அவனுக்கே அவன் ஒரு புதியவனாய் தோன்றினான். அவன் நடையில் ஒரு புதிய வேகமும் அவன் சிந்தனையில் ஒரு தெளிவும் இருந்தது.
அவன் ஓய்வுக்காக அமர்ந்தது ஒரு போதி மரத்தின் கீழா?